Wednesday, April 16, 2008

பிரியங்கா நளினியைச் சந்தித்தால் நமக்கு என்ன?

இரு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா காந்தி தன் தந்தையைக் கொன்ற நளினியைச் சென்று சிறையில் பார்த்துள்ளார். இதைப் பற்றி தான் ஊடகங்கள் இரு நாட்களாக பேசிக் கொண்டிருக்கின்றன. உச்ச கட்டமாக இன்று "ரேடியோ ஒன்" பண்பலைவரிசையில் இதை ஆதாரமாக வைத்து ஒரு போட்டி. எனக்கு மிகவும் பிடித்த வானொலி நடத்துனர் சுசித்ரா (முன்னால் மிர்ச்சி சுசி) தான் இதை முன்னின்று நடத்தினார் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவலை.

போட்டி இது தான். பிரியங்கா நளினியைச் சந்தித்த போது என்ன பேசி இருப்பார்? வானொலி நேயர்கள் கற்பனை செய்து கூற வேண்டும். மிகவும் ரசிக்க தகுந்த கற்பனைக்கு பரிசு. இதை விட கேவலமான ஒரு போட்டி இருக்க முடியுமா? இரு மனிதர்கள் தங்களுக்குள் கமுக்கமாக பேசியதை என்னவென்று யூகித்து கூறுவதற்கு பரிசு. பிறரைப் பற்றி வம்பு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஆதரித்து, அதற்கு பரிசும் உண்டு என்று ஊக்குவிக்கும் ஒரு போட்டி. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என்று அரசிற்கு எளிதாக கணக்கு எடுக்க ஒரு போட்டி.

எனக்கு நடத்துபவர்களை விட அதில் கலந்து கொள்கிறார்களே மக்கள் என்று தான் கவலை. இத்தனை பேர் தயக்கமின்றி அடுத்தவர்களைப் பற்றி புரளி பேச ஆயத்தமாக உள்ளனரே! தங்களது கற்பனை புரளியை தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பார்களே என்ற வெட்கம் கூட இல்லாமல்? அதைச் சுசி போன்றோரும் ஆதரிக்கின்றனரே.. தங்களுடைய பண்பலையின் விளம்பரத்திற்காக?

சுசி அவர்களே! இது நியாயமா? தங்களைப் போன்றோர் செய்கின்ற காரியமா இது?

1 comment:

sedhu thilagam said...

ஊடகங்கள் தொல்லை இப்பெல்லாம் எல்லை மீறி போய்ட்டிருக்கு...
என் வீட்டு ஜன்னல் இவ்ளோதான்.. கண்டவன் எட்டி பாக்கணும்னு நான் திறந்து வைக்க முடியுமா....??

மத்தவங்க personala எட்டி பாக்றது ஊடங்களோட கை வந்த கலை....aduvum if ppl r in limelight ... Pochu..!!!