Saturday, November 26, 2011

சென்னை படுத்தும் பாடு


சென்னையில் ஒரு மழைக்காலம் - கௌதம் மேனனின் படத்திற்கு வேண்டுமானால் ஒரு கவித்துவமான தலைப்பாக இருக்கலாம். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் - சாணத்தை மிதித்தால் வரும் உணர்வுக்கு சமமான எரிச்சலையும், இயலாமையும், கோபமும் கொடுக்கும் ஒரு அனுபவம்.

சென்னையில் ஒரு அரசு இயங்குகிறதா என்று சிந்திக்க வேண்டிய அளவிற்கு தள்ளி விடுகிறது ஒவ்வொரு மழைக்காலமும்.மழை வருவதற்கு முன்னர், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த தடவை போன மழைக்காலம் போல் இருக்காது; வடிகால்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளன என்று உறுதி கொடுப்பது தான் மிச்சம். ஆனால் வருடத்திற்கு வருடம் நிலைமை கட்டுக்கு அடங்காமல் மோசமாகிக் கொண்டே போவது தான் உண்மை.

ஊரெங்கும் குப்பைக்கூளம், அதனால் வரும் நாற்றம், முழங்கால் அளவு தண்ணீரில் அலுவலக பேருந்துகளைப் பிடிக்க ஓட வேண்டிய கட்டாயம், அலுவலக பேருந்துகளை விட்டு விட்டால் பின்னர் 570, 19B, 21H, M119,47D,5A போன்ற எப்போதுமே கூட்டமாகவே போகும் பேருந்துகளில், கசங்கி பிதுங்கி பிழியப்பட்டு அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம், அப்படிப்பட்ட பேருந்துகளுக்காக நிற்பதற்கு சரியான ஒரு நிறுத்தம் இல்லாமை, அப்படியே இருந்தாலும் அங்கு ஏதுவான நிழற்குடை இல்லாமல் பேருந்தில் ஏறுவதற்குள் பாதி நனைந்து விடும் அவலம், ஆட்டோகாரர்களின் அடாவடித்தனம், மீட்டர் போட்டு ஓட்டாமல் கட்டணங்களைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றிக் கேட்பது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

மேலே கூறியவை அனைத்தும் ஏதோ இந்த வருடம் நடப்பது தான் அடுத்த வருடம் சரியாகி விடும் என்பதல்ல. இது கடந்த 20 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. திமுக அதிமுக 1967ல் இருந்து ஆட்சி செய்தும் இவர்களின் அணுகுமுறையினால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.காரணம் அவர்களின் அறிவும் திறமையும் அவ்வளவு தான். 

திமுக அரசினால் தொடங்கப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கான இணையத்தளம் தான் மு.க.வின் திறத்திற்கு எடுத்துக்காட்டு. (http://tnvelaivaaippu.gov.in) இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் எல்லாரையும் குழப்பத்தில் வைத்துக் கொண்டு இருப்பது தான் நிதர்சனம். அதற்காக செலவழித்த காசு மட்டும் தான் உண்மை. மற்றவை அனைத்தும் கனவுகள் தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!! கல்லூரியின் வாசலைக் கூட தொடாதவர்கள், அறிவுப்பூர்வமாக யோசித்து எப்படி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போகிறார்கள்? காமராஜர் காலத்தில் படிக்காதவர்கள் தானே நல்லாட்சி தந்தார்கள் என்றால், அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். நேர்மைக்கும் நம்மை ஆளும் கட்சிகளுக்கும் துளி சம்பந்தம் உண்டா? ஒன்று படித்து இருக்க வேண்டும். இல்லை நேர்மை இருக்க வேண்டும். இரண்டும் இல்லை. பணம் சம்பாதிக்கும் ஆசை ஒன்று தான் உண்டு. அதன் விளைவு தான் இந்த படங்களும் சென்னையின் இன்றைய நிலைமையும்!!

வேளச்சேரி அந்தோணி பள்ளி சந்திப்பு


சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் தான் அதிமுக அரசின் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறத்திற்கு எடுத்துக்காட்டு. சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையில் கூரை கிடையாது. சமதளமான ஒரு சாலை கிடையாது. மழை நீர் வடிகால் இருக்காது. ஆனால், அம்மாவைப் பாராட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்திருக்கும் ஒரு கட்-அவுட் 5 வருடத்திற்கு கண்டிப்பாக பேருந்து நிறுத்தத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜால்ராவின் மொத்த உருவம் தான் இந்த அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும்!!! எனவே அடுத்த வருடமும் இதே நிலைமை தான்.. துரைமுருகன் (திமுக பொதுப்பணித்துறை அமைச்சர்), மு.க.ஸ்டாலின் (திமுக உள்ளாட்சித்துறைஅமைச்சர்), மா.சுப்பிரமணியன் (முன்னாள் சென்னை மேயர்) பதில், சைதை துரைசாமியை (இன்றைய சென்னை மேயர்) திட்டிக் கொண்டிருப்போம்!!

டான்சி நகர் குப்பைக் கூளம்

எனது வீட்டிற்கு பக்கத்தில்

சரி திமுக அதிமுக தான் இப்படி என்றால், இவர்களின் மாற்றாக தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் தேமுதிக அவர்களை விட மோசமாக கொள்கைகளே இல்லாமல் இருக்கிறது. என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.சென்னையை விட்டு போய் விடலாம் என்றால், படித்த படிப்பிற்கு வேலை இங்கே மட்டும் தான் இருக்கிறது, கிடைக்கிறது. சொந்த ஊருக்கு போய் விடலாம் ஆனால், சொந்தமாக தான் வேலை தொடங்க வேண்டும். இல்லை வைத்திருக்கும் பணத்தை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.


இப்பொழுது தான் புரிகிறது வெளிநாடுகளுக்கு போகும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதன் காரணம். அங்கே எல்லாம் பிரச்சினை இல்லை என்பதல்ல. ஆனால் இது போன்ற வாழ்வாதார பிரச்சினைகள் இல்லை. பிறந்த நாட்டிற்கும் கல்வி கொடுத்த ஊருக்கும் ஏதும் செய்யாமல் ஓடிப் போகும் மகனிடம், "தேவர் மகன்" சிவாஜி கூறும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. விதை விதைத்தவுடன் பழம் சாப்பிட வேண்டும் என்றால் முடியாது என்று எனக்கும் புரியும். ஆனால் விதை விதைக்கப் படுகிறதா என்றாவது தெரிய வேண்டுமே?? நான் தான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறேன். என் சந்ததியினருக்காவது தேர்ந்த வாழ்க்கை கிடைக்குமா என்பதாவது தெரிய வேண்டுமே!!

பாரதி கடவுளிடம் முறையிடுவது போன்ற ஒரு காட்சி பார்த்து இருக்கிறேன் "பராசக்தியே! காலையில் எழுந்தவுடனேயே பணப்பிரச்சினை. குழந்தைக்கு காய்ச்சல், எனக்கு ஏற்பட்டு இருக்கிற புதிய பழக்கத்தினால் தலை வேறு கிறுகிறுக்கிறது. நான் என்ன செய்வேன்? என்னை இந்த அற்பமான அரிசி உப்பு பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்ய மாட்டாயா? .... கடைசியாக சொல்கிறேன் நீ இப்படி எல்லாம் என்னை அற்ப தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தால் நான் நாஸ்திகனாகி விடுவேன்". இதே நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.

அடுத்த தேர்தலிலாவது படித்த நேர்மையானவர்கள், அநீதியைக் எதிர்ப்பவர்கள், மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நிர்வாகம் சீர்பட வேண்டும். அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நானும் இந்த நாட்டை விட்டு வெளியே செல்ல தான் வேண்டி இருக்கும். 

Saturday, March 26, 2011

தலைப்பெல்லாம் தேவையில்லை!!

தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கான தொடர் அடையாளமே திமுக அதிமுக ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள். திமுக தலைமைக்கு ஒரு அரிய இடம் தமிழக அரசியலில் உண்டு. எந்த விதமான மோசமான உத்தியையும் அவர்கள் தான் முதலில் அறிமுகப் படுத்துவார்கள். நான் இப்போது நடப்பவற்றை வைத்து கூற வில்லை. கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே அப்படிதான்!

கேடு கெட்ட கூட்டணி அரசியல், மொழி உணர்வைத் தூண்டி அரசியலில் தன்னிடத்தை உறுதிபடுத்துதல், சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது (1967). மதுவை அரசாங்கமே விற்பது, ஊழல் (1967 - 1974), இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் (2006 - 2011) என தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து புற்று நோய்களுமே திமுகவின் முத்திரைகளே! 

திமுகவின் இந்த போக்கினை, நியாயமாக மக்கள் எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால், மக்களோ, திமுகவை எதிர்த்த கட்சிகளோ, அதைச் செய்யாமல், அவர்களை அடக்க அவர்களின் பல்லையே பயன் படுத்தினார்கள். சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது என்னும் உத்தியைப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர், திமுகவை தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சி பக்கம் எட்டி பார்க்க கூட விடவில்லை. அதைத் தான் இன்று ஜெயலலிதா செய்திருக்கிறார். கருணாநிதியின் இலவசங்களை தோற்கடிக்க தானும் இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார். தமிழகத்தின் நிலைமை ஆங்கிலத்தில் சொல்வதானால் ஒரு "catch 22"  மாதிரி ஆகிப் போய்விட்டது.

கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா.

அரசியல்வாதிகளிடம் போய் கேட்டால், "மக்கள் இலவசங்களையும் ஓட்டுக்கு பணத்தையும் தான் விரும்புகிறார்கள். வரிசையில் நிற்க விரும்புவதில்லை. வேலை சீக்கிரம் ஆக வேண்டியதன் காரணமாக லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் இலவசங்களை எதிர்த்தால் எங்களைத் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள். கூட்டணி வேண்டாம் என்று தனியாக நின்றால் புறக்கணிக்கிறார்கள். பின்னர் நாங்கள் என்ன செய்வது? இலவசங்களும் கூட்டணி தான் எங்களைக் காப்பாற்றுகிறது". அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மக்கள் தான் ஊழலையும் இலவசத்தையும் ஆரம்பிப்பதாக தெரியும்.

"ஊழலற்ற ஆட்சி என்பதே கானல் நீர். எதை வைத்து நம்புவது? போன வருடத்தில் மட்டும், ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் என கணக்கிலடங்கா பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சி புரிந்து தங்கள் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் செழிப்புற செய்திருக்கிறார்கள் தவிர சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன நடந்திருக்கிறது? யார் வந்தாலும் ஒன்று தான். கட்சியையோ அரசையோ நம்பி பயனில்லை. எங்கள் பணம் தான் எங்களைக் காப்பாற்றும். அதைச் சம்பாதிப்பது தான் எங்கள் குறிக்கோள். அதனால் தான் பணமோ பொருளோ எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்." இது தான் மக்களின் எண்ணம். 

கேள்வி எண் 1) இதில் யார் முதலில் மாறுவது? மக்கள் மாற வேண்டுமா? இல்லை அரசியல்வாதிகளா? எப்படி மாற்றம் கொண்டு வருவது?

வியாபாரமும் சுயநலமே வாழ்வியல் நோக்கம்

எல்லாவற்றையும் வியாபாரமாகவும் பணமாகவும் பார்ப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம். மொழி உணர்வைத் தூண்டி தமிழ் உணர்வை ஒன்றுப்படுத்தியது திமுகவின் தவறில்லை. ஆட்சிக்கு வந்த பின் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது தான் தப்பு. இன்று வரை தமிழை ஆட்சி மொழியாக்க முடியாததும் அதற்கு முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பது தான் கோளாறு. அதை ஓட்டு சம்பாதிக்கும் உத்தியாக, ஆட்சிக்கு வர பயன்படும் ஒரு வழியாக்கியது தான் பிழை. அதனால் தான், "உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம் ஹிந்தி என்று எல்லா மொழிகளையும் படித்து விட்டு பல்லாயிரம் கோடி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், ஆனால் நாங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமா" என்று தமிழக மக்கள் கருணாநிதியிடம் கேட்கிறார்கள். தமிழ் மீதுள்ள பற்றால், சிலர் தமிழ் படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. "கற்றது தமிழ்" படம் பார்த்தீர்கள் தானே! பின்னர் தமிழ் படிக்க யார் வருவார்கள்?

+2 வில் பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும் நண்பர்கள் எனக்கும் உண்டு. இதே அவர்கள் பிரெஞ்சு மொழியில் மீதுள்ள ஆர்வத்தில் படித்தால் நாமும் ஆதரிப்போம். ஆனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாது என்று தானே படித்தார்கள். மாணவர்கள் படிப்பதையே வியாபாரமாக பார்த்தால், அவர்கள் நாளை அதிகாரிகள் ஆகும் பொழுது லஞ்சம் வாங்காமல் ஏதேனும் காரியம் செய்வார்களா?

அதே போல் தான் மதுவும் டாஸ்மாக் பிரச்சினையும். மது விலக்கு அமலில் இருந்த போதும், குடிப்பவர்கள் இருந்தார்கள் என்றாலும், ECR சாலையில் குடித்து விட்டு வண்டியோட்டி சாகவில்லை. எல்லாவற்றையும் விட மாணவர்கள் கையில் மது பாட்டில்கள் போனது தான் மிகப் பெரிய பிழை. கல்லூரியில் படிக்கும் போது, தன் சொந்த சம்பாத்தியம் இல்லாத போதும், குடித்து விட்டு வரும் மாணவர்கள் தமிழ் நாட்டில் உருவாகுவதற்கு அரசின் டாஸ்மாக் கொள்கைகளும், சாராயம் எளிதில் கிடைப்பதும் தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா? அரசு தொடங்கினாலும், மாணவர்கள் யோசிக்காமல் போவது ஏன்? இன்று பேஸ்புக்கில் திமுக அதிமுக வை விமர்சிப்பவர்கள் பலரும் தங்கள் கல்லூரி காலத்தில் சாராயம் குடித்து தவறான உதாரணமாக இருந்தே உள்ளனர். போதையில் அதி வேகமாக வண்டி ஓட்டி நண்பர்களிடம் தங்கள் பராக்கிரமத்தை காட்டி பெருமை பட்டுள்ளனர். 

கேள்வி எண் 2) 1967ல் மொழி போராட்டத்தில் தமிழுக்காக உயிர் விட்ட மாணவர்களின் சிந்தனை எப்படி இருந்தது? இன்று குடித்து விட்டு, பஸ் டே என்று பொது சொத்தை நாசமாக்கும் மாணவர்கள் எங்கே?

கடைசியாக...

அடிமைப் பட்டு கிடந்த நாம் விடுதலை பெறுவதற்கு, போராட்டத்தில் தங்களைப் பற்றியோ, பணம் சம்பாதிப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் ஈடுபட்டதே காரணம். ஜாலியன் வாலா பாக் படுகொலையில் உயிரிழந்த குழந்தைகளை எண்ணிப் பாருங்கள்.  அந்த குழந்தைகளுக்கு நாம் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம். விடுதலை போராட்ட காலத்திலும் அரசியலை தவமாகவும், அதில் ஈடுபடுவதையும் தியாகமாகவும் கருதிய இந்தியர்கள், தமிழர்கள் இன்று சுயநலமாகவும், வியாபாரிகளாகவும் மாறிவிட்டனர். 

தமிழ் நாட்டில் இந்தியாவில், ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. நான் கூறுவது தேர்தல் கட்சி அளவிலான மாற்றத்தைப் பற்றி அல்ல. சமுதாயம் அளவிலான மாற்றம். வியாபார நோக்கை விடுத்து, வாழ்வியல் முறைகளை வளப்படுத்தும் மாற்றம். 

தியாகமே மாற்றத்திற்கான முன்னுரை. அதை நாம் செய்யத் தான் வேண்டும். மாற்றம் எப்படி நிலையானதோ, அது மாதிரி தான் தியாகமும். அது நிலையானது மட்டுமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வியல் முறைகள் மனித சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் இருக்காது.

நண்பர்களே, இந்த தளத்தை ஒரு பொழுது போக்கும் இடமாக பார்ப்பவர்களே அதிகம். மாறாக இங்கிருந்து சிந்திப்பதற்கு பொருள் எடுப்பவர்கள் குறைவு. எனினும் இன்னும் சமுதாயம் மீதுள்ள நம்பிக்கையினாலும், எகிப்து புரட்சி கொடுத்த தைரியத்தினாலும் தான் இங்கு எழுதுகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு அமைப்பினை ஏற்படுத்தி மாற்றத்திற்காக பாடுபடலாம். கொள்கைகளை அமைத்து மக்கள் மற்றும் நம் பிரச்சினைகளுக்காக போராடலாம்.  ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி தியாகம் செய்ய வேண்டி இருக்க வேண்டும். உயிர் தியாகம் எல்லாம் இல்லை. உங்கள் பணத் தியாகமோ அல்லது நேரத் தியாகம் மட்டும் தான். இந்த மாற்றம் ஏற்படாவிட்டால், நம் குழந்தைகள் / அடுத்த தலைமுறை இந்த சமுதாயத்தில் படும் பாட்டை நாம் இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு பார்த்து, நிம்மதியில்லாமல் தான் சாக வேண்டியிருக்கும். 

Wednesday, January 12, 2011

சீமானுக்கு ஒரு கடிதம்!!

"அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வேன் - சீமான்.."

நான் எதிர்பார்த்தது போலவே நடந்தேவிட்டது. ஆனால் மகிழ்ச்சி இல்லை. உங்களின் எல்லா கொள்கைகளிலும் உடன்பாடு இல்லையென்றாலும், இலங்கையில் உள்ள ஈழ தமிழர்களுக்கு வாழ்வில் ஏதேனும் திருப்பம் ஏற்பட, அவர்களுக்கு ஒரு சுகாதாரமான அன்றாடம் உணவு கிடைக்கும் ஒரு வாழ்வு கிடைக்க உங்கள் வலிமையும் பேச்சும் நெஞ்சுரமும் பயன்படும் என்று நம்பினேன். நம்புவர்கள் உள்ளனர் தமிழ்நாட்டில். ஆனால் அது எல்லாம் போய்விட்டது இந்த அறிவிப்போடு.

தமிழ்மக்களின் ஆதரவே இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழரின் வாழ்க்கை மாற்றத்திற்கு முக்கியம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தால் தான், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழ்மக்களின் ஒற்றுமையும் ஆதரவும் உள்ளது என்று உலகுக்கு தெரிய வரும் என்ற கணக்கு சரியானது தான். ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதும், தமிழ்மக்கள் ஆதரவைக் காண்பிப்பதும் முதல் படி மட்டுமே. இரண்டாவது படி உங்கள் கோரிக்கையைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற கூட்டணி மூலமாக அரசாங்கத்தை ஏற்க வைப்பது. ஆனால் நீங்கள் ஆதரிக்கப் போகும் கூட்டணியின் தலைவி அந்த உத்தரவாதத்தைத் இன்னும் தராத போது, தேர்தலுக்குப் பின்னர் ஈழத்தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, அவர்தம் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வர உங்கள் திட்டம் தான் என்ன?

சரி, எல்லாவற்றையும் திட்டமிட முடியாது தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக தன் முந்தைய ஆட்சிக்காலங்களில் பொடா சட்டங்களின் மூலம் ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு ஆதரவாக பேசியவர்களைச் சிறையில் வைத்தவர்கள் கூடவா போய் கூட்டுச் சேர்வது? இரண்டு மாதத்திற்கு முன்னர் நாங்கள் வேண்டுமானால் ஆதரவு தருகிறோம், திமுகவை கழட்டி விடுங்கள் என்று காங்கிரஸில் போய் தஞ்சம் அடைந்தவர்களா ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு உதவப் போகிறார்கள்? அதிமுகவுக்கு ஆதரவு - இது கண்டிப்பாக அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு. ஈழப் பிரச்சினையை அரசியலாக்கி, அதிமுக கூட்டணிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்க பயன்படப் போகிறீர்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

இதுவரை நான் எழுதியது எல்லாம் ஈழத்தமிழரைக் கருத்தில் கொண்டு. இனிமேல் எழுதப்போவது தாய்தமிழகத்து மக்களைக் கருத்திற் கொண்டு. திமுக கூட்டணியால் தமிழக உரிமைகள் காக்க படவில்லை (முல்லை பெரியார், காவிரி), அது ஒரு ஊழல் கூட்டணி, குடும்ப அரசியல், என்று எண்ணற்ற காரணங்களைச் சொல்லி நீங்கள் சேர்ந்திருக்கும் இடத்திலும் இவை அனைத்தும் உள்ளன. பின்னர் எப்படி தமிழர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்? நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். ஆனால் எங்களுக்கு திரும்பவும் அதே நிலைமை தான்.

அண்மையில் வந்த சுடுகாட்டு கூரை ஊழல் தீர்ப்பு போதுமே, இதைப் புரிந்து கொள்வதற்கு. அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டு கூரையில் ஊழல் செய்ததற்காக, அடுத்து வந்த திமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் அதிமுக அமைச்சர் செல்வகணபதி. அவர் இப்பொழுது திமுகவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார்.  சுடுகாட்டு கூரை ஊழலும் மறக்கப்பட்டு விடுதலையும் "வாங்கி விட்டார்".  ஆக ஊழலில் இரண்டு கட்சிகளுமே ஒன்று தான்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவிகள் எரிப்பு என்றால், திமுக ஆட்சிக்காலத்தில் தினகரன் அலுவலகம் எரிப்பு. திமுக அரசு உமா சங்கர் IASஐ தூக்கி எறிந்தது என்றால், அதிமுக எல்லா அரசு ஊழியர்களையும் சிறையில் அடைத்தது. திமுகவில் அழகிரி,ஸ்டாலின்,கனிமொழி, தயாநிதி; அதிமுகவில் சசிகலா, தினகரன், சுதாகரன். திமுக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஊழல். அதிமுக ஆட்சியில் கணக்கில் அடங்கா ஊழல்கள்.  திமுகவிற்கு சீமான் என்றால், அதிமுகவிற்கு செரீனா. இப்படி இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருக்கும் போது, திமுகவை எதிர்த்து விட்டு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்பது உங்கள் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, திமுக அதிமுக யார் வந்தாலும் நடக்கப்போவது ஊழல் குடும்ப ஆட்சி தான். இதை மக்கள் நன்றாகவே அறிந்து உள்ளனர். எனவே தான், எந்த ஆதரவு இல்லாமல் வந்த விஜயகாந்த் 11% வாக்குகள் பெற முடிகிறது. ஆனால் பிற கட்சிகளான பாமக மதிமுக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் ஆகியவை திமுக அதிமுகவை விட்டு வராமல் சேர்ந்தே இருப்பதால் தான் திமுக அதிமுக முக்கிய கட்சிகளாக இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது. மற்ற கட்சிகள் இரண்டாம் நிலை கட்சியாகவே இருக்கிறது. அதே நிலைமையை நோக்கித் தான் நீங்களும் இப்போது பயணப்பட போகிறீர்கள்.

மொத்ததில் உங்கள் அதிமுக ஆதரவு பிரச்சாரம் ஜெயலலிதாவுக்கு ஆட்சியைப் பிடிப்பதை இன்னும் கொஞ்சம் எளிதாக்கப் போகிறது. மற்றபடி தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் அதே நிலைமை தான் இன்னும் 5 வருடத்திற்கு.மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் முடிவை. இல்லா விட்டால் நீங்கள் இன்னுமொரு வைகோவாக கூடிய சீக்கிரம் ஆகப் போகிறீர்கள்.