சென்னையில் ஒரு மழைக்காலம் - கௌதம் மேனனின் படத்திற்கு வேண்டுமானால் ஒரு கவித்துவமான தலைப்பாக இருக்கலாம். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் - சாணத்தை மிதித்தால் வரும் உணர்வுக்கு சமமான எரிச்சலையும், இயலாமையும், கோபமும் கொடுக்கும் ஒரு அனுபவம்.
சென்னையில் ஒரு அரசு இயங்குகிறதா என்று சிந்திக்க வேண்டிய அளவிற்கு தள்ளி விடுகிறது ஒவ்வொரு மழைக்காலமும்.மழை வருவதற்கு முன்னர், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த தடவை போன மழைக்காலம் போல் இருக்காது; வடிகால்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளன என்று உறுதி கொடுப்பது தான் மிச்சம். ஆனால் வருடத்திற்கு வருடம் நிலைமை கட்டுக்கு அடங்காமல் மோசமாகிக் கொண்டே போவது தான் உண்மை.
ஊரெங்கும் குப்பைக்கூளம், அதனால் வரும் நாற்றம், முழங்கால் அளவு தண்ணீரில் அலுவலக பேருந்துகளைப் பிடிக்க ஓட வேண்டிய கட்டாயம், அலுவலக பேருந்துகளை விட்டு விட்டால் பின்னர் 570, 19B, 21H, M119,47D,5A போன்ற எப்போதுமே கூட்டமாகவே போகும் பேருந்துகளில், கசங்கி பிதுங்கி பிழியப்பட்டு அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம், அப்படிப்பட்ட பேருந்துகளுக்காக நிற்பதற்கு சரியான ஒரு நிறுத்தம் இல்லாமை, அப்படியே இருந்தாலும் அங்கு ஏதுவான நிழற்குடை இல்லாமல் பேருந்தில் ஏறுவதற்குள் பாதி நனைந்து விடும் அவலம், ஆட்டோகாரர்களின் அடாவடித்தனம், மீட்டர் போட்டு ஓட்டாமல் கட்டணங்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றிக் கேட்பது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலே கூறியவை அனைத்தும் ஏதோ இந்த வருடம் நடப்பது தான் அடுத்த வருடம் சரியாகி விடும் என்பதல்ல. இது கடந்த 20 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. திமுக அதிமுக 1967ல் இருந்து ஆட்சி செய்தும் இவர்களின் அணுகுமுறையினால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.காரணம் அவர்களின் அறிவும் திறமையும் அவ்வளவு தான்.
திமுக அரசினால் தொடங்கப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கான இணையத்தளம் தான் மு.க.வின் திறத்திற்கு எடுத்துக்காட்டு. (http://tnvelaivaaippu.gov.in) இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் எல்லாரையும் குழப்பத்தில் வைத்துக் கொண்டு இருப்பது தான் நிதர்சனம். அதற்காக செலவழித்த காசு மட்டும் தான் உண்மை. மற்றவை அனைத்தும் கனவுகள் தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!! கல்லூரியின் வாசலைக் கூட தொடாதவர்கள், அறிவுப்பூர்வமாக யோசித்து எப்படி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போகிறார்கள்? காமராஜர் காலத்தில் படிக்காதவர்கள் தானே நல்லாட்சி தந்தார்கள் என்றால், அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். நேர்மைக்கும் நம்மை ஆளும் கட்சிகளுக்கும் துளி சம்பந்தம் உண்டா? ஒன்று படித்து இருக்க வேண்டும். இல்லை நேர்மை இருக்க வேண்டும். இரண்டும் இல்லை. பணம் சம்பாதிக்கும் ஆசை ஒன்று தான் உண்டு. அதன் விளைவு தான் இந்த படங்களும் சென்னையின் இன்றைய நிலைமையும்!!
வேளச்சேரி அந்தோணி பள்ளி சந்திப்பு |
சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் தான் அதிமுக அரசின் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறத்திற்கு எடுத்துக்காட்டு. சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையில் கூரை கிடையாது. சமதளமான ஒரு சாலை கிடையாது. மழை நீர் வடிகால் இருக்காது. ஆனால், அம்மாவைப் பாராட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திருக்கும் ஒரு கட்-அவுட் 5 வருடத்திற்கு கண்டிப்பாக பேருந்து நிறுத்தத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜால்ராவின் மொத்த உருவம் தான் இந்த அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும்!!! எனவே அடுத்த வருடமும் இதே நிலைமை தான்.. துரைமுருகன் (திமுக பொதுப்பணித்துறை அமைச்சர்), மு.க.ஸ்டாலின் (திமுக உள்ளாட்சித்துறைஅமைச்சர்), மா.சுப்பிரமணியன் (முன்னாள் சென்னை மேயர்) பதில், சைதை துரைசாமியை (இன்றைய சென்னை மேயர்) திட்டிக் கொண்டிருப்போம்!!
டான்சி நகர் குப்பைக் கூளம் |
எனது வீட்டிற்கு பக்கத்தில் |
சரி திமுக அதிமுக தான் இப்படி என்றால், இவர்களின் மாற்றாக தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் தேமுதிக அவர்களை விட மோசமாக கொள்கைகளே இல்லாமல் இருக்கிறது. என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.சென்னையை விட்டு போய் விடலாம் என்றால், படித்த படிப்பிற்கு வேலை இங்கே மட்டும் தான் இருக்கிறது, கிடைக்கிறது. சொந்த ஊருக்கு போய் விடலாம் ஆனால், சொந்தமாக தான் வேலை தொடங்க வேண்டும். இல்லை வைத்திருக்கும் பணத்தை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது தான் புரிகிறது வெளிநாடுகளுக்கு போகும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதன் காரணம். அங்கே எல்லாம் பிரச்சினை இல்லை என்பதல்ல. ஆனால் இது போன்ற வாழ்வாதார பிரச்சினைகள் இல்லை. பிறந்த நாட்டிற்கும் கல்வி கொடுத்த ஊருக்கும் ஏதும் செய்யாமல் ஓடிப் போகும் மகனிடம், "தேவர் மகன்" சிவாஜி கூறும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. விதை விதைத்தவுடன் பழம் சாப்பிட வேண்டும் என்றால் முடியாது என்று எனக்கும் புரியும். ஆனால் விதை விதைக்கப் படுகிறதா என்றாவது தெரிய வேண்டுமே?? நான் தான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறேன். என் சந்ததியினருக்காவது தேர்ந்த வாழ்க்கை கிடைக்குமா என்பதாவது தெரிய வேண்டுமே!!
பாரதி கடவுளிடம் முறையிடுவது போன்ற ஒரு காட்சி பார்த்து இருக்கிறேன் "பராசக்தியே! காலையில் எழுந்தவுடனேயே பணப்பிரச்சினை. குழந்தைக்கு காய்ச்சல், எனக்கு ஏற்பட்டு இருக்கிற புதிய பழக்கத்தினால் தலை வேறு கிறுகிறுக்கிறது. நான் என்ன செய்வேன்? என்னை இந்த அற்பமான அரிசி உப்பு பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்ய மாட்டாயா? .... கடைசியாக சொல்கிறேன் நீ இப்படி எல்லாம் என்னை அற்ப தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தால் நான் நாஸ்திகனாகி விடுவேன்". இதே நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.
அடுத்த தேர்தலிலாவது படித்த நேர்மையானவர்கள், அநீதியைக் எதிர்ப்பவர்கள், மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நிர்வாகம் சீர்பட வேண்டும். அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நானும் இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல தான் வேண்டி இருக்கும்.
7 comments:
உணமையான வார்த்தைகள். ஆனால் அரசியல் வாதிகள் திருந்தவோ மாறவோ போவதில்லை.
நன்றி மோகன்! இவர்கள் திருந்த வேண்டுமானால் அடுத்த முறை ஆட்சி இவர்களிடம் செல்லக் கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் யோசிக்க வேண்டும்
Padithavargal onru sera vendum. Facebook, Twitter ponra Social websites payan paduthi puratsi seithal kandippaaga maatram varum.
//இவர்கள் திருந்த வேண்டுமானால் அடுத்த முறை ஆட்சி இவர்களிடம் செல்லக் கூடாது.../
தி.மு.க வந்தாலும் இதே நிலை தானே. எந்த அரசியல் கட்சி தான் உருப்படியா இருக்கு ? BJP உட்பட??
நன்றி மோகன், துரைடேனியல். இன்னும் 5 வருடங்கள் இருக்கின்றதே! அதற்குள்ளாக ஒரு புதிய இயக்கம் திமுக அதிமுக மாற்றாக வந்துவிடாதா?
I can understand your feelings. I relocated to Chennai from US quitting a permanent job. Hell is a city much more like Chennai.
Very simple and clear message.Very good posting.Always one question come to my mind ," Who is that idiot", said by 2020 ,India will become Super Power ? There is no point in blaming the Government.We are also responsible.Government should provide enough rubbish bins and public should use the rubbish bins properly.By mistake Government provide a bin ,Mr. and Mrs.Public will never follow the rule.
Post a Comment