Friday, September 26, 2008

கண்ணும் கண்ணும்

இன்று தான் இந்த படத்தை முதன் முதலாக பார்க்கிறேன். இப்படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால் அந்த கதை ஆசிரியருக்கு நான் செய்யும் ஒரு துரோகமாகவே நினைக்கிறேன். காரணம், அவ்வளவு ரம்மியமான அழகான யதார்த்தமான கதை. இந்த படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் கணிணியில் பார்த்து இயக்குனருக்குச் / தயாரிப்பாளருக்குச் சேர வேண்டிய இலாபத்தைப் பறித்ததற்காக வருந்துகிறேன்.

இந்த கதையை உங்களிடம் நான் சொல்ல போவதில்லை. கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அதற்காக தான் இந்த பதிவு.

மிகுந்த நாட்களாகவே இது வரை யாரும் சொல்லாத ஒரு கதையை யாரேனும் படமாக எடுப்பார்களா என்று நான் பார்த்து கொண்டிருந்தேன். என் கனவு நனவானது இப்படத்தினால்.
முற்றிலும் புதிய கதை. இது வரை நாம் யாரும் கேட்டு பார்த்திராத மென்மையான காதல் கதை.

கதைகளில் முடிச்சு போடுவது யாவருக்கும் எளிது. ஏன் நாம் கூட போடலாம். கதை ஆசிரியரின் திறமை அதை லாவகமாக அவிழ்ப்பதில் தான் இருக்கிறது. அவிழ்ப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டுமோ, அதை விட பல மடங்கு திறம் மற்றும் துணிவு அந்த முடிச்சை அவிழ்க்காமலேயே கதையை முடிப்பதற்கு வேண்டும். அப்படி அவிழ்க்காமல் இருக்கும் போதும் பார்ப்பவர்களுக்கு அது நியாயமாக இருக்க வேண்டும். அது இந்த கதையில் உண்டு. இந்த துணிச்சல் இதற்கு முன்னர் நான் பாலசந்தரிடம் பார்த்து இருக்கிறேன் (அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு...)


கதை மற்றும் காட்சியமைப்புகளில் யதார்த்தம். எதுவும் செயற்கையாக இருக்காது. அதற்கு நான் உத்தரவாதம். ஒரு வேளை திருநெல்வேலி பக்கத்து ஊர்களில் நடப்பதினால் அதில் இருக்கும் யதார்த்தத்தை என்னால் அதிகமாக உணர முடிகிறதோ என்னவோ? என்னுடைய கணிப்பு தமிழ்நாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் இது யதார்த்தமாகவே இருக்கும். குறை
காண விரும்புவோர்க்கு கதை நாயகன் மற்றும் நாயகி அறிமுகம் ஒரு நல்ல களம்.


இப்படத்தில் எனக்கு பிடித்தவை:
1) இயக்குனரின் பெயர் - ஒரு கிராமத்து பெயர் மாரிமுத்து
2) கணிணி காலத்திலும் கடிதம் மூலம் காதல் செய்வது.
3) கதையின் முடிச்சை அவிழ்ப்பதற்காக குடும்பத்தில் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி தவிர யாரோ ஒருவர் உண்மையைத் தெரியாமல் கேட்டு விட்டதாக காண்பிக்காமல் இருப்பது
4) காதலை விட மற்ற உறவுகளுக்கு (தந்தை-மகன், அண்ணன்-தங்கை எல்லாவற்றையும் விட நட்பு) முக்கியத்துவம் காட்டியது.
5) மனிதாபிமானத்தை கதை மூலம் நிரூபித்தது.
6) தமிழ் பேச்சு, தமிழ் சினிமா தரம் பேசும் தங்கர் பச்சான் கூட கவர்ச்சியைப் பயன்படுத்தும் போது, இந்த கதையில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லா விட்டாலும் நாயகியின்
கவர்ச்சியையோ, ஒரு பாடலுக்கு ஆடும் சிலரின் ஆட்டத்தையோ நம்பாத இயக்குனரின் நம்பிக்கை மற்றும் அப்படி இயக்க விட்ட தயாரிப்பாளரின் துணிச்சல்.

7) கடைசியாக வெற்றி படமாக வேண்டும் என்பதற்காக கதையின் முடிவை காதலர்க்கு சாதகமாக முடிக்காமல் இருப்பது..

இந்த படத்தின் மிகப் பெரிய பலவீனம் - இசை. அதை விட எரிச்சலூட்டுவது, இசையமைப்பாளர் தினாவுக்கு போடப்படும் பட்ட பெயர்.. (இசை அரசராம்).

படத்தைக் கண்டிப்பாக பாருங்கள்.. ஒரு நல்ல படைப்பை ஆதரியுங்கள்!!!