Saturday, December 26, 2009

தலைப்பில்லை (ஆனால் பிரிவுண்டு)

"அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. "

கயத்தாரில் இருந்து நாகர்கோவிலுக்கு அப்பாவின் பணி மாற்றம் காரணமாக பள்ளி மாறிய போது, பிரிவு என்றால் என்னவென்றே தெரியாது. நாகர்கோவிலில் 2 முதல் 9 பாதி வரை படித்து விட்டு மீண்டும் அப்பாவின் பணி மாற்றம் என்னைத் திருநெல்வேலி கொண்டு வந்தது. அப்பொழுதும் கண்ணீர் வரவில்லை. ஆனால் கண்டிப்பாக கவலையானேன். என் நண்பர்களான தேனு (தேனப்பன்), அபினவ், ஹரிஷ், ஸ்ரீராம், சந்தியா, Jaffrin (இந்த பெயரைத் தமிழில் எழுதினால் கண்டிப்பாக நான் நினைத்த மாதிரி நீங்கள் வாசிக்க மாட்டீர்கள் :) ), சுமி போன்றவர்களைப் பிரிய மிகவும் கவலைப்பட்டேன். ஆனாலும் அந்த கவலை மனதுக்குள்ளே மட்டும் தான் இருந்தது. திருநெல்வேலி சென்ற பின்னர், கடிதங்கள் எழுதி எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரி முடியும் வரை அந்த கடிதங்களை நான் வைத்தும் இருந்தேன். :)

9-12 வகுப்புகள் திருநெல்வேலியில். கல்லூரி கோவையில். என் கூடவே கிரிக்கெட் விளையாடிய மற்றும் படித்த நெருக்கமான நண்பர்கள் (அருணாச்சலம், பாலா, திருஞானம், பிரேம், கார்த்திக்) யாரும் கோவை வரவில்லை. மீண்டும் பிரிவு. ஆனால் இந்த முறை அப்பா அம்மா அக்காவையும் பிரிய வேண்டுமே!! நன்றாக ஞாபகம் இருக்கிறது. திருநெல்வேலியில் வீட்டில் sofa பக்கத்தில் இருந்துக் கொண்டே நான் Aristocrat (புதிதாக அப்பா வாங்கி கொடுத்தார்கள்) பெட்டியில் துணி எடுத்து வைத்து கொண்டிருந்தேன். இந்த தடவை கண்கள் பனித்தது. கண்ணீர் வந்தது. அப்பொழுது தான் தெரிந்தது பிரிவு என்றால் என்னவென்று. என் குடும்பத்தினர் மீது நான் வைத்து இருந்த அன்பும்..

பின் கல்லூரி பிரிவு. கோவை இரயில் நிலையத்தில் நான், பிரேம், ஜெய், விஜே, லான்சர், ஆர்த்தி, இந்திரா அழுதுக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு வந்தது போலவே, அலுவலகத்திலும் என் நெருங்கிய நண்பர்கள் யாரும் என் கூட வரவில்லை லான்சரைத் தவிர. மீண்டும் பிரிவு.. அலுவலகப் பணி காரணமாகவும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் என்னைப் பிரிவுக் சோகத்தில் இருந்து பிரித்தது. எனினும் கவலையுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் அந்த பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று. அந்த மின்னஞ்சல் இன்னும் இருக்கிறது என்னுடைய தொகுப்பில்.

61/2 வருடங்கள் ஆகிவிட்டது பிரிவைச் சந்தித்து..

அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. மனிதர்கள் முக்கால் வாசி தப்புக் கணக்கு தான் போடுகிறார்கள் கஜினி நயன்தாரா போல். (கஜினி பார்த்துக்கொண்டே எழுதுவதால் இந்த உவமை :) )

கடைசியாக 23 DEC 2009 ப்ரவீன், கெளசல்யா, (காயத்ரி பார்க்க வில்லை ஊருக்கு போயிருப்பதால்) ரபீக்கைப் பார்த்து விட்டு வந்ததோடு முடிந்தது என் TCS வாழ்க்கை.. அன்று இரவு தான் 61/2 வருடங்கள் சந்திக்காத பிரிவுச் சோகம் என்னைத் தாக்கியது.. உணர்ந்தேன் நாளை TCS 5 மாடியில் உணவில்லை.. அங்குள்ள மேசைகளில் அமர்ந்து கதை பேச முடியாது. அடுத்த கம்பெனி போனாலும் மேசை தான் இருக்கும். ரபீக், காயத்ரி, கெளசல்யா,தீபா,ப்ரவீன் இருக்க மாட்டார்கள்.. ஆறுவோடு கீழே போய் டீ கிடையாது.. கமல் ஜெகன் இடத்திற்கு போய் TCSல் என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல் கிடையாது.. கிருபாவிடம் பேசுவதற்கு TCS சம்பந்தமான விடயங்கள் இருக்காது.. கேண்டீன் நிர்வாகத்தோடு சண்டைகள் இனிமே இல்லை (யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பாலிமர் மக்கள் கண்டிப்பாக). இவை யாவும் யோசிக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.. ஆனால் என்ன பண்ணுவது?

பள்ளி நண்பர்களைப் பிரிந்ததால் தான் கல்லூரி நண்பர்கள் கிடைத்தார்கள், B.E. பட்டம் கிடைத்தது.. கல்லூரியைப் பிரிந்ததால் தான் TCS மற்றும் பிற நண்பர்கள் கிடைத்தார்கள்.. எனவே இந்தப் பிரிவும் எனக்கு ஒரு வெற்றியாகவும் மேலும் நண்பர்கள் உண்டாக்கும் ஒரு வாய்ப்பாகவும் மாற வேண்டும் என்பதே என் விருப்பம். பார்க்கலாம்.. அடுத்த பதிவில் புது கம்பெனி எப்படி இருந்தது என்று?


பி.கு: இதற்கு என்ன தலைப்பு என்றே தெரியவில்லை.. எனவே தான் "தலைப்பில்லை" என்பதே இதன் தலைப்பு..