இன்று என் மனதை மிகவும் பாதிக்கும் படியாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் எதிர்பார்க்க வில்லை. இப்படி ஒரு விடயம் நடந்தால் நான் இவ்வாறு பாதிக்கப் படுவேன் என்று.
மார்ச் 21 2009. என் அக்காவின் இளைய குழந்தை பிறந்த நாள். சரி, எல்லாரும் நல்ல நாட்களில் பிறருக்கு உதவுகின்றார்களே நாமும் செய்வோமே என்று, இன்று காரபாக்கம் அருகில் உள்ள ஒரு இல்லத்திற்கு சென்றேன். போகும் போது என் நண்பரையும் கூட்டிக் கொண்டு போனேன். நண்பருக்கு மார்ச் 16 பிறந்த நாள். ஆதலால், அவரும் உதவ தயாராக இருந்தார். நாங்கள் கொஞ்சம் (70 பாகங்கள்) இனிப்பு (பால் பேடா) வாங்கிக் கொண்டு சென்றோம்.
காரபாக்கம் டிசிஎஸ் (TCS) அலுவலுகம் தாண்டி சென்றால், இடது பக்கத்தில் ஒரு கருணை இல்லம் உள்ளது. பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினோம். ஒரு பத்தடி தூரத்தில் இரு பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடை அணிந்திருந்தனர். இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி இருந்து கொண்டிருந்த இரு பெண்கள் நாங்கள் வருவதைப் பார்த்து, எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.
எங்களை அன்போடு வரவேற்றனர். நாங்கள் வந்த காரணத்தை அவர்களாகவே தெரிந்து கொண்டு, யாருக்கேனும் பிறந்த நாளா இல்லை வேறேனும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் நடந்துள்ளதா என்று கேட்டனர். நான் உடனே "எங்க அக்கா குழந்தைக்கு பிறந்த நாள்" என்று கூறினேன். அப்படியே நாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புக்களை அவர்களிடம் கொடுத்தேன். ஓ அப்படியா! நாங்க அவங்களுக்குகாக wish பண்ணி விட்டு pray பண்றோம் என்று கூறினர்.
அப்புறம், அவர்களைப் பற்றி பேசும் போது, அங்கு 180 குழந்தைகள் இருப்பதாக தெரிந்தது. இனிப்பு காணாதே என்று மேலும் ஒரு 500 ரூ எடுத்து கொடுத்தேன். எங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி கேட்டு கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அங்கு ஆசிரியர்களாக வேலை பார்த்து கொண்டிருப்பதாக தெரிந்தது. ஒருவருக்கு திருப்பத்தூர் என்று கூறினார்கள்.
சரி குழந்தைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு தியான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம்.
தியான வகுப்பினில் ஒரு பையன் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தான் என அங்கு மேற்பார்வையிடும் ஆசிரியர் வெளியே கொண்டு வந்து விட்டார். ஏனோ தெரிய வில்லை அந்த பையனைப் பார்ப்பதற்கு எனது அக்காவின் இளைய குழந்தை போலவே இருந்தது. வெளியே வந்த பின்னரும், பையன் குறும்புகள் பண்ணிக் கொண்டுருந்தான். வகுப்பிற்கு உள்ளே எட்டி பார்த்து கொண்டிருந்தான்.
அவனை அருகில் கூப்பிட்டு என்னுடன் வந்த நண்பர் பேச ஆரம்பித்தார். அவன் பெயர் வேல்முருகன் என்று கூறினான். டிரவுசரில் உள்ள ஊக்கு பிய்ந்து இருந்ததால், மீண்டும் மீண்டும் அதை பிடித்து சரி செய்து கொண்டிருந்தான். வயது ஒரு 6 - 7 இருக்கும்.
அவன் கையைப் பிடித்து பேச ஆரம்பித்தார். ஏனோ என்னால் அவனோடு நன்றாக பேச முடியவில்லை. எங்களோடு பேசிக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவர் "அவன் கிட்ட அவங்க அம்மா phone number கேட்டு பாருங்க" என்று கூறினார். நண்பர் கேட்டார். வேல் முருகன் "0000" என்று ஆரம்பித்து சில எண்கள் கூறினான். அதைக் கேட்டு ஆசிரியர் "அவனுக்கு மட்டும் number எல்லாம் 0 ல தொடங்கும்" என்று சிரித்தார்.
என்னால் சிரிக்க முடியவில்லை. அவன் அம்மாவை அவனுக்கு தெரிய வில்லை என்று கவலைப் படுவதா? இல்லை அதையும் அவன் கண்டு கொள்ளாமல் விளையாட்டாக எண்களைச் சொல்கிறானே என்று அவனைப் பாராட்டுவதா என்று?
அதோடு அவன் அவ்வ போது தன் கை விரல்களுக்கு நடுவே சொரிந்து கொண்டே இருந்தான். பார்த்த போது, கொஞ்சம் ஆங்காங்கே பொரிந்து இருந்தது. அதுவே அவனைச் சொரிய வைத்தது. இதையெல்லாம் பார்த்து கொண்டே இருந்த போது, என் கண்களில் தானாக நீர் கோர்த்து கொண்டது. ஏனென்றே தெரியவில்லை.
பின்னர் அனுராதா என்ற இன்னொரு பெண்ணிடமும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு பிறகு வந்து விட்டோம். பயமாக இருந்தது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் அழுது விடுவோம் என்று.
இந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில் வந்து பிறந்ததைத் தவிர? அவர்கள் உடலிலுள்ள சிறு பிரச்சினைகளைக் கூட பார்த்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை. ஆனால் என் அக்கா குழந்தைக்கோ பிறந்த நாள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் எல்லா வித கவனிப்புகள். ஏன் இந்த முரண்பாடு? யாருடைய தவறு இது?
சரி எனக்கு தெரிந்தது ஒரு வேல்முருகன் அனுராதா தான். இன்னும் எத்தனையோ பேர் இதை விட மோசமான நிலையில் இருக்கிறார்கள். ஈழத்து மக்களையெல்லாம் நாம் சென்று பார்த்தால் மனம் நொந்து வாழ்க்கையின் மீது உள்ள பற்று போய்விடும் என்று நினைக்கிறேன். உலகிலேயே ஒருவர் கண்ணெதிரில் துன்பப்படும் போது, உதவ வேண்டும் என்று நினைத்தாலும், வழி தெரியாமலும், உதவி செய்யும் நிலையில் இல்லாமல் இருப்பது தான், மிகப் பெரிய தண்டனை. இதைப் பற்றி நினைத்துக் கொண்டு, நாட்டில் நடக்கும் நான் தான் பெரியவன் என்ற சண்டைகளும், வெற்றி மிதப்பில் மனிதன் செய்யும் அராஜகங்களையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
இனிமேல் யாரேனும் உங்களிடம் வந்து கர்வத்தோடு பேசும் போது இதைப் பற்றிக் கூறி எப்படி இந்த குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கேளுங்கள். அமைதியாக திரும்பிச் செல்வர்.
என்னால் முடிந்தது இவை தான்.
முன்பு நிறைய தடவை வெளியே சாப்பிட்டு ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 1200 - 2000 ரூக்கு வெளியே சாப்பிட்ட நான் அதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். மாதம் ஒரு முறை வேல்முருகன் அனுராதா மற்றும் பிற குழந்தைகளைப் போய் பார்க்க வேண்டும் எங்களால் இயன்ற அளவு உதவி செய்வது என்று முடிவு செய்தோம்.
இதெல்லாம் போக, அந்த இரு பெண் ஆசிரியர்களை நினைத்துப் பாருங்கள். வேல் முருகனின் நம்பர் விளையாட்டை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளும் மன தைரியத்தை என்னவென்று சொல்வது? அவர்களைப் போன்றவர்கள் தான் உண்மையான வீராங்கனைகள், மன திடம் உள்ளவர்கள்.
1 comment:
Yen manathai thottavai.
Post a Comment