பொதுவாக உடனுக்குடன் பதிவுகள் எழுதும் பழக்கம் கிடையாது எனக்கு. ஆனால் இன்றைய நீயா நானா நிகழ்ச்சி பார்த்தப்பின் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற உந்துதல். இன்றைய கல்லூரி மாணவர்கள் / மாணவிகளுடன் தமிழகத்தின் பிரபலமான சில சமூக சிந்தனையாளர்கள் பங்குபெற்ற ஒரு விவாதமே இந்த வார நீயா நானா. மாணவ சமுதாயத்தின் விழிப்புணர்வை மதிப்பீடு செய்வதே நிகழ்ச்சியின் நோக்கம். அந்த நிகழ்ச்சியைப் பற்றியதே இந்த பதிவு.
தொலைத்தொடர்பும் அதன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானமும் அதிகரித்து உள்ள இன்றைய சூழலில், யாரிடம் இருக்கிறதோ இல்லையோ, எப்பொழுதும் facebookம், IPhoneனுமாய் இருக்கும் மாணவ மற்றும் இளைய சமுதாயத்திடம், சமூக விழிப்புணர்வு அதிகம் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படும். ஆனால் அப்படி இல்லை என்று எனக்கு முன்னமே தெரியும், என் சொந்த அனுபவங்களில் இருந்து. இன்று நீயா நானாவில் நடந்ததைப் போன்று நான் ஏற்கனவே நிறைய பார்த்து இருக்கிறேன். உடனே ஞாபகம் வருவது தான் கீழே:
2008ல் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது, நண்பர்கள் இலங்கைப் போரைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு வாக்கெடுப்பு செய்தோம். அந்த வாக்கெடுப்பு எல்லாருக்கும் அனுப்பப்பட்டது என்றாலும், அதில் பங்கேற்றது வெறும் 18% பேர் மட்டுமே. அதிலும் 7% பேர் "நான் இதைப் பற்றி கருத்து ஏதும் கூற இயலாது ஏனென்றால் அந்த பிரச்சினை என்னவென்றே எங்களுக்கு தெரியாது" என்று வாக்கு அளித்தனர். நண்பன் ஒருவன் "இதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எனக்கு விருப்பம் கிடையாது, இது போன்ற அஞ்சல்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று தாழ்மையுடன் கோரிக்கை அனுப்பி இருந்தான் :).
மேற்சொன்ன செய்தியைப் பகிர்ந்து கொள்வது இலங்கைப் போரில் எந்த பக்கத்தையும் ஆதரித்து பேசுவதற்காக அல்ல. ஏறத்தாழ 20 - 25 வருடங்களாக இந்தியா மற்றும் தமிழகம் பங்குப்பெற்று வரும் ஒரு பிரச்சினையில் கருத்து சொல்வதற்குத் ஒன்றும் இல்லை அல்லது விருப்பமே இல்லை என்பதை பாமர மக்கள் சொன்னால் விட்டு விடலாம் ஆனால் நாட்டின் தலையாய பொறியியற் கல்லூரியில் ஒன்றில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூறினால் அதை விட அபத்தம் ஒன்று இருக்கிறதா? "எனக்கு தேவையான பணத்தை என் வேலை கொடுக்கிறது, நான் அதைச் செய்கிறேன். நான் ஏன் பிறர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கருத்து கூற வேண்டும்" என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது. இப்படி நான் ஏற்கனவே சமுதாயத்தைப் பற்றி அறிந்து மனம் வெம்பி போயிருந்த சம்பவங்களை ஒத்து இருந்தது இன்றைய நீயா நானா. என்னுடைய புலம்பல்களுக்கு ஒரு துணை சேர்ந்தது.
- தமிழ் மீனவர் பிரச்சினை பற்றி, "எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. மீன் கடையில் வாங்குவோம், சாப்பிடுவோம்"
- தமிழ் இலக்கியம் படித்து கொண்டிருக்கும் முதுகலை மாணவர் ஒருவரால் சமகால தமிழ் எழுத்தாளர்கள் 3 பேரைச் சொல்ல முடியாத நிலை,
- தமிழ் நாளிதழ்கள் படிப்பவர்களைப் பிற மாணவர்கள் கேவலமாக பார்க்கின்றனர் என்ற ஆங்கில மோகம்,
- ஊடகங்களுக்கு அடிமையாகி, ஊடகத்தால் எந்த கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறதோ அவையே உண்மை என்றெண்ணுவது,
- எல்லாருடைய நண்பர்களும் டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக இருப்பது,
- கூடங்குளத்தைப் பற்றிய பார்வையில் தெளிவின்மை,
- எந்த அரசியல் கட்சிக்கு உங்கள் ஆதரவு என்றால், வெகு எளிதாக "No Idea",
நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீட்டுக்குப் போனவர்கள் உடனே இந்த பிரச்சினைகளைப் பற்றிய கட்டுரைகளை எடுத்து படித்து இருப்பார்களா என்றால் சந்தேகமே! கிடைக்காமல் போனதால் தான் படிக்காமல் விட்டு விட்டார்கள் என்று நாமே கொண்டு போய் கொடுத்தாலும் அவர்களை வாசிக்க வைத்து புரிய வைக்க முடியும் என்று நான் எண்ணவில்லை. ஏனென்றால் ஓரே நாளில், ஓரே நிகழ்ச்சியில் மாறுவதற்கு மந்திரங்கள் ஒன்றும் நம்மிடம் கிடையாது. அதோடு எந்த செயலையும் செவ்வனே செய்வதற்கு ஆர்வம் என்பது இயல்பாகவே இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது.
தேர்தலில் ஓட்டு போட வயது ஆகிவிட்ட பிறகும் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதையே சொல்லத் தெரியாமல் இருக்கும் இளைய சமுதாயத்தை ஆள ஒழுக்க சீலர்களா வருவார்கள்? கல்வியை நற்சிந்தனைகளை வளர்க்கும் மார்க்கமாக எண்ணாமல், பொருளீட்டும் கருவியாகப் பார்க்கும் இந்த நாடும் மாநிலமும் இன்னும் கெட்டுப் போகும். எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு தவறுகள் ஒரு நாள் எல்லை மீறிப் போகும் போது, இந்த நிலைமை மாறும். அதுவரை இப்படி தான். மாற்றி மாற்றி நிகழ்ச்சி நடத்தி நம் முகத்தில் நாமே அறைந்து கொள்ள வேண்டியது தான்!!
நிகழ்ச்சியின் உரலி : http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc