தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கான தொடர் அடையாளமே திமுக அதிமுக ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள். திமுக தலைமைக்கு ஒரு அரிய இடம் தமிழக அரசியலில் உண்டு. எந்த விதமான மோசமான உத்தியையும் அவர்கள் தான் முதலில் அறிமுகப் படுத்துவார்கள். நான் இப்போது நடப்பவற்றை வைத்து கூற வில்லை. கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே அப்படிதான்!
கேடு கெட்ட கூட்டணி அரசியல், மொழி உணர்வைத் தூண்டி அரசியலில் தன்னிடத்தை உறுதிபடுத்துதல், சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது (1967). மதுவை அரசாங்கமே விற்பது, ஊழல் (1967 - 1974), இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் (2006 - 2011) என தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து புற்று நோய்களுமே திமுகவின் முத்திரைகளே!
திமுகவின் இந்த போக்கினை, நியாயமாக மக்கள் எதிர்த்து இருக்க வேண்டும். ஆனால், மக்களோ, திமுகவை எதிர்த்த கட்சிகளோ, அதைச் செய்யாமல், அவர்களை அடக்க அவர்களின் பல்லையே பயன் படுத்தினார்கள். சினிமா மோகத்தை வைத்து அரசியல் வியாபாரம் பண்ணுவது என்னும் உத்தியைப் பயன்படுத்தி, எம்.ஜி.ஆர், திமுகவை தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சி பக்கம் எட்டி பார்க்க கூட விடவில்லை. அதைத் தான் இன்று ஜெயலலிதா செய்திருக்கிறார். கருணாநிதியின் இலவசங்களை தோற்கடிக்க தானும் இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார். தமிழகத்தின் நிலைமை ஆங்கிலத்தில் சொல்வதானால் ஒரு "catch 22" மாதிரி ஆகிப் போய்விட்டது.
கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா.
அரசியல்வாதிகளிடம் போய் கேட்டால், "மக்கள் இலவசங்களையும் ஓட்டுக்கு பணத்தையும் தான் விரும்புகிறார்கள். வரிசையில் நிற்க விரும்புவதில்லை. வேலை சீக்கிரம் ஆக வேண்டியதன் காரணமாக லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாங்கள் இலவசங்களை எதிர்த்தால் எங்களைத் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள். கூட்டணி வேண்டாம் என்று தனியாக நின்றால் புறக்கணிக்கிறார்கள். பின்னர் நாங்கள் என்ன செய்வது? இலவசங்களும் கூட்டணி தான் எங்களைக் காப்பாற்றுகிறது". அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மக்கள் தான் ஊழலையும் இலவசத்தையும் ஆரம்பிப்பதாக தெரியும்.
"ஊழலற்ற ஆட்சி என்பதே கானல் நீர். எதை வைத்து நம்புவது? போன வருடத்தில் மட்டும், ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் என கணக்கிலடங்கா பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சி புரிந்து தங்கள் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் செழிப்புற செய்திருக்கிறார்கள் தவிர சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன நடந்திருக்கிறது? யார் வந்தாலும் ஒன்று தான். கட்சியையோ அரசையோ நம்பி பயனில்லை. எங்கள் பணம் தான் எங்களைக் காப்பாற்றும். அதைச் சம்பாதிப்பது தான் எங்கள் குறிக்கோள். அதனால் தான் பணமோ பொருளோ எந்த வழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்." இது தான் மக்களின் எண்ணம்.
கேள்வி எண் 1) இதில் யார் முதலில் மாறுவது? மக்கள் மாற வேண்டுமா? இல்லை அரசியல்வாதிகளா? எப்படி மாற்றம் கொண்டு வருவது?
வியாபாரமும் சுயநலமே வாழ்வியல் நோக்கம்
எல்லாவற்றையும் வியாபாரமாகவும் பணமாகவும் பார்ப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம். மொழி உணர்வைத் தூண்டி தமிழ் உணர்வை ஒன்றுப்படுத்தியது திமுகவின் தவறில்லை. ஆட்சிக்கு வந்த பின் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது தான் தப்பு. இன்று வரை தமிழை ஆட்சி மொழியாக்க முடியாததும் அதற்கு முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பது தான் கோளாறு. அதை ஓட்டு சம்பாதிக்கும் உத்தியாக, ஆட்சிக்கு வர பயன்படும் ஒரு வழியாக்கியது தான் பிழை. அதனால் தான், "உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம் ஹிந்தி என்று எல்லா மொழிகளையும் படித்து விட்டு பல்லாயிரம் கோடி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், ஆனால் நாங்கள் தமிழ் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமா" என்று தமிழக மக்கள் கருணாநிதியிடம் கேட்கிறார்கள். தமிழ் மீதுள்ள பற்றால், சிலர் தமிழ் படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. "கற்றது தமிழ்" படம் பார்த்தீர்கள் தானே! பின்னர் தமிழ் படிக்க யார் வருவார்கள்?
+2 வில் பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும் நண்பர்கள் எனக்கும் உண்டு. இதே அவர்கள் பிரெஞ்சு மொழியில் மீதுள்ள ஆர்வத்தில் படித்தால் நாமும் ஆதரிப்போம். ஆனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாது என்று தானே படித்தார்கள். மாணவர்கள் படிப்பதையே வியாபாரமாக பார்த்தால், அவர்கள் நாளை அதிகாரிகள் ஆகும் பொழுது லஞ்சம் வாங்காமல் ஏதேனும் காரியம் செய்வார்களா?
அதே போல் தான் மதுவும் டாஸ்மாக் பிரச்சினையும். மது விலக்கு அமலில் இருந்த போதும், குடிப்பவர்கள் இருந்தார்கள் என்றாலும், ECR சாலையில் குடித்து விட்டு வண்டியோட்டி சாகவில்லை. எல்லாவற்றையும் விட மாணவர்கள் கையில் மது பாட்டில்கள் போனது தான் மிகப் பெரிய பிழை. கல்லூரியில் படிக்கும் போது, தன் சொந்த சம்பாத்தியம் இல்லாத போதும், குடித்து விட்டு வரும் மாணவர்கள் தமிழ் நாட்டில் உருவாகுவதற்கு அரசின் டாஸ்மாக் கொள்கைகளும், சாராயம் எளிதில் கிடைப்பதும் தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா? அரசு தொடங்கினாலும், மாணவர்கள் யோசிக்காமல் போவது ஏன்? இன்று பேஸ்புக்கில் திமுக அதிமுக வை விமர்சிப்பவர்கள் பலரும் தங்கள் கல்லூரி காலத்தில் சாராயம் குடித்து தவறான உதாரணமாக இருந்தே உள்ளனர். போதையில் அதி வேகமாக வண்டி ஓட்டி நண்பர்களிடம் தங்கள் பராக்கிரமத்தை காட்டி பெருமை பட்டுள்ளனர்.
கேள்வி எண் 2) 1967ல் மொழி போராட்டத்தில் தமிழுக்காக உயிர் விட்ட மாணவர்களின் சிந்தனை எப்படி இருந்தது? இன்று குடித்து விட்டு, பஸ் டே என்று பொது சொத்தை நாசமாக்கும் மாணவர்கள் எங்கே?
கடைசியாக...
அடிமைப் பட்டு கிடந்த நாம் விடுதலை பெறுவதற்கு, போராட்டத்தில் தங்களைப் பற்றியோ, பணம் சம்பாதிப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் ஈடுபட்டதே காரணம். ஜாலியன் வாலா பாக் படுகொலையில் உயிரிழந்த குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். அந்த குழந்தைகளுக்கு நாம் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம். விடுதலை போராட்ட காலத்திலும் அரசியலை தவமாகவும், அதில் ஈடுபடுவதையும் தியாகமாகவும் கருதிய இந்தியர்கள், தமிழர்கள் இன்று சுயநலமாகவும், வியாபாரிகளாகவும் மாறிவிட்டனர்.
தமிழ் நாட்டில் இந்தியாவில், ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. நான் கூறுவது தேர்தல் கட்சி அளவிலான மாற்றத்தைப் பற்றி அல்ல. சமுதாயம் அளவிலான மாற்றம். வியாபார நோக்கை விடுத்து, வாழ்வியல் முறைகளை வளப்படுத்தும் மாற்றம்.
தியாகமே மாற்றத்திற்கான முன்னுரை. அதை நாம் செய்யத் தான் வேண்டும். மாற்றம் எப்படி நிலையானதோ, அது மாதிரி தான் தியாகமும். அது நிலையானது மட்டுமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வியல் முறைகள் மனித சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் இருக்காது.
நண்பர்களே, இந்த தளத்தை ஒரு பொழுது போக்கும் இடமாக பார்ப்பவர்களே அதிகம். மாறாக இங்கிருந்து சிந்திப்பதற்கு பொருள் எடுப்பவர்கள் குறைவு. எனினும் இன்னும் சமுதாயம் மீதுள்ள நம்பிக்கையினாலும், எகிப்து புரட்சி கொடுத்த தைரியத்தினாலும் தான் இங்கு எழுதுகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு அமைப்பினை ஏற்படுத்தி மாற்றத்திற்காக பாடுபடலாம். கொள்கைகளை அமைத்து மக்கள் மற்றும் நம் பிரச்சினைகளுக்காக போராடலாம். ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி தியாகம் செய்ய வேண்டி இருக்க வேண்டும். உயிர் தியாகம் எல்லாம் இல்லை. உங்கள் பணத் தியாகமோ அல்லது நேரத் தியாகம் மட்டும் தான். இந்த மாற்றம் ஏற்படாவிட்டால், நம் குழந்தைகள் / அடுத்த தலைமுறை இந்த சமுதாயத்தில் படும் பாட்டை நாம் இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு பார்த்து, நிம்மதியில்லாமல் தான் சாக வேண்டியிருக்கும்.