Sunday, July 14, 2013

கூடங்குளம் - சற்று நீளமான பதிவு


கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு வழியாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் தொடங்கிய திட்டம், நான் படித்து முடித்து, வேலைக்கு சென்று, பத்து வருடங்கள் வேலை பார்த்த பின்னர் தான் செயல்பாட்டுக்கு வருகிறது என்பது சிறிது நெருடலைத் தரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட தாமதத்திற்குக் காரணம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் பங்களிப்போடு அந்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. 80களின் கடைசியில் சோவியத் யுனியன் நிலைகுலைந்ததினால் ரஷ்யாவில் நிலவி வந்த அரசியல் நிலையாமைகளே, நீண்ட தாமதத்திற்கு காரணம். இல்லையென்றால் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்பாட்டுக்கு வந்து இருக்கும் என நம்புகிறேன்.

பொதுவாகவே நீண்ட தாமதங்கள் சமூகத்தில் விவாதக்களங்களை ஏற்படுத்தி, மக்களைத் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரித்துவிடும். அதற்கு கூடங்குளம் திட்டமும் விலக்கல்ல. இடிந்தகரையில் பல நாட்களாக / மாதங்களாக அணு உலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தினமலர் மற்றும் சில ஊடகங்கள், அப்துல் கலாம் மற்றும் பல அணு விஞ்ஞானிகள், அரசியல் கட்சிகள் அணு உலைக்கு ஆதரவாக கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இதில் எதை நம்புவது? சில மாதங்கள் அணு உலை மின்சாரத்தைப் பற்றி இணையத்தில் வாசித்தேன். அதைப் பற்றி நான் அறிந்தவற்றை எழுதுவதே இந்த பதிவு.

அணுஉலைகளைப் (Nuclear Reactor) பற்றிய அடிப்படை அறிவியல் 12ஆம் வகுப்பிலேயே டேவிட் சார் சொல்லி கொடுத்து படித்து இருக்கிறேன். இன்றும் அது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருக்கிறது. அதில் அணு உலைகள் மற்றும் அணு மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவியல் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அணு எரிப்பொருள் (Radioactive Fuel) இருக்கும் குழாய்களுக்குள் நியுட்ரான்களைச் (Neutron) செலுத்தினால், அணு எரிபொருள் பிளவு (Nuclear Fission) ஏற்படும். அணுப்பிளவின் போது வெளிவரும் அளப்பரிய ஆற்றலைக் (Energy) கொண்டு, நீரினைச் சூடேற்றி, அதிலிருந்து வரும் நீராவியை வைத்து, சுழலியின் (Turbine) சக்கரங்கள் / அலகுகளைச் (Blade)சுற்ற வைக்கப்படுகிறது. சுழலி ஒரு மின்னியற்றியுடன் (Electric Generator) இணைக்கப்பட்டுள்ளதால், சக்கரங்கள் / அலகுகள் சுற்ற ஆரம்பித்தவுடன், மின்காந்த தூண்டலின் மூலமாக (Electro magnetic Induction) மின்சாரம் உருவாகி, பக்கத்திலுள்ள மின் நிலையத்திற்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு தரப்படுகிறது.

அணு உலை மின்சாரம் தயாரிக்கும் முறை

மேற்சொன்ன வழிமுறையைக் கூர்ந்து கவனித்தால், சுழலியின் அலகுகள் சுற்ற ஆரம்பித்தவுடன், ஒரு காற்றாலை மின்சார நிலையத்திற்கும், அணுமின் நிலையத்திற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. காற்றாலை மின்சார நிலையத்தில் காற்றின் வேகம் அடிப்படையில் சுழலி சுற்ற ஆரம்பிக்கிறது. அணுமின் நிலையத்தில் அணு எரிபொருள் பிளவிலிருந்து வெளிவரும் ஆற்ற்லின் மூலமாக அலகுகள் சுற்ற ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு தொழில்நுட்பங்களும் ஒன்று தான். சுழலியின் அலகுகள் சுற்ற ஆரம்பிப்பதற்கு முன்னால் நடப்பவற்றில் தான் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். அதில் முக்கியமானவை மூன்று.

1) அணுக்கழிவுகள்:

அணுக்கழிவு என்பது மகாபாரதத்துத் துரியோதனனின் தொடை மாதிரி. துரியோதனனைக் கதாயுத்ததில் எங்கு அடித்தாலும் வலிக்காது. ஆனால் தொடையில் ஒரு அடி விழுந்தால் அவ்வளவு தான். தோல்வி உறுதியாகி விடும். அது போல், எவ்வளவோ சாதகமான கருத்துக்களை அணு மின்சாரத்திற்கு ஆதரவாக கூறினாலும்  அணுக்கழிவு என்ற ஒரே வார்த்தை போதும், அந்த அனைத்து சாதகங்களையும் தவிடு பொடியாக்கி விடும்.

காற்றாலையோ, புனல் மின் நிலையமோ கழிவு என்று எதையும் தருவதில்லை. அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் கழிவான கார்பன்டைஆக்சைடு (CO2) கேடு என்றாலும் உயிர் பறிக்கும் அளவுக்கு கேடில்லை. அதாவது உடனடி பாதிப்பு இல்லை. சுற்றுசூழலை மாசுபடுத்தி அண்டார்டிக்காவில் உள்ள பனிமலைகளை உருகச் செய்து கடல் மட்டத்தை அதிகரிப்பதில் மட்டுமே அதன் தாக்கம் உள்ளது. ஆனால் அணுஉலைகளில் வரும் கழிவு, அணு எரிபொருளின் மிச்சம். கதிரியக்க குணம் உடையது. அதாவது இந்த கழிவுகளை அணுமின் நிலையத்திற்கு வெளியே கொட்டினால் அதிலிருந்து வெளியே வரும் கதிரியக்கம் மக்களைப் பாதிக்கும். நோய்களை உண்டாக்கும். தலைமுறைகளைப் பாதிக்கும். எனவே அதனைப் கண்டிப்பாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது ஏதோ கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான பிரச்சினை என்று எண்ண வேண்டாம். இது உலகத்திலுள்ள அனைத்து அணுமின் நிலையத்திற்கான பிரச்சினை. இந்த பிரச்சினையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா 1988ல் தினமணியில் எழுதிய கட்டுரையின் சுட்டி. சுஜாதா அப்துல் கலாமின் வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


பிரான்ஸ் நாடு தன் மின்சாரத் தேவையை 75% அணு மின்சாரம் மூலமாகத் தயாரிக்கிறது. அப்படியென்றால் அந்த நாட்டில் இந்த பிரச்சினை இல்லையா? இருக்கிறது. அந்நாட்டின் அரசிற்கும் அணுக்கழிவுகள் பற்றிய பயம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. கச்சா எண்ணெய் கிடையாது, நிலக்கரி (Coal) கிடையாது, வருடத்தில் பாதி பனிக்காலம் என்பதால் சூரிய ஒளி மற்றும் நீர் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியாது. எனவே அவர்களுக்கு பயம் இருந்தாலும் அணுஉலை மின்சாரத்தை நோக்கி சென்றனர். எதிர்பார்த்தபடியே மக்கள் அச்சம் காரணமாக போராட்டம் நடத்தினர். மக்களிடம் பேசி புரிய வைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் மக்களிடம் சமரசம் ஏற்பட்டது. மண்ணுக்கடியில் புதைக்கப்படும் அணுக்கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டது என்று ஞாபகம் வைக்கப்படும். என்றாவது மக்களுக்கு கதிரியக்க பாதிப்பு வராமல், அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை கண்டறியப்பட்டால், புதைக்கப்பட்ட அணுக்கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டு பதப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல், அணுக்கழிவு கதிர்வீச்சு வெளியிடாமல் செய்வதற்கான ஆராய்ச்சியையும் ஆரம்பித்து உள்ளது. ஆராய்ச்சி முடிந்து வழிமுறை கண்டுபிடிக்கும் வரை, அணுக்கழிவுகளைப் புதைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அங்கு மட்டுமே புதைக்கப்படுகிறது. இன்று வரை அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கதிர்வீச்சு வெளியிடாமல் செய்வதற்கான வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. பிரான்ஸ் அணு மின்சாரம் பற்றிய சுட்டி:


அமெரிக்காவும் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவில்லை. அமெரிக்கா தான் உலகத்திலேயே அணுஉலைகள் மூலமாக அதிகமாக மின்சாரம் தயாரிக்கிறது. எனவே அவர்களிடம் அளவுக்கு அதிகமாக அணுக்கழிவுகள் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இவ்வளவு காலமாக அமெரிக்கா அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திற்கு உள்ளேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அணுமின் நிலையம் நிறைந்து விட்டதால், அதை அணுமின் நிலையத்திற்கு வெளியே மண்ணுக்கடியில் புதைத்து வைக்க யோசனை செய்து வருகிறது. நான் இப்பொழுது வாழும் கலிபோர்னியா மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான நெவடாவில் உள்ள யுக்கா மலைப்பகுதியில் புதைக்கலாம் என்று அவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். அது தொடர்பான சுட்டிகள்:


பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைவு. அங்கு மனிதர்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளைப் பார்ப்பது எளிது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் நெவடா ஒரு வறண்டு போன மாநிலம். சில இடங்களில் மனித நடமாட்டமே மிகவும் குறைவு. அந்த மாநிலத்தில் மக்கள் நடமாட்டத்தைப் பெருக்கவே உலகின் மிகவும் பிரபலமான கேளிக்கை நகரமான "லாஸ் வேகாஸ்" பல கேசினோக்கள் உருவாக்கப்பட்டது என்று கூட ஒரு கதை உண்டு. நெவடா போன்ற மாநிலங்களில், மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் அணுக்கழிவுகளைப் புதைத்து வைத்தால் பல வருடங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது அவர்களின் எண்ணவோட்டம்.

அப்படியென்றால் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகள் அணுமின் நிலையங்கள் அமைக்காமல் தானே இருக்க வேண்டும். ஆனால், நம்மை விட மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, தற்சமயம் நம்மை விட அதிகமாக அணுமின் நிலையங்களை கட்டி வருகிறது. கீழே உள்ள சுட்டியைப் பார்க்கவும். 


அணுக்கழிவுகளைச் சீனா பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து, மீண்டும் அணுமின்சாரம் தயாரிக்க பயன்படுத்த போவதாக கீழே உள்ள சுட்டி கூறுகிறது. எனினும் மறுசுழற்சி செய்த பின்னரும், முழுவதுமாக அது பாதுகாப்பாகி விடவில்லை. அதில் ஒரு பகுதியை மண்ணுக்குள் புதைத்து தான் வைக்கப் போகிறார்கள், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மாதிரி.


சரி சீனா என்னவோ செய்து விட்டு போகட்டும். நம் நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அணுக்கழிவுகளைப் புதைப்பதற்கு இடங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. அமைச்சர் ஒருவர் தெரியாமல், பயன்படுத்தாத கோலார் தங்க வயல்களில் புதைக்கப் போகிறோம் என்று சொன்ன அடுத்த நாளே கர்நாடக சகோதரர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டார்கள். நம் நாட்டின் மக்கள் தொகை அப்படி... மக்கள் வாழவே இடப்பற்றாகுறை இருக்கும் போது, அணுக்கழிவுகளைப் புதைக்க இடம் தேடுவது கடினம் என்றுதான் நினைக்கிறேன். எனவே அணுமின் நிலையத்தின் உள்ளேயே தான் அணுக்கழிவுகளை வைத்து இருப்பார்கள். ஒரு சில வருடங்களுக்கு இந்த உத்தி சரிப்பட்டு வரும். அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

2. அணு எரிபொருள்:

கழிவு என்பதே எரிபொருள் இருந்தால் தானே வரும். நம் நாட்டில் அணு உலை இயங்குவதற்கான எரிபொருளான உரேனியம் இருக்கிறதா என்று யோசிக்கவே இல்லையே.. உலகில் உள்ள மொத்த உரேனியத்தில் 1.5% மட்டுமே இந்தியாவில் உள்ளது. எனவே அணு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் உரேனியத்தை முதலில் இறக்குமதி செய்ய வேண்டும்.

உரேனியம் என்ன உருளைக்கிழங்கா? தேவைப்படும் போது ஏற்றுமதி இறக்குமதி செய்ய? அது இருந்தால் அணு ஆயுதம் செய்து விடலாமே. எனவே ஏகப்பட்ட கெடுபிடிகள். உரேனியத்தை இறக்குமதி செய்ய உலக அணு சக்தி கழகத்திடம் (International Atomic Energy Agency) இருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. ஏனெனில் ஒப்புதல் பெறுவதற்கு முதற்தகுதியே அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Non-Proliferation Treaty) கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டு விட்டால் நியாயமாக அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. ஆனால் நாலா பக்கமும் எதிரிகளை வைத்துக் கொண்டு இந்தியா எப்படி ஆயுதம் தயாரிக்காமல் இருப்பது? அது முடியாது. எனவே இறக்குமதி செய்யப்படும் உரேனியத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம் மட்டுமே தயாரிப்போம் என்று உறுதி அளிக்க இந்தியா தயாராக இருந்தது. இந்த உறுதிமொழி உலக அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற வழிவகுக்கவில்லை. ஏனெனில் அதற்கு பல நாடுகளின் ஆதரவு தேவை. குறிப்பாக அமெரிக்காவின் தயவு தேவை. எனவே இந்தியா (மன்மோகன் சிங்) மற்றும் அமெரிக்கா (ஜார்ஜ் புஷ்) தங்களுக்கு உள்ளே ஒரு ஒப்பந்தம் (123 Agreement / Hyde Act) செய்து கொண்டனர். இந்தியாவின் அணுமின் நிலையங்கள் அனைத்தையும் உலக அணு சக்தி கழகம் கண்காணிப்பதற்கு இந்தியா ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான் சாராம்சம். இந்த ஒப்பந்தத்தின் வழியாக, இந்தியா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே, உரேனியம் இறக்குமதி செய்ய உலக அணு சக்தி கழகம் ஒப்பந்தம் அளித்தது. 123 Agreement / Hyde Act இன்னும் ஒரு முக்கிய கட்டுப்பாடும் உள்ளது. அது இந்தியா அணு ஆயுதங்கள் சோதனை செய்யகூடாது என்பது. நாளைக்கே வாஜ்பாய் ஆட்சியின் போது போக்ரானில் அணுகுண்டு வெடித்த மாதிரி ஒரு சோதனை நடத்தினால், அவ்வளவு தான் உரேனியம் இறக்குமதிக்கு தடை வந்துவிடும். அப்புறம் எல்லா அணுமின் நிலையங்களின் மீது செலவழிக்கப்பட்ட பணம் ஸ்வாகா!!! 

சரி இந்தியாவுக்கு இப்படி ஒரு அனுமதி வாங்கி கொடுப்பதால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? அவ்வளவு பாசமா இந்தியா மீது அமெரிக்காவுக்கு? கூடங்குளத்திற்கு எப்படி ரஷ்யாவிடம் இருந்து அணு உலைகள் வாங்கினோமோ, அது மாதிரி இனி இந்தியாவில் அமைய இருக்கும் அணுமின் நிலையங்களுக்கு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து அணு உலைகள் வாங்க வேண்டும். ஏனெனில் புதிதாக நிறைய அணு உலைகள் நிர்மாணிக்க அமெரிக்காவிடம் திட்டம் கிடையாது. அதனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு உதவினால், அவர்களுக்கு வியாபாரம் நடக்கும்.

இப்பொழுது நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்றால், அவர்கள் நாட்டில் எண்ணெய் வளம் கிடையாது, நிலக்கரி கிடையாது, பாதி வருடத்திற்கு சூரியன் கிடையாது, பனிக்காலத்தில் காற்று வீசாது. ஆனால் நம் நாட்டில் அப்படியா? வருடம் முழுவதுமாக பயன்படுத்த சூரிய ஒளி மற்றும் காற்று இருக்கிறது. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு பயன்படும் அளவுக்கு நிலக்கரி இருக்கிறது. அந்த நூறாண்டுகளுக்குள் சூரிய ஒளி மற்றும் காற்று வழியாக மின்சாரம் தயாரிப்பதில் ஆராய்ச்சிகள் நடத்தி, அந்த வழிமுறைகளின் மூலமாக மின்சாரம் சீக்கிரமாகவும் அதிகமாகவும் உற்பத்தி செய்வது எப்படி என்று கண்டுபிடித்து செயல்படுத்தினால் உலகமே நம் வழிக்கு வரும். இன்னொன்றும் சொல்ல வேண்டும். சீனா, அமெரிக்கா பார்த்து அணு உலை மின்சாரம் காப்பி அடிக்கும் நாம், காற்றாலை மின்சாரத்தில் சீனா மற்றும் அமெரிக்கா முன்னோடிகளாக இருந்து உலகில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த பிரச்சினையில்லாத தொழில்நுட்பத்தைத் தான் கடன் வாங்கினால் என்ன?

அது சரி, நமக்கு சாதி சண்டைகள் போடவும், கௌரவ கொலைகள் செய்யவும், அடுத்தவரின் காதல் உண்மையானதா நாடகமானதா என்று கண்டுபிடிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே சூரிய ஒளி மற்றும் காற்று வழியாக மின்சாரம் தயாரிப்பது??

3. விபத்து பயம்:

"அணுஉலைகள் மீதான பயம், நடந்து மட்டுமே பழக்கப்பட்டவர்கள் திடீரென விமானத்தில் பயணம் செய்வதற்கு பயப்படுவது போலானது. அதாவது, விமானம் பறக்கும் பொழுது கீழே விழுந்து விட்டால் என்று பயப்படுவர்கள், நடக்கும் போது வண்டி இடித்து விடும் என்று பயப்பட மாட்டார்கள். இரண்டு தடவை விமானம் ஏறி பயணித்து விட்டால், விமானம் பற்றிய பயம் போய்விடும். இது வெறும் பழக்கமில்லாததால் வரும் பயம்" என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இந்த பயம் பழக்கம் பற்றியது மட்டும் அல்ல. 

இன்றைய மின்சாரம் தயாரிக்கும் முறைகளான அனல், காற்று, நீர் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட்ட நாளன்று அந்த நிலையங்களுக்கு பக்கத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். இரண்டொரு வாரங்களில் நிலைமை கட்டுக்கு கொண்டுவரப்பட்டவுடன், எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம். 

ஆனால், அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு, அதிலிருந்து கதிர்வீச்சு வெளியாகி விட்டால், நிலையத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகள், உணவுப்பொருட்கள் அனைத்தும் கதிர்வீச்சுக்கு உள்ளாகி வருடங்களுக்கும் பயன்படுத்த முடியாமல் போய்விடும். மனிதர்கள் மீது கதிர்வீச்சு பாய்ந்து விட்டால், அது அவர்களது தலைமுறையையும் காலம் காலமாக பாதிக்கும். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, புகுஷிமாவில் நிலத்தடி நீர் முழுதும் கதிர்வீச்சுக்குள்ளாகி விட்டதினால் அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என்று வாசித்தேன். 1986 ஆம் வருடம் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபிலில் நடந்த விபத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை கீழே உள்ள சுட்டியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.


அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அணுமின் நிலையத்தில் உள்ள பல அடுக்கு கட்டுமானங்கள் விபத்து நடக்கும் வாய்ப்புகளைக் குறைத்துள்ளது என்று விவரித்துள்ளனர். அதையும் மீறி விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியானால் அதை கையாள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உத்திகள் மீது நம்பிக்கை அளித்துள்ளனர். ஆனாலும் இந்த நம்பிக்கைகள், விபத்தின் கோர முகம், மக்களுக்குள் உண்டாக்கும் பயத்தைப் போக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்திய அதிகாரிகள் மற்றும் அரசின் மீதான ஊழல் புகார்களும், நேர்மையற்ற நடத்தையும் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கை. அதற்கு வலு சேர்ப்பது போல, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்த ரஷ்ய நிறுவனம் மீது ஊழல் புகார்கள் எழுந்து, அதன் இயக்குனர் செர்ஜி ஷுடோவ் ரஷ்ய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். போபால் விஷவாயு தாக்குதல் போது அரசாங்க இயந்திரம் செயல்பட்ட விதமும், அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் மறக்க கூடியதா என்ன?


மேற்சொன்ன எதுவுமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை. அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றைக் கூறுவதினால் கூடங்குளம் திட்டத்திற்கு நான் எதிரானவன் என்று கிடையாது. 1,500 கோடி செலவழித்து விட்டு, ஒரு துளி மின்சாரம் கூடத் தயாரிக்காமல் மூடச் சொன்னால் அது யதார்த்தம் ஆகாது. ஆனால் இந்திய அரசு அணுமின்சாரம் தயாரிப்பதில் பிற நாடுகள் போல் வெளிப்படைத்தன்மை வேண்டும். அணுக்கழிவுகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லத் தான் வேண்டும். அதை விடுத்து "உனக்கு நான் ஏன் சொல்ல வேண்டும்? அப்துல் கலாமை விட உனக்கு தெரியுமா?"  என்றெல்லாம் கேட்க கூடாது. கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு, உண்மையாக ஒரு ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே ஒரு ஆய்வு செய்து ஒரு அறிக்கை இணையத்தில் இருக்கிறது. அது அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அணுக்கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று தெளிவாகச் சொல்லவில்லை. அதோடு முக்கால்வாசி படங்கள் தெளிவாக இல்லை. சில படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. சில செய்திகள் இந்திய அணு ஆராய்ச்சி கழக இணையத்தில் ஏற்கனவே இருந்தவை தான். நான் மேலே அணு உலை மின்சாரம் தயாரிக்கும் முறை என்ற பெயரில் ஒட்டியிருக்கும் படம் கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. அதே படம் அந்த அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. அணு உலை பற்றி பிரத்யேகமாக ஒரு படம் கூடவா அறிக்கைக்காக உருவாக்கியிருக்க கூடாது?


கடைசியாக இன்று வேண்டுமானால் அணு உலைகள் மூலமாக மிக வேகமாக, சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிப்பது போல் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில்  வரவிருக்கும் பின்விளைவுகளை இந்திய அணுசக்தி கழகம் சிந்திக்க வேண்டும். அணுசக்தியை விமர்சிப்பவர்கள் இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் முழுக்க இருக்கிறார்கள். எனவே அணு மின்சாரத்தை பற்றிய விமர்சனத்தை அப்படியே விட்டு விட முடியாது. அணு மின்சாரத்திலுள்ள குறைபாடுகளைப் புரிந்து கொண்டு, விமர்சனங்களில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காற்று மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு அவற்றைக் கொண்டு மின்சார தன்னிறைவைப் பெறுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். பார்ப்போம்!!

Tuesday, March 26, 2013

இனி தான் ஆரம்பம்!

சற்றும் எதிர்பாராத வகையில் வீறிட்டு எழுந்துள்ள மாணவர் போராட்டத்திற்கு உண்மையான சோதனை காலம் இனிதான் ஆரம்பம். 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற வரையிலாவது இந்த போராட்டக் கனலைத் தொடர்ந்து உறுதி குறையாமல், வன்முறையின்றி, எப்படி நடத்தி செல்ல போகிறார்கள் என்று நான் உண்மையிலேயே கவலையுற்று இருக்கிறேன். அப்படி நடந்தால், ஈழம் கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால்,  தமிழகத்தை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக  மாறி மாறி ஆட்சி புரிந்து வரும் திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து விடுதலை பெற வழி கிடைக்கும். அதன் வழியாக தமிழகத்திற்கு புதிய எதிர்காலம் பிறக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

மாணவர் போராட்டத்தினால், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றம் வரும் என்று நான் எண்ணியிருக்க வில்லை. ஏனென்றால், தீர்மானத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய மத்திய அரசு, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அப்படி ஒரு நிலை 2008ல் இருந்தது. ஆனால் அன்று இப்படிப்பட்ட ஒரு மாணவர் எழுச்சியோ, தமிழக கட்சிகளின் எழுச்சியோ இல்லாமல் போனதால் தான்,  இலங்கையில் 'இனப்படுகொலை' எந்தவொரு அச்சமோ, மன உறுத்தலோ இன்றி செய்து முடிக்கப்பட்டது. 

திமுகவிற்கு 2ஜியும், அதில் மாட்டிக் கொண்டுள்ள திமுக அமைச்சர்களை விடுவிப்பதும், தமிழகத்தில் தங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதே 2008 - 2009ல் முதன்மையாகப் பட்டது. அவர்கள் அதிமுகவைத் தவிர யாருடைய கேள்விக்கோ, போராட்டத்திற்கோ பயப்படாமல் இருந்தார்கள். அதற்கு ஏற்றார் போல், அதிமுகவும் "போர் என்றால் மக்கள் செத்துப் போகத் தான் செய்வார்கள்" என்று ஒரு அறிக்கை வெளியிட்டது திமுகவிற்கு வசதியாகப் போய்விட்டது. அதைத் தான் இன்று வரை ஜெயலலிதாவிற்கு எதிராக அரசியல் செய்ய பயன்படுத்துகிறார்கள். "சரி! அதிமுக தான் அவ்வளவு மோசம் தான்! நீங்க என்ன செஞ்சீங்க" என்றால் "நாங்கள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினோம்" என்று சொல்கிறார்கள்! ஆட்சியில் அதிகாரத்தில் இல்லாத சாதாரண மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட நடத்துவது தான் வன்முறையில்லாத மனிதச்சங்கிலி போராட்டம். அதையே ஆட்சியிலும், அதிகாரத்திலும், அமைச்சரவையிலும் பங்குப்பெற்ற திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் செய்யும் என்றால், இவர்களை ஆட்சியில் அமர்த்துவதால் தான் என்ன பலன்??

இப்படியெல்லாம் சொல்வதால் அதிமுகவை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலுக்கு முன்னர் வரை, கூடங்குளம் போராட்டகாரர்களை ஆதரித்து விட்டு, வெற்றிப் பெற்றபின் அவர்களுக்கு எதிராக அடக்குமுறையை அவிழ்த்து விட்டது அதிமுக தலைமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மாதங்கள் / வருடங்கள் எல்லாம் வேண்டாம், சில மணி நேரங்கள் சுயமாக இணையத்தில் ஆராய்ச்சி செய்தால் போதும், அணு கழிவுகளைப் பாதுகாக்கும் வழிமுறை உலகில் எங்குமே இன்று கிடையாது என்று மேல்நிலைக் கல்வி (+2) படித்துள்ள அனைவருக்குமே புரிந்து விடும். இன்று அணு உலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நாடுகள் அனைத்தும் அணுக்கழிவுகளை மண்ணிற்கு அடியில் புதைத்து வைத்து அதன் கதிர் வீச்சுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கின்றனர். இதைப் போன்று தான் இந்தியாவிலும் செய்ய போகிறார்களா என்றால் பதிலில்லை. உச்ச நீதிமன்றம் போய் கேட்டபின், கர்நாடகத்தில் உள்ள காலாவதியான கோலார் தங்க சுரங்கங்களில் அணுக்கழிவுகளைப் புதைப்போம் என்றார்கள். கர்நாடக மக்கள் எதிர்ப்பைக் காட்டி கொந்தளித்தவுடன், கோலார்  தங்க சுரங்கங்களைப் பயன் படுத்த போவதில்லை என்று சொல்லி விட்டார்கள். இன்று வரை அணுக்கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவே என்னுடைய முதற் காரணம் அணு உலை வேண்டாம் என்பதற்கு. (அணு உலை மின்சாரம் பற்றி தனியாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.) ஆனால் இதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அணு உலையை எதிர்த்து போராடும் மக்களின் மீது அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேப் போன்று தான், இன்று மாணவர் போராட்டத்தைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அரசு, நாடாளுமன்ற தேர்தலில் வாகை சூடிய பின்னர், மாணவர்களைப் பந்தாடினால் என்ன செய்ய முடியும்? 

மேற்கூறியவை எல்லாம் சான்றுகள் தான். இதே நிலைமை தானே! நாளை தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினை என்று வரும் போதும்? பதவியும் பணமும் வருவதாக இருந்தால் நாங்கள் கொள்கைகளையும் தமிழக மக்களின் நலனையும் அடகு வைப்போம் என்று இருக்கும்  திமுக / அதிமுக கட்சிகளைத் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதேயே பல ஆண்டுகளாக என்னுடைய பதிவுகளில் நான் எழுதி வந்துள்ளேன். 



கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு நாளும் செய்திகளில் பார்த்தால், இலங்கை தொடர்பான திமுகவின் அறிக்கைக்கும், அதிமுகவின் அறிக்கைக்கும் மாற்றம் இருப்பதாகவே தெரியவில்லை. இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருப்பது போல் அவ்வளவு ஒற்றுமை!!

1. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு, தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும், பன்னாட்டு விசாரணை தேவை.
2. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாது
3. தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானங்கள்
4. ..

ஏன் இந்த ஒற்றுமை? நம்மிரு கட்சிகளைத் தவிர, தமிழக அரசியல் களத்தில் மூன்றாவதாக, மாணவர்கள், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து , எந்தவித ஆதாயமுமின்றி சுயநலமில்லாமல், ஒன்று கூடியதே காரணம். மக்கள் ஒன்றுப்பட்டு விட்டால், கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, அதைத் தீர்ப்பதற்கான நலப்பணிகளிலும், மக்களுக்கு ஆதரவான அறிக்கைகள் வெளியிடுவர் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். இந்த போராட்டம் தங்குதடையின்றி, எந்தவித நிறுத்தமும் இல்லாமல் தொடர வேண்டும். அப்படித் தொடரும் பட்சத்தில், திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வேறு வழி இருக்காது. மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்களும் குரல் கொடுக்க வேண்டி இருக்கும், தீர்வு காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை தங்கள் நிலையிலேயே தொடர்ந்தார்கள் என்றால், மக்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவார்கள். அதை முதல்வர் புரிந்து இருப்பதையே அவருடைய IPL பற்றிய இன்றைய அறிக்கை பறைசாற்றுகிறது.

இதைப் போலவே, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும் மாணவர்கள் போராட ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கும். இல்லையென்றால் தமிழகத்து மக்கள் தங்களின் அன்றாட பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவர். காலப்போக்கில் போராட்டம் நீர்த்து விடும். அதோடு  அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் மாணவர்கள் வேறு ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்காகப் போராடும் வரை தான் அமைதியாக இருப்பர். இங்கேயே நடக்கும் பிரச்சினைகளுக்காகப் போராட ஆரம்பித்தால், அது அவர்களின் இடத்தை தமிழக அரசியலில் இருந்து மறைய செய்யும் முயற்சி என்பதால், பல்வேறு சூழ்ச்சிகள் செய்து முறியடிக்கக்  கண்டிப்பாக முயல்வர். அரசாங்கம் அடக்குமுறையை முடுக்கி விடலாம். கல்வி பாதிக்கப்படலாம். பிற கட்சிகள் போராட்டங்களுக்கு அரசியல், சாதி, மத சாயங்கள் பூசி கெடுக்கலாம். அவர்களிடம் எண்ணற்ற வழிகள் உண்டு. எனினும், இன்றைய தருணம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அருகிலேயே நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால், மாணவர்களுக்கு எதிராக செயல்படுவது தங்கள் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டு கொள்வது போல் என்பது அவர்களுக்கு தெரியும். மாணவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காகப் போராடினால், தமிழகத்திற்கு கண்டிப்பாக ஒரு புதிய எதிர்காலம் தொடங்கும்.

கடைசியாக, மாணவர்கள் நீங்கள் அனைவரும், எங்களுக்காக போராடுகிறீர்கள். அமெரிக்காவில் இருந்து கொண்டு, தமிழக பிரச்சினைகளுக்காக இணையத்தில் பதிவு செய்வது, வறுமையினால் படிக்க முடியாமல் இருக்கும் சிலருக்கு பண உதவி மட்டுமே எங்களால் முடிந்த சமூகப்பணி. எழுதும் போதே வெட்கப்பட்டுக் கொண்டே தான் எழுதுகிறேன்.  மனதிற்குள் அரசியல்வாதிகளைப் பற்றி எண்ணற்ற எரிச்சல்கள் இருந்தாலும் தெருவில் இறங்கி போராடாமல், கோழையாக வாழும் எங்களைப் போன்றோர் சார்பாக நீங்கள் போராடுகிறீர்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் போராடியிருந்தால், இன்றைய அவல நிலைமை இல்லாமல் போயிருக்கும். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஆனாலும்  உங்களுக்கு நன்றி சொல்லப் போவதில்லை. இது சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமை. நாங்கள் தான் கடமைத்தவறி பொறுப்பற்று போனோம். நீங்கள் கடமையறிந்து போராடுவது மிக்க மகிழ்ச்சி. எந்த விதமான இன்னல்கள் வந்தாலும் இந்த போராட்டம் தொடர வேண்டும். மீண்டும் இப்படி ஒரு எழுச்சி வருவது கடினம். எனவே, இது தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு அமைய வேண்டும் அதற்கு மாணவர் புரட்சி வித்திட்டது என்று தமிழக வரலாறு எழுதப்பட வேண்டும்....

Monday, February 11, 2013

முகத்தில் அறைவது எப்படி?

பொதுவாக உடனுக்குடன் பதிவுகள் எழுதும் பழக்கம் கிடையாது எனக்கு. ஆனால் இன்றைய நீயா நானா நிகழ்ச்சி பார்த்தப்பின் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற உந்துதல். இன்றைய கல்லூரி மாணவர்கள் / மாணவிகளுடன் தமிழகத்தின் பிரபலமான சில சமூக சிந்தனையாளர்கள் பங்குபெற்ற ஒரு விவாதமே இந்த வார நீயா நானா. மாணவ சமுதாயத்தின் விழிப்புணர்வை மதிப்பீடு செய்வதே நிகழ்ச்சியின் நோக்கம். அந்த நிகழ்ச்சியைப் பற்றியதே இந்த பதிவு.



தொலைத்தொடர்பும் அதன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானமும் அதிகரித்து உள்ள இன்றைய சூழலில், யாரிடம் இருக்கிறதோ இல்லையோ, எப்பொழுதும் facebookம், IPhoneனுமாய் இருக்கும் மாணவ மற்றும் இளைய சமுதாயத்திடம், சமூக விழிப்புணர்வு அதிகம் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படும். ஆனால் அப்படி இல்லை என்று எனக்கு முன்னமே தெரியும், என் சொந்த அனுபவங்களில் இருந்து. இன்று நீயா நானாவில் நடந்ததைப் போன்று நான் ஏற்கனவே நிறைய பார்த்து இருக்கிறேன். உடனே ஞாபகம் வருவது தான் கீழே:

2008ல் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது, நண்பர்கள் இலங்கைப் போரைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு வாக்கெடுப்பு செய்தோம். அந்த வாக்கெடுப்பு எல்லாருக்கும் அனுப்பப்பட்டது என்றாலும், அதில் பங்கேற்றது வெறும் 18% பேர் மட்டுமே. அதிலும் 7% பேர் "நான் இதைப் பற்றி கருத்து ஏதும் கூற இயலாது ஏனென்றால் அந்த பிரச்சினை என்னவென்றே எங்களுக்கு தெரியாது" என்று வாக்கு அளித்தனர். நண்பன் ஒருவன் "இதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எனக்கு விருப்பம் கிடையாது, இது போன்ற அஞ்சல்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று தாழ்மையுடன் கோரிக்கை அனுப்பி இருந்தான் :). 

மேற்சொன்ன செய்தியைப் பகிர்ந்து கொள்வது இலங்கைப் போரில் எந்த பக்கத்தையும் ஆதரித்து பேசுவதற்காக அல்ல. ஏறத்தாழ 20 - 25 வருடங்களாக இந்தியா மற்றும் தமிழகம் பங்குப்பெற்று வரும் ஒரு பிரச்சினையில் கருத்து சொல்வதற்குத் ஒன்றும் இல்லை அல்லது விருப்பமே இல்லை என்பதை பாமர மக்கள் சொன்னால் விட்டு விடலாம் ஆனால் நாட்டின் தலையாய பொறியியற் கல்லூரியில் ஒன்றில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூறினால் அதை விட அபத்தம் ஒன்று இருக்கிறதா? "எனக்கு தேவையான பணத்தை என் வேலை கொடுக்கிறது, நான் அதைச் செய்கிறேன். நான் ஏன் பிறர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கருத்து கூற வேண்டும்" என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது. இப்படி நான் ஏற்கனவே சமுதாயத்தைப் பற்றி அறிந்து மனம் வெம்பி போயிருந்த சம்பவங்களை ஒத்து இருந்தது இன்றைய நீயா நானா. என்னுடைய புலம்பல்களுக்கு ஒரு துணை சேர்ந்தது. 
  • தமிழ் மீனவர் பிரச்சினை பற்றி, "எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. மீன் கடையில் வாங்குவோம், சாப்பிடுவோம்"
  • தமிழ் இலக்கியம் படித்து கொண்டிருக்கும் முதுகலை மாணவர் ஒருவரால் சமகால தமிழ் எழுத்தாளர்கள் 3 பேரைச் சொல்ல முடியாத நிலை, 
  • தமிழ் நாளிதழ்கள் படிப்பவர்களைப் பிற மாணவர்கள் கேவலமாக பார்க்கின்றனர் என்ற ஆங்கில மோகம்,
  • ஊடகங்களுக்கு அடிமையாகி, ஊடகத்தால் எந்த கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறதோ அவையே உண்மை என்றெண்ணுவது,
  • எல்லாருடைய நண்பர்களும் டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக இருப்பது,
  • கூடங்குளத்தைப் பற்றிய பார்வையில் தெளிவின்மை,
  • எந்த அரசியல் கட்சிக்கு உங்கள் ஆதரவு என்றால், வெகு எளிதாக "No Idea", 
எனத் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் தங்கள் புரிதலை வெளிப்படுத்தி, வந்திருந்த பல பிரபலங்களை இன்றைய இளைய சமுதாயத்தினர் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அதிர்ச்சி என்று சொன்னால் சாதாரணமாக போய்விடும். சமுதாய பிரச்சினைகளைப் பற்றிய அவர்களுடைய ஞானம் தமிழகத்தின் வளமான எதிர்காலத்தின் முகத்தில் அறைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  

நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீட்டுக்குப் போனவர்கள் உடனே இந்த பிரச்சினைகளைப் பற்றிய கட்டுரைகளை எடுத்து படித்து இருப்பார்களா என்றால் சந்தேகமே! கிடைக்காமல் போனதால் தான் படிக்காமல் விட்டு விட்டார்கள் என்று நாமே கொண்டு போய் கொடுத்தாலும் அவர்களை வாசிக்க வைத்து புரிய வைக்க முடியும் என்று நான் எண்ணவில்லை. ஏனென்றால் ஓரே நாளில், ஓரே நிகழ்ச்சியில் மாறுவதற்கு மந்திரங்கள் ஒன்றும் நம்மிடம் கிடையாது. அதோடு எந்த செயலையும் செவ்வனே செய்வதற்கு ஆர்வம் என்பது  இயல்பாகவே இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது.

தேர்தலில் ஓட்டு போட வயது ஆகிவிட்ட பிறகும் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதையே சொல்லத் தெரியாமல் இருக்கும் இளைய சமுதாயத்தை ஆள ஒழுக்க சீலர்களா வருவார்கள்? கல்வியை நற்சிந்தனைகளை வளர்க்கும் மார்க்கமாக எண்ணாமல், பொருளீட்டும் கருவியாகப் பார்க்கும் இந்த நாடும் மாநிலமும் இன்னும் கெட்டுப் போகும். எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு தவறுகள் ஒரு நாள் எல்லை மீறிப் போகும் போது, இந்த நிலைமை மாறும். அதுவரை இப்படி தான். மாற்றி மாற்றி நிகழ்ச்சி நடத்தி நம் முகத்தில் நாமே அறைந்து கொள்ள வேண்டியது தான்!!


நிகழ்ச்சியின் உரலி : http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc

Thursday, February 07, 2013

நிஜரூபம்

படம் பார்த்து ஒரு வாரம் ஆகப்போகுது என்றாலும் தமிழ் நாட்டில் வெளியிட்ட பிறகு தான்  அதைப் பற்றிய இந்த பதிவை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். படம் தமிழ் நாட்டில் வந்தாச்சு!!!

படத்தைப் பத்தி சொல்லனும்னா, விஸ்வரூபத்திற்கான பெயர் காரணம் தொடங்கி, 3 மாறுபட்ட கதாபாத்திரங்கள், 2 வகையான நடிப்பு, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தமிழ் படங்களில் புகுத்தியது, ஆப்கானிஸ்தான் மலைப்பிரதேசங்களின் கலை வடிவமைப்பு, முதல் மற்றும் ஒரே சண்டைக்காட்சி சீக்கிரமே முடிந்து விட்டதே, மீண்டும் காணக் கிடைக்காதா என்ற ரசிகனின் மனதைப் புரிந்துக் கொண்டு அதை மறுபடியும் காட்டுவது, ரசிக்கும்படியான இந்து கடவுள்களைப் பற்றிய துணுக்குகள், படத்திற்காக தனியே கதக் கற்று ஒரு முழு பாடலுக்கு ஆடியிருப்பது என  சொல்லிக் கொண்டே போகலாம். கமலின் உழைப்பு வியக்க வைக்கிறது.

படத்தில் தாலிபான்களே அமெரிக்க இராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை கொல்ல மாட்டார்கள் என்று சொல்வதும், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக ஒரு பெண் / குழந்தையை கொன்றதற்காக வருத்தப்படுவதாக காண்பிப்பதும்!! ஏன் இந்த அமெரிக்க துதிபாடல்???... ஹிரோஷிமா மற்றும் நாகசாகில அணுகுண்டு போட்டது எல்லாம் வேற்றுகிரகவாசிகளா?? புரியவில்லை...

தசாவதாரத்தில் முதல் 30 நிமிட காட்சிகள் ரொம்ப நல்லா இருந்ததுனு நிறைய பேர் சொன்னாக்கூட, அந்த காட்சிகள் எதுக்குனு கேட்டவங்க தான், அதை நல்லா இருந்ததுனு சொன்னவங்களை விட அதிகம். அதே மாதிரி தான் இந்த படத்திலேயும் நிறைய காட்சிகள் பார்க்க பிரமிப்பாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக புரியவில்லை. வீட்டுக்கு வந்து நானும் என் மனைவியும் ஒரு group discussion அளவுக்கு பேசினப்புறம் தான் அதில் இருக்கின்ற நுணுக்கம் புரிகிறது. படம் பாத்து முடிஞ்சதும் எனக்கு உடனே தோன்றியது இதுதான்... இந்த படத்தை தமிழ் நாட்டில் எப்போதும் போல வெளியிட்டு இருந்தாலே, படம் இன்னொரு ஹேராம் ஆகியிருக்கும். அதாவது படம் பப்படம் ஆகியிருக்கும். ஏனா படம் எல்லாருக்கும் புரியுற மாதிரி கதை சொல்லவில்லை. அப்படி சொன்னா யாரும் பேசாம போயிடுவாங்கனு ஒரு வேளை கமலே அப்படி எடுக்கறாங்களானு தெரியலை.

கே.பாலச்சந்தர், ஆர்.சி.சக்தி (மனிதரில் இத்தனை நிறங்களா, சிறை) போன்றவர்களிடம் பயின்றதால் கமல் இப்படி இருக்கிறார் என்று புரிகிறது. ஆனால், அவர்கள் எடுக்கும் கதைக்களங்கள் வேண்டுமானால், காலத்தை வென்றதாக புரட்சிக்கரமாக இருக்குமே தவிர கதை சொல்லும் விதம் எளிதாகவே இருக்கும். ஆனால் கமலிடம் இரண்டுமே காலத்தை தாண்டி இருக்கிறது. இதை கே.பாலச்சந்தரே ஒரு முறை மேடையில் கமலுக்கு சொல்லி இருக்கிறார். கமல் நல்லா படிக்கிற பையனா இருக்கலாம். ஆனால் ஆசிரியர் வேலைக்கு வந்த அப்புறம் விஷயம் தெரிந்தால் மட்டும் போதாது. அதை நல்லா சொல்லிக் கொடுக்கவும் தெரியணும். இல்லாட்டி ஆசிரியர் வேலையில் முத்திரை பதிக்க முடியாது. இதை கமல் புரிந்துக் கொள்ள வேண்டும். 

மேலும் விஸ்வரூபத்திற்கு 2 பகுதிகள் இருப்பதால் சில காட்சிகளை கமல் 2ஆம் பகுதிக்கு ஒதுக்கி இருக்கலாம். எனவே படம் பார்ப்பவர்களுக்கு இது 2ஆம் பகுதிக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த பகுதியில் வரவில்லையா அல்லது கமலே சொல்வதற்கு மறந்துவிட்டாரா என்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக  இந்தப்படத்தில் ஆண்டிரியா யார், ஏன் தீவிரவாதிகளின் திட்டம் தெரிந்தும் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்காமல் இருக்கிறார்கள் மற்றும் பல...

தசாவதாரம் போல தனி டிராக் காமெடியோ, டூயட்களோ, மற்ற பல ஜனரஞ்சகமான விஷயங்கள் எதுவும் இந்த படத்தில் கிடையாது. எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஜனவரி 25ல் வெளியாகி இருந்தால், படம் வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம் தான்.




அப்புறமா இந்த தடை... 

1. பொதுவாக இந்திய படங்களில் தீவிரவாதத்தைப் பற்றி காண்பிக்கும் போது, எல்லா மதத்தினைச் சேர்ந்தவர்களும் அதற்கு பங்களிப்பதாக தான் காண்பிப்பார்கள். உதாரணமாக, 1999ஆம் ஆண்டு வெளிவந்த Sarfarosh என்ற இந்தி படமும் தீவிரவாதம் பற்றியது தான். அந்த படத்தில் தீவிரவாத முயற்சியின் மூளையாக இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய கஜல் பாடகர், பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் கடத்தி வருபவர்கள் இஸ்லாமியர்கள் என்று காண்பித்தாலும், அதை இந்தியாவில் வாங்கி விற்பது இந்துக்களாகவும், பயன்படுத்துபவர்கள் இந்திய நக்சலைட்டுகளாகவும், இந்த தீவிரவாத முயற்சியை முறியடிப்பத்தில் ஒரு இஸ்லாமியர், இந்து என இரண்டு மதத்தினரும் இருப்பதாக காண்பித்து, தங்களின் நடுநிலையை நிரூபித்து இருப்பார்கள். எனவே விஸ்வரூபத்தில் இஸ்லாமியர் நிறைய இருக்கிறார்கள் என்பதை விட இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் இல்லாமல் போனது தான் பிரச்சினையின் உண்மையான  ரூபம். ஹேராம் இந்து தீவிரவாதிகளைப் பற்றிய படம். ஆனால் அது 1940களில் நடந்தது போல் காண்பித்ததால் இந்த மாதிரி ஒரு பிரச்சினை வரவில்லை. ஆனால் இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நடப்பது போல் இருப்பதால் தான் கூடுதல் எதிர்ப்பு. 

2.  என்ன பண்ணுவது?? விஸ்வரூபத்தின் கதை அப்படி. பாதி படம் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானிலும் உண்மையாகவே மற்ற மதத்தினர் இல்லை என்றே  நினைக்கின்றேன். எனவே இந்துக்கள் மற்றும் பிற மதத்தினர் அங்கு இருப்பதாகச் சொல்லி அவர்களும் தீவிரவாதத்தில் ஈடுபடுவது போல் காண்பித்தல் சாத்தியமில்லாதது. ஆகவே அங்கு நடக்கும் நல்லதாகட்டும் கெட்டதாகட்டும் அங்கு இருக்கும் மக்கள் செய்வதாகத் தான் காண்பிக்க வேண்டும். அந்த மக்கள் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களாக போய்விடுவதால், இது இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாக தெரிகிறது.

3.    படம் ஒட்டுமொத்த இஸ்லாமியருக்கு எதிரானது கிடையாது என்பதைச் சொல்வதற்காகவே, படத்தின் நாயகனை ஒரு இந்திய இஸ்லாமியராக காட்டி, அவன் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாகவும், படம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரவாதத்தைப் பற்றியது மட்டுமே என்று சொல்ல முனைந்து இருக்கிறார். ஆனாலும் அது போதாது, எங்களைப் பற்றி படம் தவறாகத் தான் சித்தரிக்கிறது என்று இஸ்லாமிய சமூகம் கருதுகிறது. எப்படி கமல் தன் படத்தில் தான் நினைத்தைக் கூற முனைந்து இருக்கிறாரோ, அது போல் இஸ்லாமிய சமூகம் தங்கள் சார்பு காரணங்களைக் கூறி படத்திற்கு தடையை வலியுறுத்த கண்டிப்பாக உரிமை இருக்கிறது. தாங்கள் தினமும் செய்யும் தொழுகையைத் தீவிரவாதிகள் அணுகுண்டை வெடிப்பதற்கு முன்னர் செய்வதாகக் காட்டினால், கண்டிப்பாக இஸ்லாமிய சமூகம் எதிர்க்கத் தான் செய்யும்.

4.  இதை எப்படி கையாள்வது?? இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத்தை பற்றிய படம் எடுக்காமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அது நியாயமாக இருக்காது. உண்மையாகச் சொல்லப் போனால் கமலின் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ விமர்சிக்கத் தவறியதில்லை. அண்மையில் வெளிவந்த கமலின் எல்லா படத்திற்கும் ஏதோ ஒரு சமூகம் எதிர்த்து போராடி இருக்கிறது. நீதிமன்றத்தை நாடி தடை விதிக்க சொன்னார்கள். நீதிமன்றம் முடியாது என்று சொன்னவுடன் பிரச்சினை முடிந்து விட்டது. அது தான் சரியான அணுகுமுறை.

5.   அதை விடுத்து அரசு தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தடை விதித்து, பிரச்சினையை ஊதி பெரிதாக்கி விட்டது. இப்பொழுது இரு தரப்புக்கும் நடுவில் ஆவன  செய்த பேச்சுவார்த்தையை தடை விதிக்கும் முன்னரே செய்து இருக்கலாமே.... தமிழக முதலமைச்சரின் அரசியல் சாதுரியம் தெரிந்தது தான். இந்த பிரச்சினை மூலமாக அவர் 1 கல்லை வைத்து 3 மாங்காய்கள் அடித்து இருக்கிறார். 
  • இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது
  • மக்களிடம் தமிழக சட்டம் ஒழுங்கில் தனக்கு இருக்கும் அக்கறையைக் காண்பித்து நற்பேர் சம்பாதித்தது
  • கமல்ஹாசனின் பிரதமர் பற்றிய பேச்சு மற்றும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக ஜெயலலிதா பழி வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால், அப்படி ஒரு பேச்சு எல்லா பக்கமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இனிமேல் தயாரிப்பாளர்கள் வேறு ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு படத்தை விற்பார்களா என்ன?

6.        அதேப் போல், கமல்ஹாசனின் தோல்விப்படமாக இருந்திருக்க வேண்டிய விஸ்வரூபமும் இப்பொழுது ஓடாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனா தேவையில்லாம அளவுக்கு அதிகமான பரபரப்பை படத்திற்கான தடை ஏற்படுத்திவிட்டது தான்.

7.  அப்படியானால் இந்த பிரச்சினையினால் உண்மையாக பாதிக்கப்பட்டவங்க யார்?? இஸ்லாமிய சமூகம் தான். 

"நீதிமன்றம் தடை விதிக்கலையா? நாங்கள் படத்தை எதிர்க்கிறோம். இஸ்லாமியர்களே, படத்தைப் பார்க்காதீர்கள்"

என்று ஒரு அறிவிப்பு விட்டிருந்தால் போதும். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மாதிரியும் ஆகியிருக்கும். படமும் ஓடியிருக்காது. இஸ்லாமிய சமூகத்திற்கு சாதகமான ஒரு சூழ்நிலையும் இருந்து இருக்கும். அவர்களுடைய அகிம்சை முறையிலான எதிர்ப்பும் ஆதரவு பெற்றிருக்கும். கண்டிப்பாக அனைத்து எழுத்தாளர்கள் முதற்கொண்டு முற்போக்குவாதிகளும் பாராட்டியிருப்பார்கள்.

கடைசியா என்ன ஆகி இருக்கு??? 

ஆனால், இரு வாரங்களாக பல பிரபலங்களின் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், நான் சொன்ன கருத்தை நீ ஏற்கவில்லையா, உடனே உன் வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவேன் போன்ற கருத்துக்களினால் தேவையில்லாமல் ஊடகங்களில் கருத்து மோதல்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. இப்படி தவறாக பேசுவது ஏதோ பி.ஜே மட்டும் தான் செய்தார் என்று நினைத்து விடாதீர்கள். அங்கிங்கெனாதபடி எல்லா மதத்தினரும் எல்லா சமூகத்தினரும் செய்தனர். எனக்கு தெரிந்த facebook நண்பர்கள் உட்பட. இணையத்தில் இந்தப்படம் தொடர்பான பதிவுகளின் பின்னூட்டங்களைப் படித்தால் தெரியும். 

இஸ்லாமிய சமூகம் மீது இருக்க வேண்டிய அனுதாப அலை கமல் பக்கம் திரும்பிடுச்சு. அதுமட்டுமில்லாம,  இப்படிப்பட்ட ஒரு தடை விதிக்கும் முறையை ஆரம்பித்து வைத்து ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகி, பேரையும் கெடுத்துக் கொண்டாச்சு, படத்திலேயும் ஒரு காட்சியும் நீக்கப்படல, படமும் வெளிவந்தாச்சு,, இப்போ வெற்றிப்படமாகவும் ஆகப்போகிறது. 

எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டிய தோத்துட்டு வந்த இந்தியன் கிரிக்கெட் அணி நிலைமை தான் இந்த படத்தை எதிர்த்து போராடியவர்களின் இன்றைய நிலைமை...