Thursday, February 07, 2013

நிஜரூபம்

படம் பார்த்து ஒரு வாரம் ஆகப்போகுது என்றாலும் தமிழ் நாட்டில் வெளியிட்ட பிறகு தான்  அதைப் பற்றிய இந்த பதிவை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். படம் தமிழ் நாட்டில் வந்தாச்சு!!!

படத்தைப் பத்தி சொல்லனும்னா, விஸ்வரூபத்திற்கான பெயர் காரணம் தொடங்கி, 3 மாறுபட்ட கதாபாத்திரங்கள், 2 வகையான நடிப்பு, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தமிழ் படங்களில் புகுத்தியது, ஆப்கானிஸ்தான் மலைப்பிரதேசங்களின் கலை வடிவமைப்பு, முதல் மற்றும் ஒரே சண்டைக்காட்சி சீக்கிரமே முடிந்து விட்டதே, மீண்டும் காணக் கிடைக்காதா என்ற ரசிகனின் மனதைப் புரிந்துக் கொண்டு அதை மறுபடியும் காட்டுவது, ரசிக்கும்படியான இந்து கடவுள்களைப் பற்றிய துணுக்குகள், படத்திற்காக தனியே கதக் கற்று ஒரு முழு பாடலுக்கு ஆடியிருப்பது என  சொல்லிக் கொண்டே போகலாம். கமலின் உழைப்பு வியக்க வைக்கிறது.

படத்தில் தாலிபான்களே அமெரிக்க இராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை கொல்ல மாட்டார்கள் என்று சொல்வதும், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக ஒரு பெண் / குழந்தையை கொன்றதற்காக வருத்தப்படுவதாக காண்பிப்பதும்!! ஏன் இந்த அமெரிக்க துதிபாடல்???... ஹிரோஷிமா மற்றும் நாகசாகில அணுகுண்டு போட்டது எல்லாம் வேற்றுகிரகவாசிகளா?? புரியவில்லை...

தசாவதாரத்தில் முதல் 30 நிமிட காட்சிகள் ரொம்ப நல்லா இருந்ததுனு நிறைய பேர் சொன்னாக்கூட, அந்த காட்சிகள் எதுக்குனு கேட்டவங்க தான், அதை நல்லா இருந்ததுனு சொன்னவங்களை விட அதிகம். அதே மாதிரி தான் இந்த படத்திலேயும் நிறைய காட்சிகள் பார்க்க பிரமிப்பாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக புரியவில்லை. வீட்டுக்கு வந்து நானும் என் மனைவியும் ஒரு group discussion அளவுக்கு பேசினப்புறம் தான் அதில் இருக்கின்ற நுணுக்கம் புரிகிறது. படம் பாத்து முடிஞ்சதும் எனக்கு உடனே தோன்றியது இதுதான்... இந்த படத்தை தமிழ் நாட்டில் எப்போதும் போல வெளியிட்டு இருந்தாலே, படம் இன்னொரு ஹேராம் ஆகியிருக்கும். அதாவது படம் பப்படம் ஆகியிருக்கும். ஏனா படம் எல்லாருக்கும் புரியுற மாதிரி கதை சொல்லவில்லை. அப்படி சொன்னா யாரும் பேசாம போயிடுவாங்கனு ஒரு வேளை கமலே அப்படி எடுக்கறாங்களானு தெரியலை.

கே.பாலச்சந்தர், ஆர்.சி.சக்தி (மனிதரில் இத்தனை நிறங்களா, சிறை) போன்றவர்களிடம் பயின்றதால் கமல் இப்படி இருக்கிறார் என்று புரிகிறது. ஆனால், அவர்கள் எடுக்கும் கதைக்களங்கள் வேண்டுமானால், காலத்தை வென்றதாக புரட்சிக்கரமாக இருக்குமே தவிர கதை சொல்லும் விதம் எளிதாகவே இருக்கும். ஆனால் கமலிடம் இரண்டுமே காலத்தை தாண்டி இருக்கிறது. இதை கே.பாலச்சந்தரே ஒரு முறை மேடையில் கமலுக்கு சொல்லி இருக்கிறார். கமல் நல்லா படிக்கிற பையனா இருக்கலாம். ஆனால் ஆசிரியர் வேலைக்கு வந்த அப்புறம் விஷயம் தெரிந்தால் மட்டும் போதாது. அதை நல்லா சொல்லிக் கொடுக்கவும் தெரியணும். இல்லாட்டி ஆசிரியர் வேலையில் முத்திரை பதிக்க முடியாது. இதை கமல் புரிந்துக் கொள்ள வேண்டும். 

மேலும் விஸ்வரூபத்திற்கு 2 பகுதிகள் இருப்பதால் சில காட்சிகளை கமல் 2ஆம் பகுதிக்கு ஒதுக்கி இருக்கலாம். எனவே படம் பார்ப்பவர்களுக்கு இது 2ஆம் பகுதிக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த பகுதியில் வரவில்லையா அல்லது கமலே சொல்வதற்கு மறந்துவிட்டாரா என்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக  இந்தப்படத்தில் ஆண்டிரியா யார், ஏன் தீவிரவாதிகளின் திட்டம் தெரிந்தும் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்காமல் இருக்கிறார்கள் மற்றும் பல...

தசாவதாரம் போல தனி டிராக் காமெடியோ, டூயட்களோ, மற்ற பல ஜனரஞ்சகமான விஷயங்கள் எதுவும் இந்த படத்தில் கிடையாது. எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஜனவரி 25ல் வெளியாகி இருந்தால், படம் வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம் தான்.




அப்புறமா இந்த தடை... 

1. பொதுவாக இந்திய படங்களில் தீவிரவாதத்தைப் பற்றி காண்பிக்கும் போது, எல்லா மதத்தினைச் சேர்ந்தவர்களும் அதற்கு பங்களிப்பதாக தான் காண்பிப்பார்கள். உதாரணமாக, 1999ஆம் ஆண்டு வெளிவந்த Sarfarosh என்ற இந்தி படமும் தீவிரவாதம் பற்றியது தான். அந்த படத்தில் தீவிரவாத முயற்சியின் மூளையாக இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய கஜல் பாடகர், பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் கடத்தி வருபவர்கள் இஸ்லாமியர்கள் என்று காண்பித்தாலும், அதை இந்தியாவில் வாங்கி விற்பது இந்துக்களாகவும், பயன்படுத்துபவர்கள் இந்திய நக்சலைட்டுகளாகவும், இந்த தீவிரவாத முயற்சியை முறியடிப்பத்தில் ஒரு இஸ்லாமியர், இந்து என இரண்டு மதத்தினரும் இருப்பதாக காண்பித்து, தங்களின் நடுநிலையை நிரூபித்து இருப்பார்கள். எனவே விஸ்வரூபத்தில் இஸ்லாமியர் நிறைய இருக்கிறார்கள் என்பதை விட இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் இல்லாமல் போனது தான் பிரச்சினையின் உண்மையான  ரூபம். ஹேராம் இந்து தீவிரவாதிகளைப் பற்றிய படம். ஆனால் அது 1940களில் நடந்தது போல் காண்பித்ததால் இந்த மாதிரி ஒரு பிரச்சினை வரவில்லை. ஆனால் இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நடப்பது போல் இருப்பதால் தான் கூடுதல் எதிர்ப்பு. 

2.  என்ன பண்ணுவது?? விஸ்வரூபத்தின் கதை அப்படி. பாதி படம் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானிலும் உண்மையாகவே மற்ற மதத்தினர் இல்லை என்றே  நினைக்கின்றேன். எனவே இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் அங்கு இருப்பதாகச் சொல்லி அவர்களும் தீவிரவாதத்தில் ஈடுபடுவது போல் காண்பித்தல் சாத்தியமில்லாதது. ஆகவே அங்கு நடக்கும் நல்லதாகட்டும் கெட்டதாகட்டும் அங்கு இருக்கும் மக்கள் செய்வதாகத் தான் காண்பிக்க வேண்டும். அந்த மக்கள் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களாக போய்விடுவதால், இது இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாக தெரிகிறது.

3.    படம் ஒட்டுமொத்த இஸ்லாமியருக்கு எதிரானது கிடையாது என்பதைச் சொல்வதற்காகவே, படத்தின் நாயகனை ஒரு இந்திய இஸ்லாமியராக காட்டி, அவன் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாகவும், படம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரவாதத்தைப் பற்றியது மட்டுமே என்று சொல்ல முனைந்து இருக்கிறார். ஆனாலும் அது போதாது, எங்களைப் பற்றி படம் தவறாகத் தான் சித்தரிக்கிறது என்று இஸ்லாமிய சமூகம் கருதுகிறது. எப்படி கமல் தன் படத்தில் தான் நினைத்தைக் கூற முனைந்து இருக்கிறாரோ, அது போல் இஸ்லாமிய சமூகம் தங்கள் சார்பு காரணங்களைக் கூறி படத்திற்கு தடையை வலியுறுத்த கண்டிப்பாக உரிமை இருக்கிறது. தாங்கள் தினமும் செய்யும் தொழுகையைத் தீவிரவாதிகள் அணுகுண்டை வெடிப்பதற்கு முன்னர் செய்வதாகக் காட்டினால், கண்டிப்பாக இஸ்லாமிய சமூகம் எதிர்க்கத் தான் செய்யும்.

4.  இதை எப்படி கையாள்வது?? இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத்தை பற்றிய படம் எடுக்காமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அது நியாயமாக இருக்காது. உண்மையாகச் சொல்லப் போனால் கமலின் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ விமர்சிக்கத் தவறியதில்லை. அண்மையில் வெளிவந்த கமலின் எல்லா படத்திற்கும் ஏதோ ஒரு சமூகம் எதிர்த்து போராடி இருக்கிறது. நீதிமன்றத்தை நாடி தடை விதிக்க சொன்னார்கள். நீதிமன்றம் முடியாது என்று சொன்னவுடன் பிரச்சினை முடிந்து விட்டது. அது தான் சரியான அணுகுமுறை.

5.   அதை விடுத்து அரசு தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தடை விதித்து, பிரச்சினையை ஊதி பெரிதாக்கி விட்டது. இப்பொழுது இரு தரப்புக்கும் நடுவில் ஆவன  செய்த பேச்சுவார்த்தையை தடை விதிக்கும் முன்னரே செய்து இருக்கலாமே.... தமிழக முதலமைச்சரின் அரசியல் சாதுரியம் தெரிந்தது தான். இந்த பிரச்சினை மூலமாக அவர் 1 கல்லை வைத்து 3 மாங்காய்கள் அடித்து இருக்கிறார். 
  • இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது
  • மக்களிடம் தமிழக சட்டம் ஒழுங்கில் தனக்கு இருக்கும் அக்கறையைக் காண்பித்து நற்பேர் சம்பாதித்தது
  • கமல்ஹாசனின் பிரதமர் பற்றிய பேச்சு மற்றும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக ஜெயலலிதா பழி வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால், அப்படி ஒரு பேச்சு எல்லா பக்கமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இனிமேல் தயாரிப்பாளர்கள் வேறு ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு படத்தை விற்பார்களா என்ன?

6.        அதேப் போல், கமல்ஹாசனின் தோல்விப்படமாக இருந்திருக்க வேண்டிய விஸ்வரூபமும் இப்பொழுது ஓடாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனா தேவையில்லாம அளவுக்கு அதிகமான பரபரப்பை படத்திற்கான தடை ஏற்படுத்திவிட்டது தான்.

7.  அப்படியானால் இந்த பிரச்சினையினால் உண்மையாக பாதிக்கப்பட்டவங்க யார்?? இஸ்லாமிய சமூகம் தான். 

"நீதிமன்றம் தடை விதிக்கலையா? நாங்கள் படத்தை எதிர்க்கிறோம். இஸ்லாமியர்களே, படத்தைப் பார்க்காதீர்கள்"

என்று ஒரு அறிவிப்பு விட்டிருந்தால் போதும். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மாதிரியும் ஆகியிருக்கும். படமும் ஓடியிருக்காது. இஸ்லாமிய சமூகத்திற்கு சாதகமான ஒரு சூழ்நிலையும் இருந்து இருக்கும். அவர்களுடைய அகிம்சை முறையிலான எதிர்ப்பும் ஆதரவு பெற்றிருக்கும். கண்டிப்பாக அனைத்து எழுத்தாளர்கள் முதற்கொண்டு முற்போக்குவாதிகளும் பாராட்டியிருப்பார்கள்.

கடைசியா என்ன ஆகி இருக்கு??? 

ஆனால், இரு வாரங்களாக பல பிரபலங்களின் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், நான் சொன்ன கருத்தை நீ ஏற்கவில்லையா, உடனே உன் வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவேன் போன்ற கருத்துக்களினால் தேவையில்லாமல் ஊடகங்களில் கருத்து மோதல்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. இப்படி தவறாக பேசுவது ஏதோ பி.ஜே மட்டும் தான் செய்தார் என்று நினைத்து விடாதீர்கள். அங்கிங்கெனாதபடி எல்லா மதத்தினரும் எல்லா சமூகத்தினரும் செய்தனர். எனக்கு தெரிந்த facebook நண்பர்கள் உட்பட. இணையத்தில் இந்தப்படம் தொடர்பான பதிவுகளின் பின்னூட்டங்களைப் படித்தால் தெரியும். 

இஸ்லாமிய சமூகம் மீது இருக்க வேண்டிய அனுதாப அலை கமல் பக்கம் திரும்பிடுச்சு. அதுமட்டுமில்லாம,  இப்படிப்பட்ட ஒரு தடை விதிக்கும் முறையை ஆரம்பித்து வைத்து ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகி, பேரையும் கெடுத்துக் கொண்டாச்சு, படத்திலேயும் ஒரு காட்சியும் நீக்கப்படல, படமும் வெளிவந்தாச்சு,, இப்போ வெற்றிப்படமாகவும் ஆகப்போகிறது. 

எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டிய தோத்துட்டு வந்த இந்தியன் கிரிக்கெட் அணி நிலைமை தான் இந்த படத்தை எதிர்த்து போராடியவர்களின் இன்றைய நிலைமை...

2 comments:

Jayakumar said...

Nice write up...

Unknown said...

Thanks JK