Thursday, April 09, 2009

பேரணியாம் பேரணி!!

மீண்டும் பேரணி. எதற்காக? நாங்களும் அக்கறையோடு தான் இருக்கிறோம் ஈழத் தமிழர்கள் மீது என்று காட்டிக் கொள்ள. இது அனைவருக்கும் தெரியும் தானே! ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக.. சரி அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பற்றித் தெரிந்தது தானே? ஆனாலும் இதில் பங்கேற்கும் தொண்டர்களை என்ன சொல்ல?

அரசியல்வாதிகளைக் குறை கூறி என்ன பயன்? இன்று பேரணியில் பங்கேற்கும் தொண்டர்களில் எத்தனை பேர் உண்மையான உணர்ச்சியோடு, தமிழர் பாசத்தோடு நடக்க போகின்றனர். சும்மா நேரம் போகாமல் சில பேர், காசுக்காக சில பேர் என்று கூடுபவர்கள் தானே இவர்கள். ஆதலால் மக்களே ஈழத் தமிழர் நலனில் அக்கறைக் கொண்டு இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் சொற்பமே! சும்மா சொல்லிக் கொள்ளலாம்..போர் நிறுத்தம் ஏற்படாவிடில் தமிழகம் கொந்தளிக்கும் என்று. எல்லாம் வாய் ஜாலம். ஒன்றும் நடக்காது...

கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்ள வேண்டுமாம். கலந்து கொண்டால், போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? தமிழர்கள் காப்பாற்றப் படபோகிறார்களா? எல்லாம் தேர்தல் நாடகம்.

இங்கு பேரணி நடத்தாமல் இந்திய அரசை விட்டு போர் நிறுத்தம் செய்ய சொல்லலாமே, அது மாட்டோம். ஏனென்றால் காங்கிரஸ் அதை என்றும் செய்யாது. அப்படியென்றால் விட்டு விட முடியுமா? அதுவும் முடியாது. தேர்தலில் மக்கள் ஏதேனும் ஆப்பு தந்துவிட்டால் இருக்கிற மாநில ஆட்சியும் போய் விடுமே?

எனவே தான் பேரணி. இதற்காக நான் திமுகவை மட்டும் குறையாகக் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்குமே இந்த பிரச்சினை தீர்க்க வழி தெரியாது. எனவே இவர்களை நம்பி பயன் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியென்றால் எதற்காக பேரணி? மக்களிடம் தேர்தலுக்காக ஆடும் நாடகங்கள் தான் இவை.

மக்களே! தீர்க்க முடியாத பிரச்சினை என்றால், அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள். இப்படி தான் உப்பு பெறாத பேரணிகள், விளக்க கூட்டங்கள் நடத்தி நம்மை ஏமாற்றுவார்கள். கடைகளில் 1 ரூ ஏமாற்றினால் கொதித்து எழும் நீங்கள், நம்மை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறீர்கள்? என்க்கும் தெரியும். ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது என்று. ஆனாலும் சிறிதாக ஒன்றே ஒன்று செய்ய முடியும். நமது ஓட்டு. அதை போன தடவை திமுக கூட்டணிக்குப் போட்டீர்கள் என்று இந்த தடவை அதிமுக கூட்டணிக்கோ மூன்றாவது அணிக்கோ போடுவதற்கு பதில் "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" என்றுத் தோன்றினால், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள். 49 ஓ வை பயன்படுத்துங்கள். 49 ஓ என்பது எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்வது போலாகும். வாக்கு சாவடி அதிகாரி 49 ஓ பதிவு செய்ய உதவி செய்வார்.


எனவே மக்களே! தயவு செய்து உங்கள் ஓட்டுக்களை தரமானவர்களுக்கே போடுங்கள். ஜே.கே ரீத்திஷ், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், மு.க.அழகிரி, இராஜ கண்ணப்பன் போன்றவர்களா நமது தமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்னிறுத்தி தீர்க்க போகிறவர்கள்? தயவு செய்து சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேட்பாளரின் தரத்தை மட்டும் பார்த்து ஓட்டு பதிவு போடுங்கள். தரம் இல்லையா 49 ஓ போடுங்கள்.