Wednesday, October 01, 2008

அமெரிக்கர்கள் இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுகின்றனரா?

ஆம் வந்து விட்டது.. இந்தியர்களைப் பார்த்து அமெரிக்கர்கள் அஞ்சும் காலம் வந்தே விட்டது. மென்பொருள் துறை, விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம் என இந்தியாவின் வளர்ச்சி உலகம் அறிந்தது தான். ஆனாலும் வெளிப்படையாக வாய் வார்த்தைகள் மூலமாக அமெரிக்க பிரதிநிதிகள் சொல்லி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று படித்து விட்டேன்.

இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்த விவாதத்தில் வடக்கு டகோடா மற்றும் 'புதிய மெக்சிகோ' மாகாணங்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பேசியுள்ளனர். வடக்கு டகோடா மாகாணத்தின் பிரதிநிதி பைரன் டார்கன், தன்னுடைய உரையில், இந்திய அணு உலைகளைப் பற்றி விஜயகாந்த் போல ஒரு எண்ணிக்கை ஆராய்ச்சியே நடத்தி உள்ளார்.

"இந்தியாவில் உள்ள மொத்த அணு உலைகளின் எண்ணிக்கை 22. அதில் அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியாக போகும் உலைகள் 14. மீதி இருப்பவை 8. இந்த எட்டில் இந்தியா அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யலாம் ஏனெனில் இவை அணுசக்தி கட்டுப்பாட்டுக்குள் வராது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல், ஏற்கனவே அணு ஆயுதங்களைச் சோதனை செய்துள்ள ஒரு நாட்டிற்கு இவ்வாறு ஒத்துழைப்பு அளித்து, மேலும் அவர்களை அணு ஆயுதம் தயாரிக்க உதவும் ஒரு ஒப்பந்தத்தை இவ்வளவு அவசரமாக விவாதிக்க வேண்டுமா?" இது பைரன் டார்கன் இன்று பேசிய உரையின் சாராம்சம்.

ஜெஃப் பிங்கமேன், 'புதிய மெக்சிகோ' பிரதிநிதி, இந்தியாவைப் பற்றி ஒரு பாராட்டு பத்திரமே வாசித்து விட்டார்."1960, 1970 களில் இருந்து வந்த இந்தியா வேறு. இப்பொழுதுள்ள இந்தியா வேறு. கண்டிப்பாக இந்தியா தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நாடு தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அமெரிக்கா தொழில் நுட்பத்திற்காக இந்தியாவுடன் கைகோர்க்க தான் வேண்டும். இதற்காக அதிபர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் இந்த காரணங்களுக்காக நம் அணு சக்தி கொள்ககைகளை மாற்றுவது தவறான செயலாகி விடும். இந்த ஒப்பந்தம், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் தனக்கென பிரத்யேகமாக அணு கொள்கை வைத்துக் கொள்ள விரும்பும் இரான் போன்ற நாடுகளுக்கும், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல் இருக்கும் பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் நாடுகளுக்கு மோசமான முன்னுதாரணமாகி விடும். மேலும் நம்முடைய நிலையை அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் தாய்வான் நாடுகளுக்கு நியாய படுத்த முடியாமல் போய் விடும். எனவே இதை அனுமதிக்க கூடாது."

அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகுமோ இல்லையோ, இந்தியாவை பற்றி அமெரிக்கர்களின் உண்மையான கருத்துக்கள் வெளி வருகின்றன. எனக்கென்னவோ இந்தியா வல்லரசாகும் காலம் அருகி விட்டது போல் தோன்றுகிறது....

Friday, September 26, 2008

கண்ணும் கண்ணும்

இன்று தான் இந்த படத்தை முதன் முதலாக பார்க்கிறேன். இப்படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால் அந்த கதை ஆசிரியருக்கு நான் செய்யும் ஒரு துரோகமாகவே நினைக்கிறேன். காரணம், அவ்வளவு ரம்மியமான அழகான யதார்த்தமான கதை. இந்த படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் கணிணியில் பார்த்து இயக்குனருக்குச் / தயாரிப்பாளருக்குச் சேர வேண்டிய இலாபத்தைப் பறித்ததற்காக வருந்துகிறேன்.

இந்த கதையை உங்களிடம் நான் சொல்ல போவதில்லை. கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அதற்காக தான் இந்த பதிவு.

மிகுந்த நாட்களாகவே இது வரை யாரும் சொல்லாத ஒரு கதையை யாரேனும் படமாக எடுப்பார்களா என்று நான் பார்த்து கொண்டிருந்தேன். என் கனவு நனவானது இப்படத்தினால்.
முற்றிலும் புதிய கதை. இது வரை நாம் யாரும் கேட்டு பார்த்திராத மென்மையான காதல் கதை.

கதைகளில் முடிச்சு போடுவது யாவருக்கும் எளிது. ஏன் நாம் கூட போடலாம். கதை ஆசிரியரின் திறமை அதை லாவகமாக அவிழ்ப்பதில் தான் இருக்கிறது. அவிழ்ப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டுமோ, அதை விட பல மடங்கு திறம் மற்றும் துணிவு அந்த முடிச்சை அவிழ்க்காமலேயே கதையை முடிப்பதற்கு வேண்டும். அப்படி அவிழ்க்காமல் இருக்கும் போதும் பார்ப்பவர்களுக்கு அது நியாயமாக இருக்க வேண்டும். அது இந்த கதையில் உண்டு. இந்த துணிச்சல் இதற்கு முன்னர் நான் பாலசந்தரிடம் பார்த்து இருக்கிறேன் (அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு...)


கதை மற்றும் காட்சியமைப்புகளில் யதார்த்தம். எதுவும் செயற்கையாக இருக்காது. அதற்கு நான் உத்தரவாதம். ஒரு வேளை திருநெல்வேலி பக்கத்து ஊர்களில் நடப்பதினால் அதில் இருக்கும் யதார்த்தத்தை என்னால் அதிகமாக உணர முடிகிறதோ என்னவோ? என்னுடைய கணிப்பு தமிழ்நாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் இது யதார்த்தமாகவே இருக்கும். குறை
காண விரும்புவோர்க்கு கதை நாயகன் மற்றும் நாயகி அறிமுகம் ஒரு நல்ல களம்.


இப்படத்தில் எனக்கு பிடித்தவை:
1) இயக்குனரின் பெயர் - ஒரு கிராமத்து பெயர் மாரிமுத்து
2) கணிணி காலத்திலும் கடிதம் மூலம் காதல் செய்வது.
3) கதையின் முடிச்சை அவிழ்ப்பதற்காக குடும்பத்தில் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி தவிர யாரோ ஒருவர் உண்மையைத் தெரியாமல் கேட்டு விட்டதாக காண்பிக்காமல் இருப்பது
4) காதலை விட மற்ற உறவுகளுக்கு (தந்தை-மகன், அண்ணன்-தங்கை எல்லாவற்றையும் விட நட்பு) முக்கியத்துவம் காட்டியது.
5) மனிதாபிமானத்தை கதை மூலம் நிரூபித்தது.
6) தமிழ் பேச்சு, தமிழ் சினிமா தரம் பேசும் தங்கர் பச்சான் கூட கவர்ச்சியைப் பயன்படுத்தும் போது, இந்த கதையில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லா விட்டாலும் நாயகியின்
கவர்ச்சியையோ, ஒரு பாடலுக்கு ஆடும் சிலரின் ஆட்டத்தையோ நம்பாத இயக்குனரின் நம்பிக்கை மற்றும் அப்படி இயக்க விட்ட தயாரிப்பாளரின் துணிச்சல்.

7) கடைசியாக வெற்றி படமாக வேண்டும் என்பதற்காக கதையின் முடிவை காதலர்க்கு சாதகமாக முடிக்காமல் இருப்பது..

இந்த படத்தின் மிகப் பெரிய பலவீனம் - இசை. அதை விட எரிச்சலூட்டுவது, இசையமைப்பாளர் தினாவுக்கு போடப்படும் பட்ட பெயர்.. (இசை அரசராம்).

படத்தைக் கண்டிப்பாக பாருங்கள்.. ஒரு நல்ல படைப்பை ஆதரியுங்கள்!!!

Wednesday, April 16, 2008

பிரியங்கா நளினியைச் சந்தித்தால் நமக்கு என்ன?

இரு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா காந்தி தன் தந்தையைக் கொன்ற நளினியைச் சென்று சிறையில் பார்த்துள்ளார். இதைப் பற்றி தான் ஊடகங்கள் இரு நாட்களாக பேசிக் கொண்டிருக்கின்றன. உச்ச கட்டமாக இன்று "ரேடியோ ஒன்" பண்பலைவரிசையில் இதை ஆதாரமாக வைத்து ஒரு போட்டி. எனக்கு மிகவும் பிடித்த வானொலி நடத்துனர் சுசித்ரா (முன்னால் மிர்ச்சி சுசி) தான் இதை முன்னின்று நடத்தினார் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவலை.

போட்டி இது தான். பிரியங்கா நளினியைச் சந்தித்த போது என்ன பேசி இருப்பார்? வானொலி நேயர்கள் கற்பனை செய்து கூற வேண்டும். மிகவும் ரசிக்க தகுந்த கற்பனைக்கு பரிசு. இதை விட கேவலமான ஒரு போட்டி இருக்க முடியுமா? இரு மனிதர்கள் தங்களுக்குள் கமுக்கமாக பேசியதை என்னவென்று யூகித்து கூறுவதற்கு பரிசு. பிறரைப் பற்றி வம்பு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஆதரித்து, அதற்கு பரிசும் உண்டு என்று ஊக்குவிக்கும் ஒரு போட்டி. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என்று அரசிற்கு எளிதாக கணக்கு எடுக்க ஒரு போட்டி.

எனக்கு நடத்துபவர்களை விட அதில் கலந்து கொள்கிறார்களே மக்கள் என்று தான் கவலை. இத்தனை பேர் தயக்கமின்றி அடுத்தவர்களைப் பற்றி புரளி பேச ஆயத்தமாக உள்ளனரே! தங்களது கற்பனை புரளியை தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பார்களே என்ற வெட்கம் கூட இல்லாமல்? அதைச் சுசி போன்றோரும் ஆதரிக்கின்றனரே.. தங்களுடைய பண்பலையின் விளம்பரத்திற்காக?

சுசி அவர்களே! இது நியாயமா? தங்களைப் போன்றோர் செய்கின்ற காரியமா இது?