Sunday, August 15, 2010

சுதந்திர நாளில் I.T இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மனிதாபிமானம் விலை போகாத நிலையில், பணம் மட்டுமே பிரதானம் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், சுதந்திர தினம் போன்ற சில விழாக்களில் தான் மக்களுக்குப் பொது நலம் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. அப்படி நம்பி என்னைப் போன்று IT துறையில் சம்பாதிக்கும் உங்களிடம் நான் வைக்கப் போவது ஒரு வேண்டுகோள்.

பெரும்பான்மையாக இன்று IT துறையில் வெற்றிக்கரமாக உள்ளவர்கள், ஏதேனும் ஒரு அரசினர் அல்லது அரசு உதவி பெறும் தனியார் பொறியியற் கல்லூரியில் தான் படித்து இருப்பர். அப்படி படித்து, கல்லூரியில் இருந்தே வேலை கிடைத்து, படிப்பு முடிந்த அடுத்த மாதமே 10,000க்கும் மேலாக சம்பாதித்து வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று, இப்போதைக்கு ஓரளவுக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பர். கண்டிப்பாக இதில் உங்கள் உழைப்பு அடங்கியுள்ளது. ஆனால்  இந்த வெற்றிக்கு நாம் மட்டுமே முழுக் காரணம் ஆகிவிட முடியாது. நாம் படிக்கும் போது அரசு நமக்காக கட்டணங்களைக் குறைத்து, வ்சதிகளைச் செய்து கொடுத்ததும் ஒரு காரணம். அதற்கு நாம் ஏதாவது ஒரு வகையில் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?

அது மட்டுமில்லை, இன்று IT துறையினரால் சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, ஆட்டோ வாடகை, பள்ளி கட்டணம் போன்ற அத்தியவாசிய தேவைகள் அளவுக்கு அதிகமாக விலை கூடி விட்டன. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கக் கூடிய நம்மைப் போன்றவர்களால், நடுத்தர மக்கள் படும் அவதி மிக அதிகம். இதனால், நம் மீது மிகுந்த கடுப்பில் (சென்னை மொழியில் சொல்வதென்றால் காண்டு) இருக்கின்றனர். ஆட்டோகாரர்கள் கூட "அது தான் 50000 வாங்குறீங்க லா சார், 10 20 எல்லாம் பாக்காதீங்க" என்று தான் சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விலைவாசி உயர்வினால் கல்வி ஒரு காஸ்ட்லி பொருள் ஆகி கொண்டே வருகிறது. இதற்கு மறைமுகமாக நாமும் ஒரு காரணம். 

இந்த நிலையைத் திருத்துவதோ, மக்களிடம் மனமாற்றம் கொண்டு வருவதோ, அந்நியன், இந்தியன் படத்தில் வருவதில் போல் அடித்து மரணபயத்தினால் புரட்சி ஏற்படுத்துவதோ முடியாத காரியம்.  ஆனால் ந்ம்மால் முடியும் காரியம் ஒன்று உள்ளது. அது கல்விக்கு உதவுவது. 

எல்லார்க்கும் கல்வி என்பது பேச்சளவில் தான் உள்ளது இந்தியாவில். அது நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. ஆனால், கல்வி உதவி கேட்டு கிடைக்காமல், படிப்பை நிறுத்தும் மாணவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்கும் நியாயமாகப் பார்த்தால் அரசு உதவி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், அதிக மார்க் எடுத்து, அரசு கல்லூரியில் படித்தால் மட்டுமே உதவி எளிதாக கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் அரசு கல்லூரியில் படிக்க முடியாதே!! 

பிற கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள், படிப்பைத் தொடர முடியாத நிலை பல மாணவர்களுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் போகும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவுவது நம்மால் முடியும் காரியம், அதோடு நமக்கு கல்வியைக் குறைந்த கட்டணத்தில் அளித்த அரசிற்கும், அதன் மக்களுக்கும் நாம் செய்யக் கூடிய நன்றிக்கடன். ஒரு வகையில் இது ஒரு இந்திய குடிமகனாக நம் கடமையாகும்.

இந்த சுதந்திர நாளில் நாம் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒரு ஏழை மாணவனின் கல்விக்காவது ஒவ்வொரு வருடமும் நாம் உதவி செய்ய வேண்டும். அப்படி ஒரு மாணவனின் தொடர்பு எனக்கு கிடைக்கவில்லை என்று சமாதானம் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இந்த வருடத்தில் உங்களிடமிருந்து உதவி ஒரு ஏழை மாணவனுக்குச் சென்றடைய வேண்டும்.  I.Tயில் இருக்கும் உங்களுக்கு வருட முடிவில் goalsக்கு எதிராக appraisal இருப்பது போல் இந்த உறுதிமொழி உங்கள் மனிதாபிமானத்திற்கு நீங்கள் set பண்ணிக் கொண்டிருக்கும் கோல். அடுத்த ஆகஸ்ட் 15ல் இதற்கு ஒரு appraisal வைத்து கொள்வோம்.

இதுவே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.

பி.கு: நீங்கள் எவ்வளவு தேடியும் ஒரு ஏழை மாணவன் கிடைக்க வில்லையென்றால், என்னை அணுகவும்.

Thursday, August 12, 2010

என் அப்பாவின் 60வது பிறந்த நாளின் (ஆகஸ்ட் 5 2010) போது நான் எழுதியது!!

அறுபது வயதைத் தொடும் என்
ஆதர்ச நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அயல் நாடுகளிலும் தேட வேண்டாம்
அருகாமையிலும் தேட வேண்டாம்
என் இல்லத்திலேயே எனக்கு கிடைத்த
எடுத்துக்காட்டு தலைவர் நீங்கள்!

உங்கள் உயர்ந்த உள்ளம் தந்த
ஊக்கத்தினால் தழைத்த வாழ்வு என்னுடையது!
என் வாழ்க்கையின் வழிகாட்டி நீங்கள்!

அன்பை அன்னையிடமும், அறிவை தந்தையிடமும்
கேட்ட தமிழ் மரபை மீறி,
என் வாழ்வின் மொத்ததிற்கும் அடிக்கோடிட்ட
என் பெற்றோரை விட
உயர்ந்த கடவுள் உண்டா?

Friday, August 06, 2010

நான் ஏன் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கிறேன்?

அண்மைக் கால தமிழகத்துச் செய்திகளைப் படிப்பவர்களுக்கு இதை நான் ஒன்றும் சொல்ல தேவையிருக்காது. கருணாநிதியைத் திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று கருணாநிதியும் மாறி மாறி தங்கள் சொத்து இரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் சண்டை போட்டு கொள்வதின் சாராம்சம் தான் என்ன? அது உணர்த்துவது என்ன? இருவரிடமும் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. மாற்றி மாற்றி அது எப்படி உனக்கு வந்தது என்றுக் கேட்டு அசிங்கப்படுத்திக் கொள்கினறனர். 

கருணாநிதியின் குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். நான் சொல்லி தெரிவதற்கு ஒன்றும் இல்லை. மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், அவர்களின் குடும்பங்கள் அனைத்தும் இன்னும் ஒரு தலைமுறைக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், வெறுமனே படுத்து தூங்கினாலும் கவலையில்லை. எல்லாருக்கும் ஒரு பெரும் வருமானம் ஈட்டும் தொழில் இருக்கிறது.

ஜெயலலிதாவைச் சுற்றி சொத்துக்குவிப்பு வழக்குகள் தான் உள்ளன. பிறந்த நாள் பரிசு, Lexus கார் வாங்கியதில் வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என எண்ணிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில், 1950 - 70 களில் வாழ்ந்த தலைவர்கள் போதித்த எளிமை இவர்களிடம் எங்கு போனது? அதைத் தானே அரசியலில் ஈடுபடுவதற்குத் தகுதியாக வைத்து இருந்தனர். ஆனால், யாரேனும் ஒரு தலைவர் திமுகவிலோ, அதிமுகவிலோ நம்மால் இன்று காண்பிக்க முடியுமா? முடியாது. அவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று இன்றைய மக்கள் நினைக்கவில்லை. எங்களுக்கு என்ன இலாபம் என்று தான் மக்கள் பார்க்கின்றனர். அதனால் கலர் டிவி தருகிறேன், இலவச நிலம் தருகிறேன், ஓட்டுக்கு பணம் என்று ஆட்சிக்கு வர முடிகிறது. நீங்கள் எவ்வளவு நாளும் அடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு கொஞ்சம் பங்கு தந்து விடுங்கள் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது.

ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும் எளிமையாகத் தான் இருக்கின்றனர். அண்மையில் கோவை இரயிலில் சென்ற போது, தா.பாண்டியன் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அமைதியாக பயணம் செய்து, தனியாக இறங்கிச் சென்றதைப் பார்த்தேன். தா.பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர். திமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஒரு MLA இப்படி போவாரா? இரயிலில் பயணம் செய்யும் போது ஒரு கூட்டமும், இறங்கியதும் வரவேற்க தாரை தப்பட்டையுடன் ஒரு கூட்டமும் அல்லவா இருந்திருக்கும்?

இதுப் போக, அண்மையில் இறந்து போனாரே ஜோதி பாசு, அவர் தன் உடலுறுப்புக்களைப் பல வருடங்களுக்கு முன்னரே தானம் செய்து விட்டு அமைதியாக இருந்து விட்டு இறந்தும் போய் விட்டார். ஆனால் இங்கோ,ஸ்டாலின் உடலுறுப்புக்களைத் தானம் செய்ததை எல்லா பத்திரிக்கையிலும் போட்டு விளம்பரபடுத்தியுள்ளனர். நல்ல வேளை கருணாநிதி செய்ய வில்லை. செய்து இருந்தால் நாம் "தர்மத்தின் தலைவனுக்குப் பாராட்டு விழா" என்ற நிகழ்ச்சி பார்த்து இருப்போம் ரஜினி கமலின் பாராட்டுக்களோடு..

கருணாநிதி தன் வீட்டைத் தன் காலத்திற்குப் பிறகு இலவச மருத்துவமனையாக்க அறக்கட்டளை எல்லாம் அமைத்தார் என்பதற்காகப்  பாராட்டு விழா எல்லாம் நடத்திக் கொண்டிருந்த போது, ஆனந்த விகடன் பிற மாநில முதல்வர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்று பார்த்தது. கம்யூனிஸ்ட் ஆளும் திரிபுரா மாநில முதல்வர், மாணிக் சர்க்கார், வீட்டு வசதித் துறை கொடுத்துள்ள வீட்டில் வாழ்கிறார் என்று அறிந்தேன். இது எப்படி இருக்கு?

அது மட்டுமல்ல, அண்மையில் நடந்த கம்யூனிஸ்ட் அழைத்த பெட்ரோலிய பொருட்கள் விலை  உயர்வை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், மக்கள் இடையூறைத் தவிர்க்கும் பொருட்டு திரிபுரா அரசு பங்கு பெற வில்லை. கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்காக மாணிக் சர்க்காரை ஒன்றும் கூறவில்லை. இந்த மாதிரி காங்கிரஸ் அல்லது பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடக்க முடியுமா?

தமிழகத்தில் எந்த  கம்யூனிஸ்ட் MLA மீதாவது ஒரு ஊழல் வழக்கு உள்ளதா? தேர்தல் இலாபத்திற்காக, தா.பாண்டியன் மீது திமுக போட்ட வழக்கு என்னவாயிற்று என்று கருணாநிதிக்குத் தான் தெரியும்.

எளிமையும் சொத்து சேர்ப்பதில் ஆசையும் இல்லாத தலைவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். அவர்களே இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட முடியும். சொத்து சேர்க்கும் தலைவர்களுக்கு அடியில் இருக்கும் தொண்டர்கள், தலைவர்களானதும் சொத்து சேர்ப்பதை ம்ட்டுமே யோசிப்பர், நாடும் முன்னேற்றமும் இரண்டாம் மூன்றாம் பட்சம் தான்.

காலத்தினால் வென்ற தலைவர்களிடம் (காமராஜர், கக்கன், பெரியார், காந்தி...) எல்லாம் இருந்த ஒரே குணம் எளிமையும் நேர்மையும். எளிமையாக இருக்க பழகிக் கொண்டால் நேர்மை தானாக வ்ரும். நேர்மை இருந்தால் நாடு முன்னேறும். இந்த இரு குணங்கள் இல்லாமல் அரசியலில் இருக்கும் தலைவர்களினால் நாடு பின்னேற்றம் மட்டுமே அடையும். முன்னேற்றம் அல்ல. 

இன்றைய காலக்கட்டத்தில் இந்த இரு குணங்கள் உடைய தலைவர்கள் அதிகம் உடைய கட்சியைக் கண்டுபிடித்து வாக்களியுங்கள். நீங்களும் என்னைப் போல கம்யூனிஸ்ட்களை ஆதரிப்பீர்கள்.