மீண்டும் சிகாகோ சென்றேன் இரஜினியின் சிவாஜி பார்க்க !! படம் எனக்கு பிடித்து இருந்தது. 'அதிரடிக்காரன்' பாட்டு அட்டகாசம்... இரஜினி பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே சுமனிடம் பேசும் காட்சி அதிரடி... இது போன்று பல காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது.. சில logical (லாஜிக்கல் - இதற்கான தமிழ் வார்த்தை தெரிவில்லை) பேத்தல்கள் இருந்தன. ஆனால் அது இப்பொழுது எல்லா திரைப்படங்களிலும் இருக்கிறது. இரஜினி - ஷங்கர் படம் மட்டும் என்ன விதிவிலக்கா?
படத்தில் இரஜினியின் முயற்சிகளை முறியடித்து விட்டு, சுமன் சிரித்து கொண்டே இரஜினியிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. எல்லா வில்லத்தனங்களையும் செய்து விட்டு இரஜினிக்கு உதவி ஏதாவது வேண்டுமா என்று சுமன் கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது இரஜினி கோபப்பட்டு 'உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா' என்று கூறுவார்..
இதைப் போன்ற காட்சிகள் இதற்கு முன்னரே பல படங்களில் வந்து இருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு அக்காட்சிகளின் அழுத்தம் வெகுவாக புரியவில்லை.
ஆனால், இப்பொழுது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இதைப் போன்ற அனுபவங்கள் நிறைய சந்தித்து விட்டதால், அந்த காட்சியின் அழுத்தம் நன்றாகவே புரிந்தது. ஏன் இரஜினிக்கு அவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு எளிதாகவே உணர முடிந்தது. ஒரு மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மீண்டும் மீண்டும் தடுத்தால், அவன் தனது நேர்மையான பாதையில் தவறுவது மிகவும் எளிதாகிறது.
படத்திலும் இரஜினி அதையே செய்கிறார். அவ்வாறு செயல்கள் புரிந்து வெற்றி காண்பதாக இயக்குனர் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அதுவும் முடியாது.
ஆதலால், மக்கள் பொதுவாகவே இதைப் புரிந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் வாழ்வு செழிக்க என்ன தேவையோ அதைச் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். இதைத் தான் பலர் சுயநலம் என்றுக் கூறுகின்றனர். ஆனால், மக்களுக்கு வேறு என்ன தான் வழி இருக்கிறது?
உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?