Saturday, November 24, 2007

வைகோவும் நெடுமாறனும் என்ன சாதித்தார்கள்?

அண்மையில் விடுதலை புலி தலைவர் தமிழ்ச்செல்வன் இறந்ததற்காக சென்னையில் இரங்கல் கூட்டம் / ஊர்வலம் ஒன்றைத் தலைமையேற்று நடத்த முடிவு செய்து இருந்தனர், வைகோவும் நெடுமாறனும். ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கட்டும். அதை விடுங்கள். இதற்கு என்ன செய்து இருக்க வேண்டும் இருவரும்? இரங்கல் ஊர்வலத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, நாங்கள் ஊர்வலம் தான் நடத்துவோம் என்று, தடையை மீறி நடத்த முற்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே, அவர்கள் கைது செய்யப் பட்டனர். ஊர்வலமும் நடக்கவில்லை. வைகோ மற்றும் நெடுமாறனின் இந்த செயல்களினால், யாருக்கு என்ன லாபம்?

1. மக்கள் யாரேனும் இவர்களின் இந்த செயலினால்,
தமிழ்ச்செல்வனை நினைத்து பார்த்தார்களா?
2. இலங்கையில் தான் இவர்களின்
இந்த முயற்சியினால், ஏதேனும் மாற்றம் வந்ததா?

ஆனால், எவ்வளவு நஷ்டம் என்று ஒரு பட்டியலே இடலாம்:
1. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்யத் தேவையான வாகனங்களின் போக்குவரத்து செலவு
2. பந்தோபஸ்து செலவு
3. பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்ட இடையூறுகள்
4. சாலையில் ஏற்பட்ட பதட்டம்
5. தேவையில்லாத கைது மற்றும் சிறையடைப்பு
6. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வேலை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதிர்ந்த அரசியல்வாதிகளான இருவரும், இதற்கு பதிலாக போராட்ட நுணுக்கத்தை மாற்றி, ஊர்வலத்திற்கு பதிலாக,
தமிழ்ச்செல்வன் பெயரில் ஏதேனும், மக்களுக்கு நற்பணி செய்து இருந்தால், உதவி பெற்ற மக்களும், தமிழ்ச்செல்வனை மறவாது இருப்பர். இவர்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைத்து இருக்கும். அல்லது, நெடுமாறன் அவர்கள், சேர்த்து வைத்து இருந்த, இலங்கை தமிழர்களுக்கான உணவை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் காண்பதற்கு, பிரதமரைச் சந்தித்து பேசி இருக்கலாம். அதற்கு வைகோ பிரதமரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம். இதைப் போன்று ஏதேனும் செய்வதை விட்டு, வெறும் ஊர்வலத்தினால் யாருக்கு என்ன பயன்? துன்பம் தான் அதிகம்..

எனவே, காலத்தினால் எல்லாம் மாறுவது போல், போராட்ட நுணுக்கங்களும் மாற வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களும் மாற வேண்டும். அதை விட்டு விட்டு, தன்னுடைய அரசியல் எதிரி தன்னைத் தடுத்து விட்டாரே என்றெண்ணிக் கொண்டு, நான் நினைத்ததைத் தான் செய்வோம் என்ற மனப்பான்மை, வைகோ, நெடுமாறன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகில்லை.