விகடன் குழுமத்திற்கு,
விகடனை வருடங்களாக வரி விடாமல் படித்து விடும் வாசகன் நான். புதன், வியாழன் மற்றும் சனி காலையில் எழுந்தவுடன் முதலில் நான் செய்வது, கணிணியில் விகடன்.காம் போய் அந்த வார இதழைப் படிப்பது தான். என் மனைவியிடம் கூட பல நேரங்களில் அதற்காக திட்டு வாங்கியதுண்டு. அப்படி ஒரு வாசகனாக நான் இருப்பதற்கு முதற் காரணம், விகடனில் வரும் கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிகள் மற்றும் செய்திகளின் தரம் மட்டுமே. கருத்துக்கள் சரியோ தவறோ ஆனால் தரம் குறைவாக இருந்ததாக நான் கண்டதில்லை. அப்படிப்பட்ட எண்ணம் வைத்துக் கொண்டிருந்த எனக்கு தங்களின் புதிய வரவான டைம்பாஸ் இதழில் வரும் கிசுகிசு பகுதி அந்தத் தரத்திற்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்பதைக் கூறவே இந்த பதிவு.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த "பாய்ஸ்" படத்திற்கு விகடன் விமர்சனக் குழு கொடுத்த மதிப்பெண் "சீ! இது ஒரு படமா" என்பது. அதே மதிப்பீடு தான் "துள்ளுவதோ இளமை" படத்திற்கும். "துள்ளுவதோ இளமை" இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் படங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிந்தது தான். ஆனால் பிரம்மாண்ட வெற்றிப்பட இயக்குனர் ஷங்கர், விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா போன்றோர் பங்குப்பெற்ற "பாய்ஸ்" படத்திற்கும் இப்படி ஒரு மதிப்பீடு கொடுத்த போது தான் விகடனின் தரம் என்ன என்பது எனக்கு புரிந்தது. இத்தனைக்கும் அந்த காலக்கட்டத்தில் சுஜாதா விகடனில் "கற்றதும் பெற்றதும்" எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் பாரபட்சமில்லாமல், அப்படத்திற்குக் கொடுத்த மதிப்பீட்டைப் பார்த்து, ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
இது எல்லாவற்றிற்கும் திருஷ்டி வைத்தாற் போல் இருக்கிறது டைம்பாஸ் கிசுகிசு பகுதி. போன வாரம் தான் முதன் முதலாக படிக்க நேர்ந்தது. படித்த செய்தி கீழே:
"பொள்ளாச்சிப் பக்கம் ஒரு ஷூட்டிங். எக்ஸ் அங்கு ஆஜராகி இருந்தார். நடிப்புக்கு இலக்கண மானவரின் வாரிசுதான் ஹீரோ. தாடிக்காரர் இயக்குநர். இந்தப் படத்தின் ஹீரோயின் அப்போது பரபரப்பான நாயகியாக இருந்தார். நம்முடைய நிருபர் எக்ஸுக்கு இயக்குநர் நல்ல பழக்கம் என்பதால், நேரே அவர் தங்கி இருக்கும் அறைக்குச் சென்றார். அப்போது செல்போன் எல்லாம் வரவில்லை. ஹோட்டல் அறைக்குச் சென்றவர் கதவைத் தட்டலாம் என்று கை வைத்தால், அது தொட்டதுமே திறந்துகொண்டது. உள்ளே... அந்த மும்பைப் பைங்கிளியும் தாடி இயக்குநரும் எசகுபிசகாக இருந்தனர். அதிர்ந்துபோன எக்ஸ், அப்படியே ஓசைப்படாமல் திரும்பிவிட்டார். யாரோ வந்துபோன அரவம் உணர்ந்த இயக்குநர், எழுந்து வெளியே வர... அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல வணக்கம் போட்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார் நிருபர் எக்ஸ்!"
தெக்கத்திப் பக்க பேச்சாளர் அவர். மண் மணம் மணக்கப் பேசுவார். எக்ஸ் உடன் நல்ல பழக்கம். சும்மா வீட்டுக்குப்போன நிருபரிடம், ''ஒரு போட்டோவை என் இ-மெயில்லேர்ந்து எடுத்துத் தரணும். எனக்கு இந்த கம்ப்யூட்டர்ல அவ்வளவு விவரம் பத்தாது'' என்று அழைத்துப் போனார். பொதுவாக ஒரு போட்டோவை கம்ப்யூட்டரில் சேமிக்கும்போது, அதற்கு முன்பு எந்த ஃபோல்டரில் சேமித்தோமோ அதே இடத்துக்குத்தான் போய் நிற்கும். இந்த விவரம் அவருக்குத் தெரியவில்லை... பாவம். அவர் சொன்ன போட்டோவைச் சேமிக்க ரைட் கிளிக் செய்தால், அது போய் நின்ற ஃபோல்டர் முழுக்க... நிர்வாணப் படங்கள். எக்ஸுக்கு ஷாக். பேச்சாளருக்கு அதைவிட ஷாக். அந்த நேரம் பார்த்து நெற்றி நிறைய பட்டை வேறு போட்டிருந்தார். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ''தம்பி, நீங்க சின்னஞ்சிறுசுக. நாங்கல்லாம் வயசான கிழங்கட்டைங்க... இப்படிப் பார்த்துக்கிட்டாதான் உண்டு'' என்று நெளிந்து வளைந்து சிரித்தார்!
இந்த செய்திக்கு வந்துள்ள பின்னூட்டங்கள்:
கூடையில் என்ன பூ???
சின்ன தம்பி பட ஷூட்டிங்கா?
அது மட்டும் இல்லே ; கற்பை எதிர்த்து கோர்ட் படி ஏறியவர் ; தமிழ் நாட்டுப் பெண்களுக்கு 'கற்பு' சர்டிபிகேட் வழங்கியவர்.
மேற்காண்பது போன்று சினிமா உலகில் நடக்கும் திரை மறைவு வேலைகளை எட்டிப் பார்ப்பதே தவறு. எட்டிப் பார்த்த பின் அதை வெளிப்படுத்தி வியாபாரமாக்குவது விபச்சாரத்திற்கு ஒப்பாகும் என்றே நான் கருதுகிறேன். ஷங்கர், கஸ்தூரி ராஜா போன்றோர் எடுத்த படங்களுக்கும், இந்த செய்திகளுக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இப்படிப் பட்ட செய்திகளை வெளியிட்டு, அதை வாசிப்பவர்களின் மனதில் காட்சியாக மலரச் செய்து, அவர்களின் பாலுணர்வைத் தூண்டி, பொருளீட்ட வேண்டிய நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்? தமிழருவி மணியன், ராஜு முருகன்.. போன்றோர் விகடனில் எழுதிக் கொண்டிருக்கையில், இப்படிப் பட்ட ஒரு இதழ் உங்கள் குழுமத்தில் இருந்து வெளிவருவது நன்றாகவா இருக்கிறது? இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் ஆகாதா? ஒரு பக்கம் உண்மை, நேர்மை, நாணயம் என்று பேசி விட்டு அல்லது கட்டுரைகள் வெளியிட்டு விட்டு, மறுபக்கம் திரைப்படத் துறையினரின் அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தி வியாபாரம் செய்வது முரணாக இருக்கிறது. எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
"கள்வனின் காதலி" என்ற எஸ்.ஜே சூர்யா திரைப்படத்திற்கு விமர்சனம் வெளியிட்ட போது, கல்கி தன் காவியத்திற்கு வைத்த பெயரை, இந்த படத்திற்கு வைத்து கல்கியை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று வெளியிடப்பட்டு இருந்தது. அதே தான் நானும் கூற விழைகிறேன். விகடன் போன்ற ஒரு குழுமத்தில் இருந்து டைம்பாஸ் கிசுகிசு செய்திகள் வெளியிடுவது, இத்தனை காலமாக விகடனின் தரத்தைக் கட்டி காத்து வந்திருந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பலரின் உழைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்தை அவமானப்படுத்துவதற்கு இணையாகும் என்றால் மிகையல்ல. இந்த இதழை நிறுத்துவது பொருளாதார காரணங்களுக்காக முடியாதெனினும், குறைந்தபட்சம் இந்த பகுதியையாவது நிறுத்துவீர்கள் என்று எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
இப்படியாக ஒரு கடிதத்தை விகடனுக்கு மின்னஞ்சலில் தட்டி விட்டு ஏதேனும் நடக்கிறதா என்று பார்த்தேன். இந்த வாரம் நிருபர் எக்ஸின் குறிப்புகள் வரவில்லை. நிரந்தரமாக நிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் கிசுகிசு பகுதியும், லிட்டில் ஜான் என்ற பெயரில் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்குகளையும் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே ஏமாற்றம் தான். நமக்கு இந்த சமுதாயத்தின் மீது எந்த ஒரு கட்டுப்பாடுமே கிடையாதா? எந்தவொரு மாற்றம் வேண்டுமென்றாலும், மக்களைக் கும்பலாக சேர்த்து போராட்டம் நடத்தினால் தான் காதில் விழுமென்றால் கல்வி கட்டுரைகள் பதிவுகளினால் பயன் தான் என்ன? அதுவும் பவள விழா கொண்டாடிய ஒரு பத்திரிக்கையே தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள தயாரில்லை என்றால், பணத்திற்காகவும் ஓட்டுக்காகவும் அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை எங்கு போய் குறை சொல்ல?
பி.கு: விதண்டாவாதிகள் டைம்பாஸில் வந்த கிசுகிசுவை இங்கு வெளியிட்டு நான் விளம்பரம் தேடிக்கொண்டதாக நினைத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்தே இதை எழுதியிருக்கிறேன். ஆனால் வேறு வழி இல்லை. தவறு என்ன என்பதை சுட்டிக் காட்ட அதைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.