Saturday, December 26, 2009

தலைப்பில்லை (ஆனால் பிரிவுண்டு)

"அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. "

கயத்தாரில் இருந்து நாகர்கோவிலுக்கு அப்பாவின் பணி மாற்றம் காரணமாக பள்ளி மாறிய போது, பிரிவு என்றால் என்னவென்றே தெரியாது. நாகர்கோவிலில் 2 முதல் 9 பாதி வரை படித்து விட்டு மீண்டும் அப்பாவின் பணி மாற்றம் என்னைத் திருநெல்வேலி கொண்டு வந்தது. அப்பொழுதும் கண்ணீர் வரவில்லை. ஆனால் கண்டிப்பாக கவலையானேன். என் நண்பர்களான தேனு (தேனப்பன்), அபினவ், ஹரிஷ், ஸ்ரீராம், சந்தியா, Jaffrin (இந்த பெயரைத் தமிழில் எழுதினால் கண்டிப்பாக நான் நினைத்த மாதிரி நீங்கள் வாசிக்க மாட்டீர்கள் :) ), சுமி போன்றவர்களைப் பிரிய மிகவும் கவலைப்பட்டேன். ஆனாலும் அந்த கவலை மனதுக்குள்ளே மட்டும் தான் இருந்தது. திருநெல்வேலி சென்ற பின்னர், கடிதங்கள் எழுதி எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரி முடியும் வரை அந்த கடிதங்களை நான் வைத்தும் இருந்தேன். :)

9-12 வகுப்புகள் திருநெல்வேலியில். கல்லூரி கோவையில். என் கூடவே கிரிக்கெட் விளையாடிய மற்றும் படித்த நெருக்கமான நண்பர்கள் (அருணாச்சலம், பாலா, திருஞானம், பிரேம், கார்த்திக்) யாரும் கோவை வரவில்லை. மீண்டும் பிரிவு. ஆனால் இந்த முறை அப்பா அம்மா அக்காவையும் பிரிய வேண்டுமே!! நன்றாக ஞாபகம் இருக்கிறது. திருநெல்வேலியில் வீட்டில் sofa பக்கத்தில் இருந்துக் கொண்டே நான் Aristocrat (புதிதாக அப்பா வாங்கி கொடுத்தார்கள்) பெட்டியில் துணி எடுத்து வைத்து கொண்டிருந்தேன். இந்த தடவை கண்கள் பனித்தது. கண்ணீர் வந்தது. அப்பொழுது தான் தெரிந்தது பிரிவு என்றால் என்னவென்று. என் குடும்பத்தினர் மீது நான் வைத்து இருந்த அன்பும்..

பின் கல்லூரி பிரிவு. கோவை இரயில் நிலையத்தில் நான், பிரேம், ஜெய், விஜே, லான்சர், ஆர்த்தி, இந்திரா அழுதுக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு வந்தது போலவே, அலுவலகத்திலும் என் நெருங்கிய நண்பர்கள் யாரும் என் கூட வரவில்லை லான்சரைத் தவிர. மீண்டும் பிரிவு.. அலுவலகப் பணி காரணமாகவும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் என்னைப் பிரிவுக் சோகத்தில் இருந்து பிரித்தது. எனினும் கவலையுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் அந்த பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று. அந்த மின்னஞ்சல் இன்னும் இருக்கிறது என்னுடைய தொகுப்பில்.

61/2 வருடங்கள் ஆகிவிட்டது பிரிவைச் சந்தித்து..

அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. மனிதர்கள் முக்கால் வாசி தப்புக் கணக்கு தான் போடுகிறார்கள் கஜினி நயன்தாரா போல். (கஜினி பார்த்துக்கொண்டே எழுதுவதால் இந்த உவமை :) )

கடைசியாக 23 DEC 2009 ப்ரவீன், கெளசல்யா, (காயத்ரி பார்க்க வில்லை ஊருக்கு போயிருப்பதால்) ரபீக்கைப் பார்த்து விட்டு வந்ததோடு முடிந்தது என் TCS வாழ்க்கை.. அன்று இரவு தான் 61/2 வருடங்கள் சந்திக்காத பிரிவுச் சோகம் என்னைத் தாக்கியது.. உணர்ந்தேன் நாளை TCS 5 மாடியில் உணவில்லை.. அங்குள்ள மேசைகளில் அமர்ந்து கதை பேச முடியாது. அடுத்த கம்பெனி போனாலும் மேசை தான் இருக்கும். ரபீக், காயத்ரி, கெளசல்யா,தீபா,ப்ரவீன் இருக்க மாட்டார்கள்.. ஆறுவோடு கீழே போய் டீ கிடையாது.. கமல் ஜெகன் இடத்திற்கு போய் TCSல் என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல் கிடையாது.. கிருபாவிடம் பேசுவதற்கு TCS சம்பந்தமான விடயங்கள் இருக்காது.. கேண்டீன் நிர்வாகத்தோடு சண்டைகள் இனிமே இல்லை (யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பாலிமர் மக்கள் கண்டிப்பாக). இவை யாவும் யோசிக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.. ஆனால் என்ன பண்ணுவது?

பள்ளி நண்பர்களைப் பிரிந்ததால் தான் கல்லூரி நண்பர்கள் கிடைத்தார்கள், B.E. பட்டம் கிடைத்தது.. கல்லூரியைப் பிரிந்ததால் தான் TCS மற்றும் பிற நண்பர்கள் கிடைத்தார்கள்.. எனவே இந்தப் பிரிவும் எனக்கு ஒரு வெற்றியாகவும் மேலும் நண்பர்கள் உண்டாக்கும் ஒரு வாய்ப்பாகவும் மாற வேண்டும் என்பதே என் விருப்பம். பார்க்கலாம்.. அடுத்த பதிவில் புது கம்பெனி எப்படி இருந்தது என்று?


பி.கு: இதற்கு என்ன தலைப்பு என்றே தெரியவில்லை.. எனவே தான் "தலைப்பில்லை" என்பதே இதன் தலைப்பு..

Sunday, November 15, 2009

பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ

- மகாகவி பாரதியார்

Monday, May 18, 2009

நாம் மனிதர்களா?




முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். ஈழத்தமிழன் தன் கனவை கனவாகவே தான் வைத்திருக்க வேண்டும் போலும். பெருபான்மை தமிழ் நாட்டு தமிழர்களிடம் மானம், சொரணை
, உணர்வு, பற்று எதுவும் கிடையாது என்பது தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் அது ஊர்ஜிதபடுத்தப் பட்டுள்ளது.

இப்படி போன்ற ஒரு இரத்த களறி நடந்து முடிந்து இருக்கும் போது, கலைஞர் அலைவரிசையில் தலைப்பு செய்தி "கலைஞர் டெல்லி பயணம்! சோனியாவுடன் பேச்சு வார்த்தை". இதை நான் கலைஞரைக் குறையாகச் சொல்லவில்லை. இதே இடத்தில் யார் இருந்தாலும் இதை தான் செய்து இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரசியல் செய்ய ஒரு பிரச்சினை வேண்டும். இந்த தடவை அது ஈழமாகி விட்டது. புத்திசாலிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் அதனால் தான், இவர்கள் யாரையும் நம்பாமல், யார் அதிகமாக பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு!!. தமிழ் நாட்டில் தான் ஓட்டு வாங்கப் படுகிறதே!..

நண்பர்களே! நன் தலைவர்களிடம் மனிதம் இருக்கிறதா ஏன் நம்மிடம் இருக்கிறதா என்று சிறிது யோசியுங்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்..."படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்" இது தேர்தல் நடந்த அதே நாளில் இலங்கையில் நடந்தது. ஆனால் நாம் ஒன்றும் செய்ய வில்லை. எப்பொழுதும் போல் உண்டு உறங்கி எழுந்து அந்த நாளைக் கழித்து விட்டோம். உங்களுக்கு செய்தி தெரியாமல் போகட்டும். ஆனால் தெரிந்து இருந்தால், அன்று ஓட்டு போட்டிருந்தால், அதுவும் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டிருந்தால் நீங்கள் மனிதன் இல்லை.. மிருகம் தான். சரி காங்கிரஸ் தான் இந்த போரை நடத்துகின்றது என்பதற்கு தான் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்டால், ஒரு சின்ன மாற்றம்! நீங்கள் மனிதன் தான் ஆனால், கடைந்தெடுத்த முட்டாள்!

மன்னிக்கும் குணம் தான் மனித குணம் அது தொண்டர்களிடம் இருக்கிறதோ இல்லையோ,
தலைவர்களிடம் கண்டிப்பாக வேண்டும். ஆனால் நம் தலைவர்களிடத்தில் இருப்பது, பழி வாங்கும் குணம். குற்றம் செய்தவர்களை ம்ட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும். இவர்கள் மனிதர்களா? சரி விடுங்கள்!!

வேறென்ன சொல்ல? தோல்வியுற்றவர்களால் புலம்ப தான் முடியும். நியாயமாக இருப்பவர்கள் இந்த காலத்தில் தோல்வியை மட்டுமே பெரும்பான்மையான தடவைகள் சுவைக்க முடியும். அதனால் தான் உலகெங்கும் புலம்பல்களும் சோகங்களும் மட்டுமே நிறைந்து இருக்கின்றன. இன்று இந்த புலம்பல் போதும். இன்னும் வெற்றியைப் பார்க்க நிறைய
சோகங்கள் உள்ளன... அதற்கு மிச்சம் வைக்கிறேன்...காத்திருக்கிறேன் வெற்றிக்காக!! ஆனால் வெற்றி நிச்சயம்..


Thursday, April 09, 2009

பேரணியாம் பேரணி!!

மீண்டும் பேரணி. எதற்காக? நாங்களும் அக்கறையோடு தான் இருக்கிறோம் ஈழத் தமிழர்கள் மீது என்று காட்டிக் கொள்ள. இது அனைவருக்கும் தெரியும் தானே! ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக.. சரி அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பற்றித் தெரிந்தது தானே? ஆனாலும் இதில் பங்கேற்கும் தொண்டர்களை என்ன சொல்ல?

அரசியல்வாதிகளைக் குறை கூறி என்ன பயன்? இன்று பேரணியில் பங்கேற்கும் தொண்டர்களில் எத்தனை பேர் உண்மையான உணர்ச்சியோடு, தமிழர் பாசத்தோடு நடக்க போகின்றனர். சும்மா நேரம் போகாமல் சில பேர், காசுக்காக சில பேர் என்று கூடுபவர்கள் தானே இவர்கள். ஆதலால் மக்களே ஈழத் தமிழர் நலனில் அக்கறைக் கொண்டு இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் சொற்பமே! சும்மா சொல்லிக் கொள்ளலாம்..போர் நிறுத்தம் ஏற்படாவிடில் தமிழகம் கொந்தளிக்கும் என்று. எல்லாம் வாய் ஜாலம். ஒன்றும் நடக்காது...

கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்ள வேண்டுமாம். கலந்து கொண்டால், போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? தமிழர்கள் காப்பாற்றப் படபோகிறார்களா? எல்லாம் தேர்தல் நாடகம்.

இங்கு பேரணி நடத்தாமல் இந்திய அரசை விட்டு போர் நிறுத்தம் செய்ய சொல்லலாமே, அது மாட்டோம். ஏனென்றால் காங்கிரஸ் அதை என்றும் செய்யாது. அப்படியென்றால் விட்டு விட முடியுமா? அதுவும் முடியாது. தேர்தலில் மக்கள் ஏதேனும் ஆப்பு தந்துவிட்டால் இருக்கிற மாநில ஆட்சியும் போய் விடுமே?

எனவே தான் பேரணி. இதற்காக நான் திமுகவை மட்டும் குறையாகக் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்குமே இந்த பிரச்சினை தீர்க்க வழி தெரியாது. எனவே இவர்களை நம்பி பயன் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியென்றால் எதற்காக பேரணி? மக்களிடம் தேர்தலுக்காக ஆடும் நாடகங்கள் தான் இவை.

மக்களே! தீர்க்க முடியாத பிரச்சினை என்றால், அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள். இப்படி தான் உப்பு பெறாத பேரணிகள், விளக்க கூட்டங்கள் நடத்தி நம்மை ஏமாற்றுவார்கள். கடைகளில் 1 ரூ ஏமாற்றினால் கொதித்து எழும் நீங்கள், நம்மை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறீர்கள்? என்க்கும் தெரியும். ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது என்று. ஆனாலும் சிறிதாக ஒன்றே ஒன்று செய்ய முடியும். நமது ஓட்டு. அதை போன தடவை திமுக கூட்டணிக்குப் போட்டீர்கள் என்று இந்த தடவை அதிமுக கூட்டணிக்கோ மூன்றாவது அணிக்கோ போடுவதற்கு பதில் "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" என்றுத் தோன்றினால், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள். 49 ஓ வை பயன்படுத்துங்கள். 49 ஓ என்பது எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்வது போலாகும். வாக்கு சாவடி அதிகாரி 49 ஓ பதிவு செய்ய உதவி செய்வார்.


எனவே மக்களே! தயவு செய்து உங்கள் ஓட்டுக்களை தரமானவர்களுக்கே போடுங்கள். ஜே.கே ரீத்திஷ், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், மு.க.அழகிரி, இராஜ கண்ணப்பன் போன்றவர்களா நமது தமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்னிறுத்தி தீர்க்க போகிறவர்கள்? தயவு செய்து சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேட்பாளரின் தரத்தை மட்டும் பார்த்து ஓட்டு பதிவு போடுங்கள். தரம் இல்லையா 49 ஓ போடுங்கள்.

Saturday, March 21, 2009

மறக்க முடியவில்லை!!!

இன்று என் மனதை மிகவும் பாதிக்கும் படியாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் எதிர்பார்க்க வில்லை. இப்படி ஒரு விடயம் நடந்தால் நான் இவ்வாறு பாதிக்கப் படுவேன் என்று.

மார்ச் 21 2009. என் அக்காவின் இளைய குழந்தை பிறந்த நாள். சரி, எல்லாரும் நல்ல நாட்களில்
பிறருக்கு உதவுகின்றார்களே நாமும் செய்வோமே என்று, இன்று காரபாக்கம் அருகில் உள்ள ஒரு இல்லத்திற்கு சென்றேன். போகும் போது என் நண்பரையும் கூட்டிக் கொண்டு போனேன். நண்பருக்கு மார்ச் 16 பிறந்த நாள். ஆதலால், அவரும் உதவ தயாராக இருந்தார். நாங்கள் கொஞ்சம் (70 பாகங்கள்) இனிப்பு (பால் பேடா) வாங்கிக் கொண்டு சென்றோம்.

காரபாக்கம் டிசிஎஸ் (TCS) அலுவலுகம் தாண்டி சென்றால், இடது பக்கத்தில் ஒரு கருணை இல்லம் உள்ளது. பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினோம். ஒரு பத்தடி தூரத்தில் இரு பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடை அணிந்திருந்தனர். இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி இருந்து கொண்டிருந்த இரு பெண்கள் நாங்கள் வருவதைப் பார்த்து, எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.

எங்களை அன்போடு வரவேற்றனர். நாங்கள் வந்த காரணத்தை அவர்களாகவே தெரிந்து கொண்டு, யாருக்கேனும் பிறந்த நாளா இல்லை வேறேனும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் நடந்துள்ளதா என்று கேட்டனர். நான் உடனே "எங்க அக்கா குழந்தைக்கு
பிறந்த நாள்" என்று கூறினேன். அப்படியே நாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புக்களை அவர்களிடம் கொடுத்தேன். ஓ அப்படியா! நாங்க அவங்களுக்குகாக wish பண்ணி விட்டு pray பண்றோம் என்று கூறினர்.

அப்புறம், அவர்களைப் பற்றி பேசும் போது, அங்கு 180 குழந்தைகள் இருப்பதாக தெரிந்தது. இனிப்பு காணாதே என்று மேலும் ஒரு 500 ரூ எடுத்து கொடுத்தேன். எங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி கேட்டு கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அங்கு ஆசிரியர்களாக வேலை பார்த்து கொண்டிருப்பதாக தெரிந்தது. ஒருவருக்கு திருப்பத்தூர் என்று கூறினார்கள்.

சரி குழந்தைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு தியான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம்.

தியான வகுப்பினில் ஒரு பையன் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தான் என அங்கு மேற்பார்வையிடும் ஆசிரியர் வெளியே கொண்டு வந்து விட்டார். ஏனோ தெரிய வில்லை அந்த பையனைப் பார்ப்பதற்கு எனது அக்காவின் இளைய குழந்தை போலவே இருந்தது. வெளியே வந்த பின்னரும், பையன் குறும்புகள் பண்ணிக் கொண்டுருந்தான். வகுப்பிற்கு உள்ளே எட்டி பார்த்து கொண்டிருந்தான்.

அவனை அருகில் கூப்பிட்டு என்னுடன் வந்த நண்பர் பேச ஆரம்பித்தார். அவன் பெயர் வேல்முருகன் என்று கூறினான். டிரவுசரில் உள்ள ஊக்கு பிய்ந்து இருந்ததால், மீண்டும் மீண்டும் அதை பிடித்து சரி செய்து கொண்டிருந்தான். வயது ஒரு 6 - 7 இருக்கும்.

அவன் கையைப் பிடித்து பேச ஆரம்பித்தார். ஏனோ என்னால் அவனோடு நன்றாக பேச முடியவில்லை. எங்களோடு பேசிக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவர் "அவன் கிட்ட அவங்க அம்மா phone number கேட்டு பாருங்க" என்று கூறினார். நண்பர் கேட்டார். வேல் முருகன் "0000" என்று ஆரம்பித்து சில எண்கள் கூறினான். அதைக் கேட்டு ஆசிரியர் "அவனுக்கு மட்டும் number எல்லாம் 0 ல தொடங்கும்" என்று சிரித்தார்.

என்னால் சிரிக்க முடியவில்லை. அவன் அம்மாவை அவனுக்கு தெரிய வில்லை என்று கவலைப் படுவதா? இல்லை அதையும் அவன் கண்டு கொள்ளாமல் விளையாட்டாக எண்களைச் சொல்கிறானே என்று அவனைப் பாராட்டுவதா என்று?

அதோடு அவன் அவ்வ போது தன் கை விரல்களுக்கு நடுவே சொரிந்து கொண்டே இருந்தான். பார்த்த போது, கொஞ்சம் ஆங்காங்கே பொரிந்து இருந்தது. அதுவே அவனைச் சொரிய வைத்தது. இதையெல்லாம் பார்த்து கொண்டே இருந்த போது, என் கண்களில் தானாக நீர் கோர்த்து கொண்டது. ஏனென்றே தெரியவில்லை.

பின்னர் அனுராதா என்ற இன்னொரு பெண்ணிடமும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு பிறகு வந்து விட்டோம். பயமாக இருந்தது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் அழுது விடுவோம் என்று.

இந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில் வந்து பிறந்ததைத் தவிர? அவர்கள் உடலிலுள்ள சிறு பிரச்சினைகளைக் கூட பார்த்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை. ஆனால் என் அக்கா குழந்தைக்கோ பிறந்த நாள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் எல்லா வித கவனிப்புகள். ஏன் இந்த முரண்பாடு? யாருடைய தவறு இது?

சரி எனக்கு தெரிந்தது ஒரு வேல்முருகன் அனுராதா தான். இன்னும் எத்தனையோ பேர் இதை விட மோசமான நிலையில் இருக்கிறார்கள். ஈழத்து மக்களையெல்லாம் நாம் சென்று பார்த்தால் மனம் நொந்து வாழ்க்கையின் மீது உள்ள பற்று போய்விடும் என்று நினைக்கிறேன். உலகிலேயே ஒருவர் கண்ணெதிரில் துன்பப்படும் போது, உதவ வேண்டும் என்று நினைத்தாலும், வழி தெரியாமலும், உதவி செய்யும் நிலையில் இல்லாமல் இருப்பது தான், மிகப் பெரிய தண்டனை. இதைப் பற்றி நினைத்துக் கொண்டு, நாட்டில் நடக்கும் நான் தான் பெரியவன் என்ற சண்டைகளும், வெற்றி மிதப்பில் மனிதன் செய்யும் அராஜகங்களையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

இனிமேல் யாரேனும் உங்களிடம் வந்து கர்வத்தோடு பேசும் போது இதைப் பற்றிக் கூறி எப்படி இந்த குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கேளுங்கள். அமைதியாக திரும்பிச் செல்வர்.

என்னால் முடிந்தது இவை தான்.

முன்பு நிறைய தடவை வெளியே சாப்பிட்டு ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 1200 - 2000 ரூக்கு வெளியே சாப்பிட்ட நான் அதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். மாதம் ஒரு முறை
வேல்முருகன் அனுராதா மற்றும் பிற குழந்தைகளைப் போய் பார்க்க வேண்டும் எங்களால் இயன்ற அளவு உதவி செய்வது என்று முடிவு செய்தோம்.

இதெல்லாம் போக, அந்த இரு பெண் ஆசிரியர்களை நினைத்துப் பாருங்கள். வேல் முருகனின் நம்பர் விளையாட்டை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளும் மன தைரியத்தை என்னவென்று சொல்வது? அவர்களைப் போன்றவர்கள் தான் உண்மையான வீராங்கனைகள், மன திடம் உள்ளவர்கள்.