Saturday, October 27, 2012

விஜயகாந்த்

விஜயகாந்த் பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ந்து விட்டார். இன்னும் சில நாட்களுக்கு ஊடகங்களுக்கு பெரிய அவல் கிடைத்து விட்டது. விஜயகாந்தின் புண்ணியத்தால் சின்மயி பற்றிய செய்திகள் மங்கி விடும். சின்மயி மற்றும் விஜயகாந்த், இருவர் விடயங்களில் வெளியே வராத உண்மைகளை ஊடகங்கள் எடுத்துரைப்பதற்கு பதிலாக, அதை வியாபாரமாக்கி குளிர் காய்ந்துள்ளனர் என்பதே உண்மை.

விஜயகாந்த் ஒரு முன்கோபி என்பது அறிந்ததே! சட்டமன்றத்திலேயே நாக்கைத் துறுத்தி பேசியதை மட்டும் வைத்து சொல்லவில்லை. பொதுக் கூட்டங்களில் பேச்சுக்கு இடையூறாக இருக்கும் சில பேரை அவர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றும் முறையிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட கோப குணம் கொண்ட ஒருவரிடம், அவருடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக தலைமையைச்  சந்தித்த நேரத்தில், அதாவது முதுகில் குத்தப்பட்ட வலியுடன் இருக்கும் நிலையில், அதிமுக சார்பு அலைவரிசை (ஜெயா) கேள்வி கேட்கப் போக, விஜயகாந்த் தன் குணத்தைக் காட்டி விட்டார். ஊடகங்கள் இந்த காணொளியை நாளை முழுதும் தொலைக்காட்சியில் ஓளிபரப்பப் போகிறது. ஆனால் இதில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்ன?

உண்மை 1:

விஜயகாந்திற்கு எப்படியோ கணிசமான ஒரு ஓட்டு வங்கி தமிழகத்தில் சேர்ந்து விட்டது. அதை போன தேர்தலில் வடிவேலுவை வைத்து சிதறடிக்க பார்த்த திமுக, முழுதாக வெற்றி பெற முடியவில்லை. ஓட்டு வங்கி இருக்கும் வரை அவருடன் கூட்டணி வைத்து தான் ஆக வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வேறு வரப் போகிறது. தெருவெல்லாம் டாஸ்மாக் திறந்து வைத்துக் கொண்டு அவரைக் குடிகாரர் என்று சொல்வது மக்களிடம் பலிக்கவில்லை. எனவே அவரது கையை வைத்தே அவர் கண்ணைக் குத்த அதிமுக காய்களை நகர்த்த, அதற்கு ஏதுவாக விஜயகாந்தும் நடந்து கொள்கிறார். ஏன் ஜெயலலிதாவை சந்திக்கக் சென்ற 4 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களே "அம்மா! நாங்க இங்க வந்து உங்களைப் பாத்தது பத்தி விஜயகாந்த் கிட்ட கேட்டாலே போதும். அவர் கோபத்தில பொங்கி தன் மேலேயே மண்ணை வாரி போட்டுக்குவார்" என்று யோசனை கொடுத்து இருக்கலாம்.

உண்மை 2:

இந்த 4 பேரும் தங்கள் தொகுதி நலன் சம்பந்தமாக முதல்வரைச் சந்தித்ததாக கூறியுள்ளனர். தொகுதிக்காக இவர்கள் செய்தது தான் என்ன இந்த ஒரு வருடத்தில்? கடந்த மே மாதத்தில் ஜூனியர் விகடன் நடத்திய வாக்கெடுப்பில் இவர்களைப் பற்றி மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். அனைவரும் பாரபட்சமில்லாமல் மோசம் என்று மக்களால் போற்றப்பட்டுள்ளனர். இவர்களா முதல்வரைச் சந்தித்து தொகுதி நலன் சம்பந்தமாக பேசியிருப்பார்கள்?







திமுகவிற்கு தேர்தலுக்கு பிறகு எப்படி வடிவேலு தேவைப் படவில்லையோ, அதே கதி தான் இந்த 4 பேருக்கும், இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிந்தவுடன். அதற்குள்ளாக முடிந்தவரை சம்பாதித்து கொள்ளத்தான் பார்ப்பார்கள். இவர்கள் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவிலும் சேர மாட்டார்கள். ஏனெனில் கட்சி தாவல் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர் பதவி போய்விடும். இதைப் போன்று போன ஆட்சியில் எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து சட்டமன்றம் சென்று, பின்னர் திமுக செயற்கூட்டத்தில் எல்லாம் கலந்துக் கொண்டு, திமுகவில் கடந்த தேர்தலில் இடம் கிடைக்காதலால், இப்பொழுது மீண்டும் அதிமுகவில் சேர ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த 4 பேரும் கண்டிப்பாக தேமுதிகவில் இருந்து விலகி விட்டு எந்த கட்சியும் சாராத சட்டமன்ற உறுப்பினர்களாக, போன முறை எஸ்.வி.சேகர் இருந்த மாதிரி இருக்கப் போகிறார்கள். 

ஆக இந்த 4 பேரும் மக்களுக்கு சேவை செய்வதற்காக வரவில்லை. இவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. இதில் அருண்பாண்டியன் விஜயகாந்த் மூலமாகத்  தான் ஊமை விழிகள் சினிமாவில் அறிமுகமானவர். விஜயகாந்தை உண்மையாக முதுகில் குத்தியவர் இவர் தான்.

உண்மை 3:

அதிமுக திமுக இரண்டின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழகத்தில் இவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியாக மாற வாய்ப்பு உள்ள வைகோவிற்கு சிறை (அதிமுக ஆட்சியில்), சீமானுக்கு சிறை (திமுக ஆட்சியில்), விஜயகாந்திற்கு சிறை எல்லாம் வேண்டாம் முன்கோபமே போதும், கம்யூனிஸ்ட் கட்சி தா.பாவின் பேட்டிகளைப் பார்த்தால் அவர் அதிமுகவில் சேர்ந்து விட்டாரா என்று எண்ணத் தோன்றுகிறது. இவையெல்லாம் பார்க்கும் போது இந்த இரண்டு கட்சியை விட்டால் தமிழகத்திற்கு வேறு வழியே இல்லை மாதிரி தெரிகிறது. அப்படியும் மீறி யாருக்காவது லாட்டரி பரிசு போன்று ஓட்டு வங்கி சேர்ந்து விட்டால் அதை சிதறடிக்க இந்த கட்சிகள் செயல்படுத்தும் உத்திகள் தான் எத்தனை!

இதை விஜயகாந்த் ஆதரவு பதிவாக நான் எழுதவில்லை. சில நிகழ்வுகளை ஊடகங்கள் பதிவு செய்யும் விதம் சரியாக இல்லை என்றே சொல்ல வருகிறேன். கண்டிப்பாக விஜயகாந்தின் செயல் மோசமானது தான். நண்பர்களைத் திட்டுவதைப் போல் எல்லாரையும் திட்டுவது பொது வாழ்க்கைக்கு சரியாகாது. ஒத்தும் வராது. அரசியல் ஆசைகளை அவர் மூட்டைக்  கட்டி வைத்து விடலாம்.  ஆனால் அவரின் இந்த குணத்தைப் பிற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டுக்களாக மாற்றிக் கொள்கிறது. அதை ஊடகங்கள் கண்டும் காணாமலும் இருக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு.

ஊடகங்களும் உதவவில்லை. மூன்றாம் அணி அமைக்க திறனுள்ள தலைவர்களும் ஒன்று சேர வழி தேடப் போவதில்லை. தனியாக நின்று எதிர்த்து வெற்றி பெற திமுக அதிமுக ஒன்றும் சாதாரண எலிகள்  இல்லை. அவை பெரிய யானைகள்... என்று விடுபெறும் தமிழகம் திமுக அதிமுகவிடம் இருந்து???