Saturday, May 19, 2012

வீதிக்கு வராத அடையாளங்கள்


வழக்கு எண் 18/9 படத்திற்கு ஆனந்த விகடன் 55 மதிப்பெண் கொடுத்துள்ளது. கடைசி காட்சிகளில் மக்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் என்று படித்தேன்,கேட்டேன். சக இயக்குனர்களிடம் இருந்து பாராட்டுகள். படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விட்டது. இன்றும் கூட அரங்கம் நிறைந்த காட்சியாகத் தான் ஓடியது. கலகலப்பு போன்ற ஒரு காமெடி படமும் ஓடிக் கொண்டிருக்கும் வேலையிலும் அரங்கம் நிறைந்து இருக்கிறது என்றால், மக்களின் மனதைக் கண்டிப்பாக தொட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருப்பதும், அவர்களை எதுவுமே பண்ண முடியாமல் கையாலாகாதனத்தின் மொத்த உருவமாக வாழ்வதும், ஜோதி போன்ற கதாபாத்திரத்தின் மூலமாக தான் செய்ய வேண்டியதை செய்து முடித்ததினால் வரும் மன நிம்மதியே!!

"என்னடா இவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவ்வளவு பேரா இருக்கின்றனர் இந்த சமூகத்தில் என்று நினைக்கிறீர்களா? நான் சந்திக்கவே இல்லையே!"  "இவனுக்கு இதே வேலை டா எப்ப பாரு புலம்பிக்கிட்டு" என்று யோசிப்பவர்களே! நீங்கள் இன்ஸ்பெக்டரைப் போல் ஒருவரைச் சந்திக்காமல் இருக்கின்றீர்கள் என்றால் ஆச்சரியம் தான். ஏனென்றால் இங்கு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களுக்கு பஞ்சம் இல்லை! ஜோதிகளுக்கு தான். இல்லை நீங்களே ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமாக இருக்கலாம். ஆனால் அடையாளம் வீதிக்கு வராமல் இருக்கலாம். உங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட ஜோதி இன்னும் தயாராகவில்லை. தொடர்ந்து படியுங்கள்!!

ஷர்மான் ஜோஷி நடித்த "Life in a metro" படம் நீங்கள் பார்க்க வேண்டும். அதில் ஷர்மான் ஜோஷி கதாபாத்திரம் பணி உயர்வுக்காகவும், பணத்திற்காகவும். தன் உயர் அதிகாரிகளுக்கு தேவையான "எல்லாவற்றையும்" (வீட்டு வேலைகள், பிற உதவிகள், அதிகாரிக்களுக்கு ஜால்ரா, அவருக்கு பிடித்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு தன் வீட்டைக் கொடுப்பது, இத்யாதி, இத்யாதி) செய்து கொடுப்பதாக கதை செல்லும். வெறும் பணி உயர்வுக்காக, சில லட்சங்களுக்காக,  தன்னுடைய சுய மரியாதை, பண்பு, காதல் எல்லாவற்றையும் இழப்பதாக காண்பிக்கப் படும்.  ஷர்மான் ஜோஷி இழந்து பெற்ற பணி உயர்வு நியாயமாக யாருக்கு கிடைத்திருக்க வேண்டுமோ, அவர் தான் இந்த படத்தின் "ஜோதி". உயர் அதிகாரிகளே இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்கள். இந்தியா முழுக்க இப்படி ஒவ்வொரு செயல்பாடுகளிலும் / அலுவலகத்திலும்,  ஏகப்பட்ட ஜோதிகளும் இன்ஸ்பெக்டர்களுமே நிறைந்து உள்ளனர். இப்பொழுது சொல்லுங்கள், நீங்கள் இந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தைச் சந்தித்து இருக்கிறீர்களா என்று??

எஸ்.இராமகிருஷ்ணன் தன் கட்டுரைகளில் ஒன்றில் எழுதியிருப்பார் "ஒரு நாள் சும்மா தி.நகரில் நின்று கொண்டு பத்து ரூபாய் கட்டு வைத்து கொண்டு, உங்களைத் தாண்டிப் போகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து ரூபாய் கொடுங்கள். நிறைய பேர் ஏன் என்று கேட்காமல் வாங்கி செல்வர்". அப்படி ஆகி விட்டது இன்று பணத்திற்க்கான தேடல். பணம் சேர்ப்பது முக்கியம் தான் ஆனால் நீங்கள் சேர்க்கும் அல்லது உங்களை வந்தடையும் பணம் / பதவி உங்களுக்கு உரியது தானா என்று எண்ணிப் பாருங்கள். அந்த பணம் / பதவி உங்களுக்கு உரியது இல்லை என்றால், நிராகரித்து விடுங்கள். 

அப்படி இல்லாமல் அதை உங்களோடு ஒட்டி கொள்ள அனுமதித்தால், காலப் போக்கில் நீங்கள் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஆகி விடுவீர்கள். உங்கள் வேலையிலும் தரம் இருக்காது, குறைந்து விடும். ஆனாலும் பணம் பதவி எதையும் விட மனம் ஒத்துக் கொள்ளாது. எனவே பதவியையும் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள அரசியல் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள். ஜால்ராக்களை உங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த ஜால்ராக்களுக்கு பின்னர் பணம் பதவிகள் வாங்கி கொடுக்க வேண்டியிருக்கும். நேர்மையாக செயல்பட வேண்டிய தருணங்களில், தங்கள் ஜால்ராக்களுக்கும் அடிப்பொடிக்களுக்கும் பணம் பதவி வாங்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டி வரும். அப்படி செயல்படவில்லையென்றால் ஜால்ராக்கள் உங்கள் எதிரிகளோடு சேர்ந்து உங்களைக் கவிழ்த்து விடுவார்கள்.  ஆக மொத்ததில் நீங்கள் மனதளவில் ஒரு ரவுடியைப் / அரசியல்வாதியை போன்று வாழ்வீர்கள். ஆனால் வெளியே ஒரு அரசாங்க அதிகாரியாகவோ / மேலாளராகவோ பார்க்கப் படுவீர்கள்.

இப்படி பணம் சேர்த்து என்ன பயன்? உங்களின் இந்த மாதிரியான அணுகுமுறையினால் நாட்டில் நேர்மையானவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாடே சீரழிந்து வருகின்றது. அது உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தானே பாதிக்கிறது? ஆனாலும் ஏன் திருந்த மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது? படத்தில் இன்ஸ்பெக்டர் தூய இருதயத்தின் மகன், அரசியல்வாதியின் மகன், அநியாயமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் தாளாளரின் மகன் என அனைவருமே அயோக்கியர்களாகவே காண்பிக்கப் பட்டுள்ளனர். இதைப் போன்று தானே உங்கள் குழந்தைகளும் வருவார்கள்? அது உங்களுக்கு சம்மதமா? படத்தில் காண்பிப்பது போல இப்படி பட்டவர்கள் இந்தியாவில் இன்ஸ்பெக்டர், அரசியல்வாதிகளாக மட்டும் இருப்பதில்லை. எல்லா துறையிலும் இருக்கிறார்கள். இந்த பதிவுக்கு facebookல் like போடும் நண்பர்களில் கூட பல இன்ஸ்பெக்டர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

ஆக மொத்ததில் எங்கும் அரசியல் மட்டுமே நீக்கமற நிறைந்து இருக்கிறது. யாரும் அப்பாற்படவில்லை. எனவே எல்லாருக்கும் வசதியாக போய்விட்டது. நாமும் அதே தப்பைச் செய்து விட்டு, "நான் மட்டும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் அப்படி தான் பண்றாங்க" என்று எளிதாக சொல்லிக் கொண்டு போய் விடலாம். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு அநியாயத்திற்கும் எதிர்கால சந்ததியினர் துன்பப்பட போகின்றனர். அதில் உங்கள் வாரிசுகளும் அடக்கம். அவர்களுக்கு நாளை நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய் உங்களிடம் வந்து கண்ணீர் சிந்தும் போது, நீங்கள் ஷர்மான் ஜோஷி போல் அநியாயமாக பெற்ற பணம் / பதவி அல்லது தகுதியற்றவர்களுக்கு வாரி கொடுத்த பதவிகள் உங்கள் மனதை உறுத்தும். நிம்மதியாக சாக விடாது. 

பணமும் பதவியும் பிரதானம் இல்லை நண்பர்களே. நேர்மையும், தப்பு நடக்கும் போது எதிர்த்து நின்று கோபத்துடன் தட்டி கேட்கும் தைரியமும் தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும். இந்த வாரம் வெளியான வட்டியும் முதலும் தொடரில் வினோபாவே கூறியதாக எழுதப்பட்ட ஒன்று இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். "என் அன்பு, மனிதம், கோபம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்"

திருந்த வேண்டும் நண்பர்களே! உண்மையாக கல்வி கற்றவர்கள் / மனிதர்களாக வாழ நினைப்பவர்கள் / மனசாட்சி உள்ளவர்கள் மாறுவார்கள். இல்லையென்றால் இன்ஸ்பெக்டர் அவர்களே! உங்களுக்கான "ஜோதி" தயாராகும் வரை காத்திருங்கள், உங்கள் அடையாளங்கள் வீதிக்கு வரும் நாள் அருகில் தான் உள்ளது.

Saturday, November 26, 2011

சென்னை படுத்தும் பாடு


சென்னையில் ஒரு மழைக்காலம் - கௌதம் மேனனின் படத்திற்கு வேண்டுமானால் ஒரு கவித்துவமான தலைப்பாக இருக்கலாம். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் - சாணத்தை மிதித்தால் வரும் உணர்வுக்கு சமமான எரிச்சலையும், இயலாமையும், கோபமும் கொடுக்கும் ஒரு அனுபவம்.

சென்னையில் ஒரு அரசு இயங்குகிறதா என்று சிந்திக்க வேண்டிய அளவிற்கு தள்ளி விடுகிறது ஒவ்வொரு மழைக்காலமும்.மழை வருவதற்கு முன்னர், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த தடவை போன மழைக்காலம் போல் இருக்காது; வடிகால்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளன என்று உறுதி கொடுப்பது தான் மிச்சம். ஆனால் வருடத்திற்கு வருடம் நிலைமை கட்டுக்கு அடங்காமல் மோசமாகிக் கொண்டே போவது தான் உண்மை.

ஊரெங்கும் குப்பைக்கூளம், அதனால் வரும் நாற்றம், முழங்கால் அளவு தண்ணீரில் அலுவலக பேருந்துகளைப் பிடிக்க ஓட வேண்டிய கட்டாயம், அலுவலக பேருந்துகளை விட்டு விட்டால் பின்னர் 570, 19B, 21H, M119,47D,5A போன்ற எப்போதுமே கூட்டமாகவே போகும் பேருந்துகளில், கசங்கி பிதுங்கி பிழியப்பட்டு அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம், அப்படிப்பட்ட பேருந்துகளுக்காக நிற்பதற்கு சரியான ஒரு நிறுத்தம் இல்லாமை, அப்படியே இருந்தாலும் அங்கு ஏதுவான நிழற்குடை இல்லாமல் பேருந்தில் ஏறுவதற்குள் பாதி நனைந்து விடும் அவலம், ஆட்டோகாரர்களின் அடாவடித்தனம், மீட்டர் போட்டு ஓட்டாமல் கட்டணங்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றிக் கேட்பது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

மேலே கூறியவை அனைத்தும் ஏதோ இந்த வருடம் நடப்பது தான் அடுத்த வருடம் சரியாகி விடும் என்பதல்ல. இது கடந்த 20 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. திமுக அதிமுக 1967ல் இருந்து ஆட்சி செய்தும் இவர்களின் அணுகுமுறையினால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.காரணம் அவர்களின் அறிவும் திறமையும் அவ்வளவு தான். 

திமுக அரசினால் தொடங்கப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கான இணையத்தளம் தான் மு.க.வின் திறத்திற்கு எடுத்துக்காட்டு. (http://tnvelaivaaippu.gov.in) இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் எல்லாரையும் குழப்பத்தில் வைத்துக் கொண்டு இருப்பது தான் நிதர்சனம். அதற்காக செலவழித்த காசு மட்டும் தான் உண்மை. மற்றவை அனைத்தும் கனவுகள் தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!! கல்லூரியின் வாசலைக் கூட தொடாதவர்கள், அறிவுப்பூர்வமாக யோசித்து எப்படி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போகிறார்கள்? காமராஜர் காலத்தில் படிக்காதவர்கள் தானே நல்லாட்சி தந்தார்கள் என்றால், அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். நேர்மைக்கும் நம்மை ஆளும் கட்சிகளுக்கும் துளி சம்பந்தம் உண்டா? ஒன்று படித்து இருக்க வேண்டும். இல்லை நேர்மை இருக்க வேண்டும். இரண்டும் இல்லை. பணம் சம்பாதிக்கும் ஆசை ஒன்று தான் உண்டு. அதன் விளைவு தான் இந்த படங்களும் சென்னையின் இன்றைய நிலைமையும்!!

வேளச்சேரி அந்தோணி பள்ளி சந்திப்பு


சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் தான் அதிமுக அரசின் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறத்திற்கு எடுத்துக்காட்டு. சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையில் கூரை கிடையாது. சமதளமான ஒரு சாலை கிடையாது. மழை நீர் வடிகால் இருக்காது. ஆனால், அம்மாவைப் பாராட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திருக்கும் ஒரு கட்-அவுட் 5 வருடத்திற்கு கண்டிப்பாக பேருந்து நிறுத்தத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜால்ராவின் மொத்த உருவம் தான் இந்த அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும்!!! எனவே அடுத்த வருடமும் இதே நிலைமை தான்.. துரைமுருகன் (திமுக பொதுப்பணித்துறை அமைச்சர்), மு.க.ஸ்டாலின் (திமுக உள்ளாட்சித்துறைஅமைச்சர்), மா.சுப்பிரமணியன் (முன்னாள் சென்னை மேயர்) பதில், சைதை துரைசாமியை (இன்றைய சென்னை மேயர்) திட்டிக் கொண்டிருப்போம்!!

டான்சி நகர் குப்பைக் கூளம்

எனது வீட்டிற்கு பக்கத்தில்

சரி திமுக அதிமுக தான் இப்படி என்றால், இவர்களின் மாற்றாக தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் தேமுதிக அவர்களை விட மோசமாக கொள்கைகளே இல்லாமல் இருக்கிறது. என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.சென்னையை விட்டு போய் விடலாம் என்றால், படித்த படிப்பிற்கு வேலை இங்கே மட்டும் தான் இருக்கிறது, கிடைக்கிறது. சொந்த ஊருக்கு போய் விடலாம் ஆனால், சொந்தமாக தான் வேலை தொடங்க வேண்டும். இல்லை வைத்திருக்கும் பணத்தை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.


இப்பொழுது தான் புரிகிறது வெளிநாடுகளுக்கு போகும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதன் காரணம். அங்கே எல்லாம் பிரச்சினை இல்லை என்பதல்ல. ஆனால் இது போன்ற வாழ்வாதார பிரச்சினைகள் இல்லை. பிறந்த நாட்டிற்கும் கல்வி கொடுத்த ஊருக்கும் ஏதும் செய்யாமல் ஓடிப் போகும் மகனிடம், "தேவர் மகன்" சிவாஜி கூறும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. விதை விதைத்தவுடன் பழம் சாப்பிட வேண்டும் என்றால் முடியாது என்று எனக்கும் புரியும். ஆனால் விதை விதைக்கப் படுகிறதா என்றாவது தெரிய வேண்டுமே?? நான் தான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறேன். என் சந்ததியினருக்காவது தேர்ந்த வாழ்க்கை கிடைக்குமா என்பதாவது தெரிய வேண்டுமே!!

பாரதி கடவுளிடம் முறையிடுவது போன்ற ஒரு காட்சி பார்த்து இருக்கிறேன் "பராசக்தியே! காலையில் எழுந்தவுடனேயே பணப்பிரச்சினை. குழந்தைக்கு காய்ச்சல், எனக்கு ஏற்பட்டு இருக்கிற புதிய பழக்கத்தினால் தலை வேறு கிறுகிறுக்கிறது. நான் என்ன செய்வேன்? என்னை இந்த அற்பமான அரிசி உப்பு பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்ய மாட்டாயா? .... கடைசியாக சொல்கிறேன் நீ இப்படி எல்லாம் என்னை அற்ப தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தால் நான் நாஸ்திகனாகி விடுவேன்". இதே நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.

அடுத்த தேர்தலிலாவது படித்த நேர்மையானவர்கள், அநீதியைக் எதிர்ப்பவர்கள், மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நிர்வாகம் சீர்பட வேண்டும். அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நானும் இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல தான் வேண்டி இருக்கும். 

Saturday, March 26, 2011

தலைப்பெல்லாம் தேவையில்லை!!

தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கான தொடர் அடையாளமே திமுக அதிமுக ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள். திமுக தலைமைக்கு ஒரு அரிய இடம் தமிழக அரசியலில் உண்டு. எந்த விதமான மோசமான உத்தியையும் அவர்கள் தான் முதலில் அறிமுகப் படுத்துவார்கள். நான் இப்போது நடப்பவற்றை வைத்து கூற வில்லை. கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே அப்படிதான்!

கேடு கெட்ட கூட்டணி அரசியல், மொழி உணர்வைத் தூண்டி அரசியலில் தன்னிடத்தை உறுதிபடுத்துதல், சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது (1967). மதுவை அரசாங்கமே விற்பது, ஊழல் (1967 - 1974), இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் (2006 - 2011) என தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து புற்று நோய்களுமே திமுகவின் முத்திரைகளே! 

திமுகவின் இந்த போக்கினை, நியாயமாக மக்கள் எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால், மக்களோ, திமுகவை எதிர்த்த கட்சிகளோ, அதைச் செய்யாமல், அவர்களை அடக்க அவர்களின் பல்லையே பயன் படுத்தினார்கள். சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது என்னும் உத்தியைப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர், திமுகவை தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சி பக்கம் எட்டி பார்க்க கூட விடவில்லை. அதைத் தான் இன்று ஜெயலலிதா செய்திருக்கிறார். கருணாநிதியின் இலவசங்களை தோற்கடிக்க தானும் இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார். தமிழகத்தின் நிலைமை ஆங்கிலத்தில் சொல்வதானால் ஒரு "catch 22"  மாதிரி ஆகிப் போய்விட்டது.

கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா.

அரசியல்வாதிகளிடம் போய் கேட்டால், "மக்கள் இலவசங்களையும் ஓட்டுக்கு பணத்தையும் தான் விரும்புகிறார்கள். வரிசையில் நிற்க விரும்புவதில்லை. வேலை சீக்கிரம் ஆக வேண்டியதன் காரணமாக லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் இலவசங்களை எதிர்த்தால் எங்களைத் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள். கூட்டணி வேண்டாம் என்று தனியாக நின்றால் புறக்கணிக்கிறார்கள். பின்னர் நாங்கள் என்ன செய்வது? இலவசங்களும் கூட்டணி தான் எங்களைக் காப்பாற்றுகிறது". அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மக்கள் தான் ஊழலையும் இலவசத்தையும் ஆரம்பிப்பதாக தெரியும்.

"ஊழலற்ற ஆட்சி என்பதே கானல் நீர். எதை வைத்து நம்புவது? போன வருடத்தில் மட்டும், ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் என கணக்கிலடங்கா பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சி புரிந்து தங்கள் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் செழிப்புற செய்திருக்கிறார்கள் தவிர சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன நடந்திருக்கிறது? யார் வந்தாலும் ஒன்று தான். கட்சியையோ அரசையோ நம்பி பயனில்லை. எங்கள் பணம் தான் எங்களைக் காப்பாற்றும். அதைச் சம்பாதிப்பது தான் எங்கள் குறிக்கோள். அதனால் தான் பணமோ பொருளோ எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்." இது தான் மக்களின் எண்ணம். 

கேள்வி எண் 1) இதில் யார் முதலில் மாறுவது? மக்கள் மாற வேண்டுமா? இல்லை அரசியல்வாதிகளா? எப்படி மாற்றம் கொண்டு வருவது?

வியாபாரமும் சுயநலமே வாழ்வியல் நோக்கம்

எல்லாவற்றையும் வியாபாரமாகவும் பணமாகவும் பார்ப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம். மொழி உணர்வைத் தூண்டி தமிழ் உணர்வை ஒன்றுப்படுத்தியது திமுகவின் தவறில்லை. ஆட்சிக்கு வந்த பின் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது தான் தப்பு. இன்று வரை தமிழை ஆட்சி மொழியாக்க முடியாததும் அதற்கு முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பது தான் கோளாறு. அதை ஓட்டு சம்பாதிக்கும் உத்தியாக, ஆட்சிக்கு வர பயன்படும் ஒரு வழியாக்கியது தான் பிழை. அதனால் தான், "உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம் ஹிந்தி என்று எல்லா மொழிகளையும் படித்து விட்டு பல்லாயிரம் கோடி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், ஆனால் நாங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமா" என்று தமிழக மக்கள் கருணாநிதியிடம் கேட்கிறார்கள். தமிழ் மீதுள்ள பற்றால், சிலர் தமிழ் படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. "கற்றது தமிழ்" படம் பார்த்தீர்கள் தானே! பின்னர் தமிழ் படிக்க யார் வருவார்கள்?

+2 வில் பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும் நண்பர்கள் எனக்கும் உண்டு. இதே அவர்கள் பிரெஞ்சு மொழியில் மீதுள்ள ஆர்வத்தில் படித்தால் நாமும் ஆதரிப்போம். ஆனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாது என்று தானே படித்தார்கள். மாணவர்கள் படிப்பதையே வியாபாரமாக பார்த்தால், அவர்கள் நாளை அதிகாரிகள் ஆகும் பொழுது லஞ்சம் வாங்காமல் ஏதேனும் காரியம் செய்வார்களா?

அதே போல் தான் மதுவும் டாஸ்மாக் பிரச்சினையும். மது விலக்கு அமலில் இருந்த போதும், குடிப்பவர்கள் இருந்தார்கள் என்றாலும், ECR சாலையில் குடித்து விட்டு வண்டியோட்டி சாகவில்லை. எல்லாவற்றையும் விட மாணவர்கள் கையில் மது பாட்டில்கள் போனது தான் மிகப் பெரிய பிழை. கல்லூரியில் படிக்கும் போது, தன் சொந்த சம்பாத்தியம் இல்லாத போதும், குடித்து விட்டு வரும் மாணவர்கள் தமிழ் நாட்டில் உருவாகுவதற்கு அரசின் டாஸ்மாக் கொள்கைகளும், சாராயம் எளிதில் கிடைப்பதும் தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா? அரசு தொடங்கினாலும், மாணவர்கள் யோசிக்காமல் போவது ஏன்? இன்று பேஸ்புக்கில் திமுக அதிமுக வை விமர்சிப்பவர்கள் பலரும் தங்கள் கல்லூரி காலத்தில் சாராயம் குடித்து தவறான உதாரணமாக இருந்தே உள்ளனர். போதையில் அதி வேகமாக வண்டி ஓட்டி நண்பர்களிடம் தங்கள் பராக்கிரமத்தை காட்டி பெருமை பட்டுள்ளனர். 

கேள்வி எண் 2) 1967ல் மொழி போராட்டத்தில் தமிழுக்காக உயிர் விட்ட மாணவர்களின் சிந்தனை எப்படி இருந்தது? இன்று குடித்து விட்டு, பஸ் டே என்று பொது சொத்தை நாசமாக்கும் மாணவர்கள் எங்கே?

கடைசியாக...

அடிமைப் பட்டு கிடந்த நாம் விடுதலை பெறுவதற்கு, போராட்டத்தில் தங்களைப் பற்றியோ, பணம் சம்பாதிப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் ஈடுபட்டதே காரணம். ஜாலியன் வாலா பாக் படுகொலையில் உயிரிழந்த குழந்தைகளை எண்ணிப் பாருங்கள்.  அந்த குழந்தைகளுக்கு நாம் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம். விடுதலை போராட்ட காலத்திலும் அரசியலை தவமாகவும், அதில் ஈடுபடுவதையும் தியாகமாகவும் கருதிய இந்தியர்கள், தமிழர்கள் இன்று சுயநலமாகவும், வியாபாரிகளாகவும் மாறிவிட்டனர். 

தமிழ் நாட்டில் இந்தியாவில், ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. நான் கூறுவது தேர்தல் கட்சி அளவிலான மாற்றத்தைப் பற்றி அல்ல. சமுதாயம் அளவிலான மாற்றம். வியாபார நோக்கை விடுத்து, வாழ்வியல் முறைகளை வளப்படுத்தும் மாற்றம். 

தியாகமே மாற்றத்திற்கான முன்னுரை. அதை நாம் செய்யத் தான் வேண்டும். மாற்றம் எப்படி நிலையானதோ, அது மாதிரி தான் தியாகமும். அது நிலையானது மட்டுமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வியல் முறைகள் மனித சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் இருக்காது.

நண்பர்களே, இந்த தளத்தை ஒரு பொழுது போக்கும் இடமாக பார்ப்பவர்களே அதிகம். மாறாக இங்கிருந்து சிந்திப்பதற்கு பொருள் எடுப்பவர்கள் குறைவு. எனினும் இன்னும் சமுதாயம் மீதுள்ள நம்பிக்கையினாலும், எகிப்து புரட்சி கொடுத்த தைரியத்தினாலும் தான் இங்கு எழுதுகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு அமைப்பினை ஏற்படுத்தி மாற்றத்திற்காக பாடுபடலாம். கொள்கைகளை அமைத்து மக்கள் மற்றும் நம் பிரச்சினைகளுக்காக போராடலாம்.  ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி தியாகம் செய்ய வேண்டி இருக்க வேண்டும். உயிர் தியாகம் எல்லாம் இல்லை. உங்கள் பணத் தியாகமோ அல்லது நேரத் தியாகம் மட்டும் தான். இந்த மாற்றம் ஏற்படாவிட்டால், நம் குழந்தைகள் / அடுத்த தலைமுறை இந்த சமுதாயத்தில் படும் பாட்டை நாம் இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு பார்த்து, நிம்மதியில்லாமல் தான் சாக வேண்டியிருக்கும். 

Wednesday, January 12, 2011

சீமானுக்கு ஒரு கடிதம்!!

"அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வேன் - சீமான்.."

நான் எதிர்பார்த்தது போலவே நடந்தேவிட்டது. ஆனால் மகிழ்ச்சி இல்லை. உங்களின் எல்லா கொள்கைகளிலும் உடன்பாடு இல்லையென்றாலும், இலங்கையில் உள்ள ஈழ தமிழர்களுக்கு வாழ்வில் ஏதேனும் திருப்பம் ஏற்பட, அவர்களுக்கு ஒரு சுகாதாரமான அன்றாடம் உணவு கிடைக்கும் ஒரு வாழ்வு கிடைக்க உங்கள் வலிமையும் பேச்சும் நெஞ்சுரமும் பயன்படும் என்று நம்பினேன். நம்புவர்கள் உள்ளனர் தமிழ்நாட்டில். ஆனால் அது எல்லாம் போய்விட்டது இந்த அறிவிப்போடு.

தமிழ்மக்களின் ஆதரவே இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழரின் வாழ்க்கை மாற்றத்திற்கு முக்கியம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தால் தான், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்மக்களின் ஒற்றுமையும் ஆதரவும் உள்ளது என்று உலகுக்கு தெரிய வரும் என்ற கணக்கு சரியானது தான். ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதும், தமிழ்மக்கள் ஆதரவைக் காண்பிப்பதும் முதல் படி மட்டுமே. இரண்டாவது படி உங்கள் கோரிக்கையைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற கூட்டணி மூலமாக அரசாங்கத்தை ஏற்க வைப்பது. ஆனால் நீங்கள் ஆதரிக்கப் போகும் கூட்டணியின் தலைவி அந்த உத்தரவாதத்தைத் இன்னும் தராத போது, தேர்தலுக்குப் பின்னர் ஈழத்தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, அவர்தம் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வர உங்கள் திட்டம் தான் என்ன?

சரி, எல்லாவற்றையும் திட்டமிட முடியாது தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக தன் முந்தைய ஆட்சிக்காலங்களில் பொடா சட்டங்களின் மூலம் ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு ஆதரவாக பேசியவர்களைச் சிறையில் வைத்தவர்கள் கூடவா போய் கூட்டுச் சேர்வது? இரண்டு மாதத்திற்கு முன்னர் நாங்கள் வேண்டுமானால் ஆதரவு தருகிறோம், திமுகவை கழட்டி விடுங்கள் என்று காங்கிரஸில் போய் தஞ்சம் அடைந்தவர்களா ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு உதவப் போகிறார்கள்? அதிமுகவுக்கு ஆதரவு - இது கண்டிப்பாக அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு. ஈழப் பிரச்சினையை அரசியலாக்கி, அதிமுக கூட்டணிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்க பயன்படப் போகிறீர்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

இதுவரை நான் எழுதியது எல்லாம் ஈழத்தமிழரைக் கருத்தில் கொண்டு. இனிமேல் எழுதப்போவது தாய்தமிழகத்து மக்களைக் கருத்திற் கொண்டு. திமுக கூட்டணியால் தமிழக உரிமைகள் காக்க படவில்லை (முல்லை பெரியார், காவிரி), அது ஒரு ஊழல் கூட்டணி, குடும்ப அரசியல், என்று எண்ணற்ற காரணங்களைச் சொல்லி நீங்கள் சேர்ந்திருக்கும் இடத்திலும் இவை அனைத்தும் உள்ளன. பின்னர் எப்படி தமிழர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்? நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். ஆனால் எங்களுக்கு திரும்பவும் அதே நிலைமை தான்.

அண்மையில் வந்த சுடுகாட்டு கூரை ஊழல் தீர்ப்பு போதுமே, இதைப் புரிந்து கொள்வதற்கு. அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டு கூரையில் ஊழல் செய்ததற்காக, அடுத்து வந்த திமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் அதிமுக அமைச்சர் செல்வகணபதி. அவர் இப்பொழுது திமுகவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார்.  சுடுகாட்டு கூரை ஊழலும் மறக்கப்பட்டு விடுதலையும் "வாங்கி விட்டார்".  ஆக ஊழலில் இரண்டு கட்சிகளுமே ஒன்று தான்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவிகள் எரிப்பு என்றால், திமுக ஆட்சிக்காலத்தில் தினகரன் அலுவலகம் எரிப்பு. திமுக அரசு உமா சங்கர் IASஐ தூக்கி எறிந்தது என்றால், அதிமுக எல்லா அரசு ஊழியர்களையும் சிறையில் அடைத்தது. திமுகவில் அழகிரி,ஸ்டாலின்,கனிமொழி, தயாநிதி; அதிமுகவில் சசிகலா, தினகரன், சுதாகரன். திமுக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஊழல். அதிமுக ஆட்சியில் கணக்கில் அடங்கா ஊழல்கள்.  திமுகவிற்கு சீமான் என்றால், அதிமுகவிற்கு செரீனா. இப்படி இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும் போது, திமுகவை எதிர்த்து விட்டு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்பது உங்கள் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, திமுக அதிமுக யார் வந்தாலும் நடக்கப்போவது ஊழல் குடும்ப ஆட்சி தான். இதை மக்கள் நன்றாகவே அறிந்து உள்ளனர். எனவே தான், எந்த ஆதரவு இல்லாமல் வந்த விஜயகாந்த் 11% வாக்குகள் பெற முடிகிறது. ஆனால் பிற கட்சிகளான பாமக மதிமுக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் ஆகியவை திமுக அதிமுகவை விட்டு வராமல் சேர்ந்தே இருப்பதால் தான் திமுக அதிமுக முக்கிய கட்சிகளாக இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது. மற்ற கட்சிகள் இரண்டாம் நிலை கட்சியாகவே இருக்கிறது. அதே நிலைமையை நோக்கித் தான் நீங்களும் இப்போது பயணப்பட போகிறீர்கள்.

மொத்ததில் உங்கள் அதிமுக ஆதரவு பிரச்சாரம் ஜெயலலிதாவுக்கு ஆட்சியைப் பிடிப்பதை இன்னும் கொஞ்சம் எளிதாக்கப் போகிறது. மற்றபடி தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் அதே நிலைமை தான் இன்னும் 5 வருடத்திற்கு.மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் முடிவை. இல்லா விட்டால் நீங்கள் இன்னுமொரு வைகோவாக கூடிய சீக்கிரம் ஆகப் போகிறீர்கள்.

Saturday, December 04, 2010

ரௌத்திரம் பழகு - எதிர்ப்பைக் காட்டு


"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்பது போல, தகுதி என்று ஒன்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இருப்பதே இந்திய நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை. பிற நாடுகளிலும் இப்படியே இருந்தாலும், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம், கொள்கை என்று ஒன்றும் தேவையில்லை என்பதே உண்மையான நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு காரணமாக இருந்தது 1990களில். இப்பொழுது நாட்டின் மீது அக்கறை உள்ள இளைஞர்கள் உள்ளார்களா என்றே ஐயமாக உள்ளது. நான் பேசுவது எல்லாமே நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஊழல்களையும் அதில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் பற்றித் தான். காலம் செல்ல செல்ல, கட்சி ஆரம்பித்தது எதற்காக என்பதே தலைவர்களுக்கு மறந்து விடுகிறது. 

பெரியார், திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் ஆரம்பித்த போது, சாதிக் கொடுமை மற்றும் சாதி வேற்றுமைகளைக் களைய , தமிழர்க்கென ஒரு கட்சி தமிழர்களின் தனித்துவத்தைக் காண்பிக்க (திராவிட நாடு) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்று ஏகப்பட்ட காரணங்களை முன் வைத்தே, தன் கட்சிக்கு கொள்கைகளை வகுத்தார். அந்த காரணங்களும், கொள்கைகளும் போக, தன் கட்சியினருக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ வந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒரு விதியைக் கட்சிக்கு வகுத்தார் பெரியார். அதை அவர் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக கடைபிடித்தார். 

பின்னர், பெரியாரிடம் ஏற்பட்ட வேறுபாடுகளால், தி.க. வில் இருந்து பிரிந்து திமுகவை அண்ணா உருவாக்கிய  போதும்,  தி.க. வின் கொள்கைகளையே தி.மு.கவும் பின்பற்றும் ஆனால் திகவை போல் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவோம்.இந்த மாற்றம் நம் கொள்கைகளைச் செயல்படுத்தவே என்று அறிவித்தார். இது திக மற்றும்  திமுக இடையிலான வித்தியாசமாகவும் ஒரு புதிய கட்சி தோன்ற ஒரு காரணமாகவும் இருந்தது. 1949ல் திமுக உருவாகி 1967ல் ஆட்சியையும் பிடித்தது. அண்ணா 1969ல் இறந்த பின்னர், கருணாநிதி திமுகவின் தலைவர் ஆனார்.

அண்ணாவின் காலத்திலேயே திமுக தன் கொள்கைகளில் அவ்வபோது மாறிக் கொண்டே இருந்தது. முதலில் திகவின் கொள்கைகளில் இருந்து எடுத்து வந்த திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கொள்கை, பின்னர் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாறி, அதன் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று மாறி இன்றும் இருந்து வருகிறது.  இந்தி எதிர்ப்பு மற்றும் மொழிப்போராட்டம்... அண்ணா இருந்த வரை, மாறிக்கொண்டே இருந்தாலும், கொள்கை என்று ஒன்று பெயரளவுக்கு இருந்து வந்தது. அண்ணா போனார். அவரோடு கொள்கைகளும் போனது. திமுகவின் கொள்கை என்ன என்று இன்று எனக்கு தெரியாது.

திமுகவில் இருந்து அதிமுக உருவான போது, அது கொள்கைகளை எதிர்த்து என்பதை விட கருணாநிதியை எதிர்த்தே உருவானது. அண்ணா பெரியாரிடம் வேறுப்பட்டு புதுக்கட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆர் கருணாநிதியை எதிர்த்து அதிமுகவை உருவாக்கினார். எனவே அதிமுகவின் கொள்கைகள் என்ன என்று மக்கள் என்றுமே தெரிந்து கொள்ள முனைந்தது இல்லை. அது தான் ஆரம்பம். அன்று முதல் தமிழ்நாட்டில் எண்ணற்ற கட்சிகள் உருவாகின. எந்த கட்சிக்கும் தனியே கொள்கை என்றோ, கட்டுப்பாடுகள் என்றோ எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே இருப்பது தான் எங்கள் கொள்கை என்று மாறிப் போனது. "ஊருக்கொரு கட்சி, ஆளுக்கொரு கொள்கை" என்று எம்.ஆர்.இராதா கூறுவது போல் ஆகி விட்டது. 

 கட்சிக்கென்று கொள்கை என்று வேண்டாம். தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடாவது வேண்டாமா?ஊழலைப் பொறுத்த வரை நம் நாட்டின் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நிலைப்பாடு தான் என்ன?

காங்கிரஸ் ஊழல் கட்சி என்று கூறிக்கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக தாங்கள் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் ஊழலைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. ஆக காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது கொள்கையிலோ நிலைப்பாடுகளிலோ!

திமுக மந்திரி அ.ராசா ஊழல் செய்துள்ளார் அவரை நீக்க வேண்டும். திமுக தரும் ஆதரவை நாங்கள் வேண்டுமானாலும் தருகிறோம் என்று அதிமுக கூறுகிறது. காங்கிரஸ் அரசிற்கு தெரியாமலா இவ்வளவும் நடந்து இருக்கும்? அது மட்டுமில்லாமல், காங்கிரஸ் முன் காலங்களில் போபர்ஸ், காமன்வெல்த் போன்ற ஊழலகளில் ஈடுபட்ட கட்சி தானே! அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு அதிமுக எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? உங்கள் நிலைப்பாடு என்ன வென்றால் திமுகவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஊழல் செய்து கொள்ளலாம் என்பதா? கொள்கை / நிலைப்பாடு என்று ஒன்றும் கிடையாது. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே கொள்கை. 

மதிமுகவும் திமுகவை எதிர்த்தாலும், காங்கிரஸை எதிர்ப்பது ஈழப் பிரச்சினைகளுக்காக. ஆனால் ஊழல் மட்டும் என்ற பேச்சு வரும் போது என்ன செய்யும் என்று தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலைகளில் ஈழம் தீரப்போகும் ஒரு பிரச்சினையாக தெரியாதலால், கண்டிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸிற்கு ஆதரவாக மதிமுக போகாது. மதிமுகவுக்கும் தமிழத்தைப் பொறுத்த வரை கொள்கையோ நிலைப்பாடோ கிடையாது. கருணாநிதியை எதிர்ப்பதை கொள்கை. ஈழ ஆதரவு என்பது நிலைப்பாடு. 

பாமகவின் கொள்கைகளையோ, நிலைப்பாடுகளையோ விமர்சிக்க தேவையில்லை என்பதே ஊரறிந்த உண்மை. அந்த கட்சி தேர்தல் மற்றும் பதவிகளுக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும், தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.

தேமுதிகவின் கொள்கை என்ன என்று விஜயகாந்திடம் கேட்டார்கள். அவர் கூறிய பதில் "தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை ஒழிப்பதற்கு என்ன கொள்கை தேவைப்படுமோ அது தான் என் கட்சியின் கொள்கை". ஆக கொள்கை என்று ஒன்று இப்போதைக்கு கிடையாது. இந்த தேர்தலில் தனியாக நிற்க முடியாது, நின்றால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் இன்னும் தன் நிலைப்பாடுகளைத் தெளிவாக கூறாமல் இருக்கிறார்.

கடைசியாக கம்யூனிஸ்டுகள். தேர்தலில் போது அவ்வ போது கூட்டணி மாறினாலும், இவர்களிடம் கொள்கை என்று கொஞ்சம் உள்ளது. தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு, அமெரிக்காவிடம் பணிந்து போவதற்கு கண்டனம், ஊழல்களை எதிர்த்து போராடுவது, ஒருவர் 3 முறைக்கு மேல் பதவிக்கு வர முடியாது, அரசு சம்பளத்தை கட்சியிடம் கொடுத்து விட்டு, கட்சியிடம் இருந்து குடும்பம் நடத்துவதற்கு பணம் வாங்கிக் கொள்வது, எளிமை, தொழிலாளர்களுக்காக போராடுவது என்று கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளைப் பட்டியலிடலாம். நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, சரியோ தவறோ, இவர்களிடம் கொள்கை என்று ஒன்று கண்டிப்பாக உள்ளது. நிலைப்பாடு - காங்கிரஸ் அமெரிக்காவிற்கு அடி பணிகிறது தாராளமயம் மற்றும் தனியார்மயத்தை ஆதரிப்பதால், காங்கிரஸிற்கு எதிர்ப்பு. பாஜக ஒரு மதவாத கட்சி என்று எதிர்ப்பு. 

(இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன, அவை எல்லாவற்றையும் பற்றி எழுதுவது என்றால் இந்த பதிவு முடியாது. ஏனெனில் அவ்வளவு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தொடர்ந்து வரும் இந்த சுட்டியை பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_Tamil_Nadu)

ஆக இன்றைய சூழலில், கொள்கை, நிலைப்பாடு உள்ள கட்சிகள் என்று பார்த்தால், அது மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளிடம் மட்டும் தான்.

எப்படி வந்தது இந்த நிலைமை? கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தும் தைரியம் எங்கிருந்த வந்தது தலைவர்களுக்கு? நம்மிடம் இருந்து தான். "ரௌத்திரம் பழகு" என்று பாரதி கூறியதை நாம் மறந்து விட்டோம்.  சமுதாயத்தில் என்ன நடந்தால் என்ன? யாரைப் பற்றியும் தவறாக கூறாதே! ஒருவர் செய்வது சொல்வது தப்பு என்று தெரிந்தாலும் வீணாக அதைப் பற்றி அவரிடம் கூறி, அவருடைய நட்பை பகைத்து கொள்ளாதே! அவர் சொல்வதை செய்து விட்டு, நீ இருக்கும் இடத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றுப் பார், அப்புறம் வெளிநாடுகளில் எப்படி போய் பணம் சம்பாதிப்பது என்று உன் வாழ்க்கையை பார். இப்படி தான் இன்றைய ITஇளைஞர்களின் எண்ணம் உள்ளது. எதிர்ப்பே இல்லாவிட்டால் நோஞ்சான் கூட நம்மீது கல்லெறிவான். அது போல நாம் எதிர்ப்பே எதற்கும் காட்டாவிட்டால், நம் நாடு இப்படி தான் இருக்கும்.

பார்த்தீர்களா, இங்கிலாந்தில் இராஜபட்சேக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை.. அவர்கள் இத்தனைக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்பிற்கு பயந்து கூட்டத்தையே ரத்து செய்து விட்டது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். ஆனால் நாம் பிறந்த வளர்ந்த தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு ஒன்றும் செய்யவில்லை இராஜபட்ச இந்தியா வந்த போது. அது தான் நமக்கு தெரிந்தது. அவர்கள் பழகியிருக்கும் ரௌத்திரம் சீக்கிரம் நாமும் பழக வேண்டும். இல்லாவிட்டால், இன்னொரு முறை நாம் அடிமைப் பட்டு போனாலும் போவோம். 

இதைப் படிக்கும் பேஸ்புக் நண்பர்களே, இந்தியர்களே, தமிழர்களே, இளைஞர்களே, ஏதேனும் பதிவு செய்யுங்கள், உங்கள் எதிர்ப்பாக. பேஸ்புக் மற்றும் அனைத்து ஊடகங்களும் புகைப்படம், காணொளி, துணுக்குகள் பரிமாறிக் கொள்ள ம்ட்டுமன்று, உங்கள் எதிர்ப்பை உரத்து சொல்வதற்காகவும் தான். பார்க்கிறேன், எத்தனை பேர் பதிவு செய்கிறீர்கள் என்று. நானே முதல்வனாக இருக்கிறேன்.

Friday, September 24, 2010

காமன்வெல்த் அலங்கோலம்!!

புலியைப் பார்த்து சூடு போட்ட கதையாகிப் போனது, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். சீனா ஒலிம்பிக்ஸ் நடத்தியதே, நம்மால் முடியாதா என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாம் பூனை தான் என்று அரசியல்வாதிகள் நிரூபித்துவிட்டனர். ஏற்கனவே "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் எடுத்து, நம் நாட்டின் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி, 8 ஆஸ்கர் விருதுகளையும் தட்டிக் கொண்டு போய் நம் மானத்தை வெளிநாடுகள் வாங்கி விட்டன. மீதி இருக்கும் மானத்தை வாங்குவதில், சுரேஷ் கல்மாடிக்கும், எம்.எஸ் கில் க்கும் நடுவில் பயங்கர போட்டி வேறு. 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, 1996ல் இருந்து இன்று வரை, 14 ஆண்டுகளாக இருப்பவர் உயர்திரு.சுரேஷ் கல்மாடி. இவருக்கும் விளையாட்டுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா என்றால் கிடையாது. இந்திய விமான படையில் பணி புரிந்து இருக்கிறார். காங்கிரஸில் சேர்ந்து, MP ஆகி விட்டதால், ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்பதால், இணை இரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறார், நரசிம்மராவ் அமைச்சரவையில். ஒரு பட்ஜெட் வேறு தாக்கல் செய்து இருக்கிறார். மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்காதலால், 1996 ல் இருந்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகக் இருக்கிறார். ஒரு முன்னால் இரயில்வே அமைச்சர் வேறு ஒரு துறைக்கு அமைச்சரானால் ஏற்றுக் கொள்ளலாம். அதுவுமே, இரயில்வே சம்பந்தப்பட்ட துறையாக இருந்தால் தான் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால், இரயில்வேயில் இருந்து, திடீரென தனக்கு சம்பந்தமேயில்லாத ஒலிம்பிக் சங்கத்தில் குதித்து உள்ளார், இந்த மாண்புமிகு மாஜி. இது தான் தொடக்கம். இது எங்கு சென்று நிற்கிறது என்றால், மு.க.அழகிரி உரத்துறை அமைச்சராக இருப்பதில். இன்னும் தொடர இருக்கிறது.  

ஒலிம்பிக் சங்கத்தின் வேலையே, ஒலிம்பிக்ஸ் செல்லத் தகுதியான வீரர்களைச் கண்டுபிடிப்பது. எந்த ஒரு விளையாட்டிலுமே பெரிதாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒருவரை சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் வைத்து இருப்பது நம் நாட்டின் தனித்துவம். அதனால் தான் ஒலிம்பிக்ஸ் ல் இருந்து வெறும் காத்து தான் வருகிறது. பதக்கம் வரவே மாட்டேங்கிறது.

அடுத்த எம்.எஸ். கில். இவரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அது மட்டுமே போதுமானது. அண்மையில் மல்யுத்த வீரர் சுசில் குமார், மாஸ்கோவில் தங்கம் வென்று, விளையாட்டு அமைச்சரான எம்.எஸ். கில்லைப் பார்க்க வந்த போது, தன்னால் முடிந்த அளவு, சுசில் குமாரின் பயிற்சியாளர்களை அவமதித்து அனுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க போன போது, பயிற்சியாளரை வெளியே தள்ளாத குறை. பயிற்சியாளர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இன்னும் இந்த மாண்புமிகு.

அதே போல், பாட்மிண்டன் சாம்பியனான சாய்னா வந்து சந்தித்த போது, அவரின் பயிற்சியாளரான உலகப் புகழ்பெற்ற பாட்மிண்டன் ஆடவர் சாம்பியனான கோபிசந்தைப் பார்த்து இவர் யார் என்று கேட்டவர் தான் இந்த எம்.எஸ்.கில். இதற்கு முன்னர் இவர் பார்த்த வேலை, இந்தியாவின் தேர்தல் ஆணைய அதிகாரி. இவருக்கும் விளையாட்டுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது. ஒரு சீக்கியர் என்பதால் இவருக்கு வந்த சேர்ந்த பதவி இது என்று நினைக்கிறேன்.



இப்படியாக விளையாட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் திட்டமிட்டு நடத்தினால், காமன்வெல்த அலங்கோலாமாகத் தான் இருக்கும். தலைவரும், அமைச்சரும் நேர்மையானவர்களாகவே இருந்தால் கூட, விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாத இவர்களால், எப்படி அவர்கள் கீழே உள்ள அதிகாரிகள் தவறு / ஊழல் செய்வதை கண்டுபிடிக்க முடியும்? 

இவர்களுக்கு இந்த பதவியைக் கொடுத்த மத்திய அரசே காமன்வெல்த் சூட்டிற்கு காரணம். நண்பர்களே, இதைப் படித்து விட்டு உங்கள் எதிர்ப்பை நீங்களும் எப்படியாவது சொல்லுங்கள். இந்த இருவரும் பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும். கொஞ்ச நஞ்சமல்ல, 70000 கோடி செலவு செய்து நடத்தும் விளையாட்டு போட்டி இது. 

Sunday, September 19, 2010

என்று வரும் அரசின் தகவல் தொழில்நுட்ப திட்டங்களுக்கு விடிவு?

அண்மையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இனிமேல் கால் கடுக்க நிற்க வேண்டாம், இணையம் வழியாக வேலை வாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு / புதுப்பித்து செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்தவுடன், யார் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, நான் மிகவும் மகிழ்ந்து போய் இருந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி எல்லாம், வலைத்தளம் தொடக்க நாளான, 15/09/2010, அன்றோடு போய்விட்டது. தொடங்கப்பட்ட நாள் முதலே அது வேலை செய்ய வில்லை. இன்று வரை அது சரியும் செய்யப்படவில்லை. (www.tnvelaivaippu.gov.in)


நான் ஏன் மகிழ்ந்து போயிருந்தேன்? எப்படியாயினும் என்னுடைய வேலையான தனியார் IT நிறுவன வேலைகளுக்கு அங்கு போய் பதிவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனாலும் நான் மகிழ்ந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப பின்ணணியே. என் அப்பா,தனக்காக ம்ற்றும் தன்னுடைய தம்பிகளுக்காக, 20 வருடங்களுக்கு முன்னால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கால் கடுக்க நின்று இருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் கூறிய போது, என் மனதும் வலித்தது. இன்றும் என் குடும்பத்தில் கிராமங்களில் உள்ளவர்கள், தூத்துக்குடி சென்று பதிந்து விட்டு வ்ருவது என்க்கு தெரியும். ஒரு நாள் அதற்காகவே செலவிடுவர். காலையிலேயே சென்று விடுவர், வரிசையில் முதலில் இடம் பிடிப்பதற்காக.. ஆனாலும் அதற்கு முன்னரே வரிசையில் குறைந்தது 100 பேராவது நிற்பர். காலையில் சென்றால் மதியம் பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்கு எப்படியும் சாயுங்காலம் ஆகிவிடும். சரி, இந்த பிரச்சினை எல்லாம் இனிமேல் இல்லை என்று நினைத்தால் விடிவு உனக்கு அவ்வளவு சீக்கிரம் தருவோமா என்று என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது தமிழக அரசு.

ஏன் நம் நாட்டில் மட்டும் இப்படி எதுவுமே வேலை செய்ய மாட்டேன் என்கிறது? அதற்கு அந்த வலைத்தளத்தைப் பார்த்தாலே போதும். காரணம் புரிந்துவிடும். வலைத்தளத்தில் நம்மால் பதிவு செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால் கலைஞரையும், மு.க.ஸ்டாலினையும் கண்டிப்பாக பார்க்க முடியும். ஏதோ அவர்களே இந்த வலைத்தளத்தை உருவாக்கியது போல. தமிழக அரசு சம்பந்தப்பட்ட எந்த வலைத்தளத்தை வேண்டுமானாலும் போய் பாருங்கள்! எல்லாவற்றிலும் கலைஞர் படம் போடப் பட்டிருக்கும். கலைஞர் என்ன நினைக்கிறார்? அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரா? அடுத்த ஆட்சியில் அம்மையார் வந்தால் முதல் வேலையே இந்த படங்களை எல்லாம் எடுப்பது தானே! இதைக் கூடவா தலைச்சிறந்த அரசியல் சாணக்கியரான கலைஞருக்கு சொல்லித் தர வேண்டும்?

http://www.chennaicorporation.gov.in/
http://www.mtcbus.org/

பின்லாந்து நாட்டிலுள்ள பேருந்து தகவல் வலைத்தளத்தையும் பாருங்கள் (http://www.reittiopas.fi/en/). அது எவ்வளவு அழகாக வேலை செய்கிறது? ஆனால் தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது போக்குவரத்து கழக வலைத்தளம். இத்தனைக்கும் இந்தியாவில் தான், உலகிலேயே சிறந்த மென்பொருள் வல்லுனர்கள் உள்ளதாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏன் நம்மால் மட்டும் முடியவில்லை?

தலைவர்களுடைய படங்களைப் போடுவதற்கு எடுத்த சிரத்தையில் சிறிதேனும், அதை இயங்க வைப்பதில் இருந்து இருந்தால், அது கோடானு கோடி மக்களுக்கு பயன் பட்டிருக்கும். ஆனால், நம் ஆட்சியாளர்கள் தங்கள் பெயரை நிலை நாட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். எல்லா பேருந்து நிழற்குடைகளிலும், அதை எந்த MLA / MP தொகுதி நிதியிலுருந்து கட்டப்பட்டிருக்கிறதோ அதை உடனே எழுதப்படுகிறது. அதனால் மக்களுக்கு என்ன பயன்? ஏன், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு கல் பலகைகளில், அம்மையார் திறந்து வைத்ததாகவும், அய்யா அடிக்கல் நாட்டியதாகவும் இருப்பது போல், உலகில் எங்கும் நாம் பார்க்க முடியாது. தமிழக அரசின் நிதியில் இருந்து பணம் கொடுத்து, அரசு சம்பளத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு, கொத்தனார்களால் தினக்கூலிக்கு கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு..:)

என்ன தெரிகிறது இதிலிருந்து? தன் பெயரை நிலைநாட்டி, எப்பொழுதுமே ஆட்சியில் இருப்பது தான் இவர்களின் குறிக்கோள். காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த போது, காமராஜர் மதிய உணவு திட்டம் என்று பெயர் வைக்கவில்லை. ஆனால், இப்போது கலைஞர் காப்பீட்டு திட்டம். ஏதோ கலைஞர் தன் சொந்தப் பணத்தில் காப்பீட்டு திட்டம் செயல் படுத்துவது போல். அம்மையாரும் இதற்கு விதி விலக்கல்ல. தன் ஆட்சிக்காலத்தில், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா விரைவு பேருந்து என்று தன் பெயரிலேயே பேருந்து விட்டவர் தான். ஆக மொத்தத்தில் மக்கள் நலன் முக்கியமே இல்லை. ஆட்சியில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் எப்படி வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யும்?

என்னுடைய கோபம் கலைஞர் அல்லது ஜெயலலிதா மீது அல்ல. இந்த வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யவில்லை என்பதில் தான் கோபம். அவர்களுக்கு எப்படியும் வலைத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை. ஆனால், இதைச் செயல் படுத்திய அரசாங்க அதிகாரிகள் என்ன கண்காணிக்கிறார்கள்? இப்படி ஒரு வலைத்தளம் உருவாக்கி கொடுத்தற்காக அந்த நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டாமா? அல்லது அபராதத் தொகை வாங்க வேண்டாமா? அல்லது எப்பாடுபடுத்தியாவது அதை அடுத்த நாளிற்குள் சரி செய்து இருக்க வேண்டாமா? IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இவ்வாறு ஒரு வலைத்தளம் வேலை செய்யாமல் போனால், ஒரு அமெரிக்க நிறுவனம் என்ன செய்யுமென்று? இந்நேரத்திற்குள், அந்த IT நிறுவனம் பேர் சந்தி சிரித்து இருக்கும். ஆனால் இங்கு இது ஒரு பிரச்சினையாகவே மதிக்கப் படவில்லை. என்னைப் போன்ற நாட்டின் மீதும், நாட்டு மக்களின் துன்பம் அறிந்த, IT இளைஞனிடமோ / IT துறையில் ஏதேனும் அனுபவம் உள்ள கண்டிப்பான ஒருவரிடம் இதை ஒப்படைத்து இருந்தால், இந்த திட்டம் நாட்டிற்கே ஒரு வழிக்காட்டி திட்டமாக செயல் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நபர்கள் அரசிடம் இருக்கிறார்களா என்பது சந்தேகமே!! சந்தேகம் தீர்க்கப்படும் வரை அரசு இப்படி தான் ஏமாந்து போய், நம்மைப் போன்ற மக்களையும் கால் கடுக்க வரிசையில் நிற்க வைக்கும்.

நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறையுள்ள IT இளைஞர்களின் கையில் என்று தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அதிகாரம் செல்கிறதோ, அன்று தான் இதைப் போன்ற வலைத்தளங்களுக்கும், ஏனைய பிற தகவல் தொழில்நுட்பத் திட்டங்களுக்கும் விடிவு உண்டு. அது வரை அல்லல் படுவதும் வரிசையில் நிற்பதும் தான் வழி :(