Tuesday, March 26, 2013

இனி தான் ஆரம்பம்!

சற்றும் எதிர்பாராத வகையில் வீறிட்டு எழுந்துள்ள மாணவர் போராட்டத்திற்கு உண்மையான சோதனை காலம் இனிதான் ஆரம்பம். 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற வரையிலாவது இந்த போராட்டக் கனலைத் தொடர்ந்து உறுதி குறையாமல், வன்முறையின்றி, எப்படி நடத்தி செல்ல போகிறார்கள் என்று நான் உண்மையிலேயே கவலையுற்று இருக்கிறேன். அப்படி நடந்தால், ஈழம் கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால்,  தமிழகத்தை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக  மாறி மாறி ஆட்சி புரிந்து வரும் திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து விடுதலை பெற வழி கிடைக்கும். அதன் வழியாக தமிழகத்திற்கு புதிய எதிர்காலம் பிறக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

மாணவர் போராட்டத்தினால், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றம் வரும் என்று நான் எண்ணியிருக்க வில்லை. ஏனென்றால், தீர்மானத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய மத்திய அரசு, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அப்படி ஒரு நிலை 2008ல் இருந்தது. ஆனால் அன்று இப்படிப்பட்ட ஒரு மாணவர் எழுச்சியோ, தமிழக கட்சிகளின் எழுச்சியோ இல்லாமல் போனதால் தான்,  இலங்கையில் 'இனப்படுகொலை' எந்தவொரு அச்சமோ, மன உறுத்தலோ இன்றி செய்து முடிக்கப்பட்டது. 

திமுகவிற்கு 2ஜியும், அதில் மாட்டிக் கொண்டுள்ள திமுக அமைச்சர்களை விடுவிப்பதும், தமிழகத்தில் தங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதே 2008 - 2009ல் முதன்மையாகப் பட்டது. அவர்கள் அதிமுகவைத் தவிர யாருடைய கேள்விக்கோ, போராட்டத்திற்கோ பயப்படாமல் இருந்தார்கள். அதற்கு ஏற்றார் போல், அதிமுகவும் "போர் என்றால் மக்கள் செத்துப் போகத் தான் செய்வார்கள்" என்று ஒரு அறிக்கை வெளியிட்டது திமுகவிற்கு வசதியாகப் போய்விட்டது. அதைத் தான் இன்று வரை ஜெயலலிதாவிற்கு எதிராக அரசியல் செய்ய பயன்படுத்துகிறார்கள். "சரி! அதிமுக தான் அவ்வளவு மோசம் தான்! நீங்க என்ன செஞ்சீங்க" என்றால் "நாங்கள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினோம்" என்று சொல்கிறார்கள்! ஆட்சியில் அதிகாரத்தில் இல்லாத சாதாரண மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட நடத்துவது தான் வன்முறையில்லாத மனிதச்சங்கிலி போராட்டம். அதையே ஆட்சியிலும், அதிகாரத்திலும், அமைச்சரவையிலும் பங்குப்பெற்ற திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் செய்யும் என்றால், இவர்களை ஆட்சியில் அமர்த்துவதால் தான் என்ன பலன்??

இப்படியெல்லாம் சொல்வதால் அதிமுகவை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலுக்கு முன்னர் வரை, கூடங்குளம் போராட்டகாரர்களை ஆதரித்து விட்டு, வெற்றிப் பெற்றபின் அவர்களுக்கு எதிராக அடக்குமுறையை அவிழ்த்து விட்டது அதிமுக தலைமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மாதங்கள் / வருடங்கள் எல்லாம் வேண்டாம், சில மணி நேரங்கள் சுயமாக இணையத்தில் ஆராய்ச்சி செய்தால் போதும், அணு கழிவுகளைப் பாதுகாக்கும் வழிமுறை உலகில் எங்குமே இன்று கிடையாது என்று மேல்நிலைக் கல்வி (+2) படித்துள்ள அனைவருக்குமே புரிந்து விடும். இன்று அணு உலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நாடுகள் அனைத்தும் அணுக்கழிவுகளை மண்ணிற்கு அடியில் புதைத்து வைத்து அதன் கதிர் வீச்சுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கின்றனர். இதைப் போன்று தான் இந்தியாவிலும் செய்ய போகிறார்களா என்றால் பதிலில்லை. உச்ச நீதிமன்றம் போய் கேட்டபின், கர்நாடகத்தில் உள்ள காலாவதியான கோலார் தங்க சுரங்கங்களில் அணுக்கழிவுகளைப் புதைப்போம் என்றார்கள். கர்நாடக மக்கள் எதிர்ப்பைக் காட்டி கொந்தளித்தவுடன், கோலார்  தங்க சுரங்கங்களைப் பயன் படுத்த போவதில்லை என்று சொல்லி விட்டார்கள். இன்று வரை அணுக்கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவே என்னுடைய முதற் காரணம் அணு உலை வேண்டாம் என்பதற்கு. (அணு உலை மின்சாரம் பற்றி தனியாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.) ஆனால் இதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அணு உலையை எதிர்த்து போராடும் மக்களின் மீது அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேப் போன்று தான், இன்று மாணவர் போராட்டத்தைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அரசு, நாடாளுமன்ற தேர்தலில் வாகை சூடிய பின்னர், மாணவர்களைப் பந்தாடினால் என்ன செய்ய முடியும்? 

மேற்கூறியவை எல்லாம் சான்றுகள் தான். இதே நிலைமை தானே! நாளை தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினை என்று வரும் போதும்? பதவியும் பணமும் வருவதாக இருந்தால் நாங்கள் கொள்கைகளையும் தமிழக மக்களின் நலனையும் அடகு வைப்போம் என்று இருக்கும்  திமுக / அதிமுக கட்சிகளைத் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதேயே பல ஆண்டுகளாக என்னுடைய பதிவுகளில் நான் எழுதி வந்துள்ளேன். 



கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு நாளும் செய்திகளில் பார்த்தால், இலங்கை தொடர்பான திமுகவின் அறிக்கைக்கும், அதிமுகவின் அறிக்கைக்கும் மாற்றம் இருப்பதாகவே தெரியவில்லை. இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருப்பது போல் அவ்வளவு ஒற்றுமை!!

1. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு, தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும், பன்னாட்டு விசாரணை தேவை.
2. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாது
3. தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானங்கள்
4. ..

ஏன் இந்த ஒற்றுமை? நம்மிரு கட்சிகளைத் தவிர, தமிழக அரசியல் களத்தில் மூன்றாவதாக, மாணவர்கள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து , எந்தவித ஆதாயமுமின்றி சுயநலமில்லாமல், ஒன்று கூடியதே காரணம். மக்கள் ஒன்றுப்பட்டு விட்டால், கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, அதைத் தீர்ப்பதற்கான நலப்பணிகளிலும், மக்களுக்கு ஆதரவான அறிக்கைகள் வெளியிடுவர் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். இந்த போராட்டம் தங்குதடையின்றி, எந்தவித நிறுத்தமும் இல்லாமல் தொடர வேண்டும். அப்படித் தொடரும் பட்சத்தில், திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வேறு வழி இருக்காது. மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்களும் குரல் கொடுக்க வேண்டி இருக்கும், தீர்வு காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை தங்கள் நிலையிலேயே தொடர்ந்தார்கள் என்றால், மக்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவார்கள். அதை முதல்வர் புரிந்து இருப்பதையே அவருடைய IPL பற்றிய இன்றைய அறிக்கை பறைசாற்றுகிறது.

இதைப் போலவே, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும் மாணவர்கள் போராட ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கும். இல்லையென்றால் தமிழகத்து மக்கள் தங்களின் அன்றாட பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவர். காலப்போக்கில் போராட்டம் நீர்த்து விடும். அதோடு  அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் மாணவர்கள் வேறு ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்காகப் போராடும் வரை தான் அமைதியாக இருப்பர். இங்கேயே நடக்கும் பிரச்சினைகளுக்காகப் போராட ஆரம்பித்தால், அது அவர்களின் இடத்தை தமிழக அரசியலில் இருந்து மறைய செய்யும் முயற்சி என்பதால், பல்வேறு சூழ்ச்சிகள் செய்து முறியடிக்கக்  கண்டிப்பாக முயல்வர். அரசாங்கம் அடக்குமுறையை முடுக்கி விடலாம். கல்வி பாதிக்கப்படலாம். பிற கட்சிகள் போராட்டங்களுக்கு அரசியல், சாதி, மத சாயங்கள் பூசி கெடுக்கலாம். அவர்களிடம் எண்ணற்ற வழிகள் உண்டு. எனினும், இன்றைய தருணம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அருகிலேயே நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால், மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது தங்கள் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டு கொள்வது போல் என்பது அவர்களுக்கு தெரியும். மாணவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காகப் போராடினால், தமிழகத்திற்கு கண்டிப்பாக ஒரு புதிய எதிர்காலம் தொடங்கும்.

கடைசியாக, மாணவர்கள் நீங்கள் அனைவரும், எங்களுக்காக போராடுகிறீர்கள். அமெரிக்காவில் இருந்து கொண்டு, தமிழக பிரச்சினைகளுக்காக இணையத்தில் பதிவு செய்வது, வறுமையினால் படிக்க முடியாமல் இருக்கும் சிலருக்கு பண உதவி மட்டுமே எங்களால் முடிந்த சமூகப்பணி. எழுதும் போதே வெட்கப்பட்டுக் கொண்டே தான் எழுதுகிறேன்.  மனதிற்குள் அரசியல்வாதிகளைப் பற்றி எண்ணற்ற எரிச்சல்கள் இருந்தாலும் தெருவில் இறங்கி போராடாமல், கோழையாக வாழும் எங்களைப் போன்றோர் சார்பாக நீங்கள் போராடுகிறீர்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் போராடியிருந்தால், இன்றைய அவல நிலைமை இல்லாமல் போயிருக்கும். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஆனாலும்  உங்களுக்கு நன்றி சொல்லப் போவதில்லை. இது சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமை. நாங்கள் தான் கடமைத்தவறி பொறுப்பற்று போனோம். நீங்கள் கடமையறிந்து போராடுவது மிக்க மகிழ்ச்சி. எந்த விதமான இன்னல்கள் வந்தாலும் இந்த போராட்டம் தொடர வேண்டும். மீண்டும் இப்படி ஒரு எழுச்சி வருவது கடினம். எனவே, இது தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு அமைய வேண்டும் அதற்கு மாணவர் புரட்சி வித்திட்டது என்று தமிழக வரலாறு எழுதப்பட வேண்டும்....

1 comment:

கவியாழி said...

தெளிவான ஆதங்கமும் உங்களின் வேதனையும் புரிகிறது