மனிதாபிமானம் விலை போகாத நிலையில், பணம் மட்டுமே பிரதானம் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், சுதந்திர தினம் போன்ற சில விழாக்களில் தான் மக்களுக்குப் பொது நலம் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. அப்படி நம்பி என்னைப் போன்று IT துறையில் சம்பாதிக்கும் உங்களிடம் நான் வைக்கப் போவது ஒரு வேண்டுகோள்.
பெரும்பான்மையாக இன்று IT துறையில் வெற்றிக்கரமாக உள்ளவர்கள், ஏதேனும் ஒரு அரசினர் அல்லது அரசு உதவி பெறும் தனியார் பொறியியற் கல்லூரியில் தான் படித்து இருப்பர். அப்படி படித்து, கல்லூரியில் இருந்தே வேலை கிடைத்து, படிப்பு முடிந்த அடுத்த மாதமே 10,000க்கும் மேலாக சம்பாதித்து வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று, இப்போதைக்கு ஓரளவுக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பர். கண்டிப்பாக இதில் உங்கள் உழைப்பு அடங்கியுள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு நாம் மட்டுமே முழுக் காரணம் ஆகிவிட முடியாது. நாம் படிக்கும் போது அரசு நமக்காக கட்டணங்களைக் குறைத்து, வ்சதிகளைச் செய்து கொடுத்ததும் ஒரு காரணம். அதற்கு நாம் ஏதாவது ஒரு வகையில் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?
அது மட்டுமில்லை, இன்று IT துறையினரால் சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, ஆட்டோ வாடகை, பள்ளி கட்டணம் போன்ற அத்தியவாசிய தேவைகள் அளவுக்கு அதிகமாக விலை கூடி விட்டன. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கக் கூடிய நம்மைப் போன்றவர்களால், நடுத்தர மக்கள் படும் அவதி மிக அதிகம். இதனால், நம் மீது மிகுந்த கடுப்பில் (சென்னை மொழியில் சொல்வதென்றால் காண்டு) இருக்கின்றனர். ஆட்டோகாரர்கள் கூட "அது தான் 50000 வாங்குறீங்க லா சார், 10 20 எல்லாம் பாக்காதீங்க" என்று தான் சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விலைவாசி உயர்வினால் கல்வி ஒரு காஸ்ட்லி பொருள் ஆகி கொண்டே வருகிறது. இதற்கு மறைமுகமாக நாமும் ஒரு காரணம்.
இந்த நிலையைத் திருத்துவதோ, மக்களிடம் மனமாற்றம் கொண்டு வருவதோ, அந்நியன், இந்தியன் படத்தில் வருவதில் போல் அடித்து மரணபயத்தினால் புரட்சி ஏற்படுத்துவதோ முடியாத காரியம். ஆனால் ந்ம்மால் முடியும் காரியம் ஒன்று உள்ளது. அது கல்விக்கு உதவுவது.
எல்லார்க்கும் கல்வி என்பது பேச்சளவில் தான் உள்ளது இந்தியாவில். அது நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. ஆனால், கல்வி உதவி கேட்டு கிடைக்காமல், படிப்பை நிறுத்தும் மாணவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்கும் நியாயமாகப் பார்த்தால் அரசு உதவி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், அதிக மார்க் எடுத்து, அரசு கல்லூரியில் படித்தால் மட்டுமே உதவி எளிதாக கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் அரசு கல்லூரியில் படிக்க முடியாதே!!
பிற கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள், படிப்பைத் தொடர முடியாத நிலை பல மாணவர்களுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் போகும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவுவது நம்மால் முடியும் காரியம், அதோடு நமக்கு கல்வியைக் குறைந்த கட்டணத்தில் அளித்த அரசிற்கும், அதன் மக்களுக்கும் நாம் செய்யக் கூடிய நன்றிக்கடன். ஒரு வகையில் இது ஒரு இந்திய குடிமகனாக நம் கடமையாகும்.
இந்த சுதந்திர நாளில் நாம் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒரு ஏழை மாணவனின் கல்விக்காவது ஒவ்வொரு வருடமும் நாம் உதவி செய்ய வேண்டும். அப்படி ஒரு மாணவனின் தொடர்பு எனக்கு கிடைக்கவில்லை என்று சமாதானம் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இந்த வருடத்தில் உங்களிடமிருந்து உதவி ஒரு ஏழை மாணவனுக்குச் சென்றடைய வேண்டும். I.Tயில் இருக்கும் உங்களுக்கு வருட முடிவில் goalsக்கு எதிராக appraisal இருப்பது போல் இந்த உறுதிமொழி உங்கள் மனிதாபிமானத்திற்கு நீங்கள் set பண்ணிக் கொண்டிருக்கும் கோல். அடுத்த ஆகஸ்ட் 15ல் இதற்கு ஒரு appraisal வைத்து கொள்வோம்.
இதுவே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.
பி.கு: நீங்கள் எவ்வளவு தேடியும் ஒரு ஏழை மாணவன் கிடைக்க வில்லையென்றால், என்னை அணுகவும்.